படிக்கும் யாரும் கோப பட வேண்டாம் கதாநாயகியின் கோபத்திற்கு காரணம் உண்டு அது அவசிய கோபமே..,
“ஆண்களுக்கு பெண்கள் அடங்கிப் போகக் கூடாது. பாலியல் தொல்லைகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்” என்று நடிகை டாப்சி கூறினார்.
“சிறு வயதில் வெளியே போகும்போது பயப்படுவேன். நான் ஒரு பெண் என்பதால் யாரேனும் ஏதேனும் செய்து விடுவார்களோ என்ற பதற்றம் இருக்கும். எனது பெற்றோரும் அதை செய்யாதே. அங்கே போகாதே என்றெல்லாம் சொல்லி பயமுறுத்தித்தான் என்னை வளர்த்து இருந்தனர். ஆனால் இப்போது மாறி விட்டேன். சமூகம் என்னைப்பற்றி என்ன நினைக்கும் என்று கவலைப்படுவது இல்லை.
எனக்கு பிடித்த விஷயங்களில் சுதந்திரமாக ஈடுபடுகிறேன். அதற்காக எல்லை மீற மாட்டேன். டெல்லியில் நடந்த நிருபயா சம்பவம் போல் நாடு முழுவதும் பல இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அவை வெளிச்சத்துக்கு வருவது இல்லை.
பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். நிருபயா குற்றவாளிகள் சட்டத்துக்கு பயப்படவில்லை. மிருகங்கள் மாதிரி நடந்து கொண்டனர். இதை பார்க்கும்போது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. 60 ஆண்டுகளுக்கு முந்தைய சட்டங்களைத்தான் இப்போதும் பயன்படுத்துகிறோம். அதனால்தான் இப்படி தவறு செய்து விட்டு திமிராக திரிகிறார்கள். அவர்களுக்கு நடுக்கம் வருவது மாதிரி தண்டனைகள் வழங்க வேண்டும். அந்த தண்டனையை பார்த்து மற்றவர்களுக்கும் பயம் வர வேண்டும்.
அதுமாதிரியான சட்டங்கள் எப்போது வருகிறதோ அப்போதுதான் பெண்களுக்கு விடிவு காலம் பிறக்கும். பெற்றோர்கள் பெண்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து பயமுறுத்தி வளர்ப்பதை கைவிட வேண்டும். ஆண்கள் தவறு செய்தாலும் பெண்கள்தான் பயப்பட வேண்டி இருக்கிறது. சமூகமும் இவள் ஒதுங்கிப்போய் இருக்கலாமே என்று பெண்கள் மீதுதான் பழி போடுகிறது.
பாலியல் தொல்லை கொடுக்கும் ஆண்களை பார்த்து பெண்கள் அடங்கிப் போகக்கூடாது. சரியான பதிலடி கொடுக்க வேண்டும். அந்த பதிலடி எப்படி இருக்க வேண்டும் என்றால் அவன் பெண்களை ஏறெடுத்து பார்ப்பதற்கே பயப்பட வேண்டும். பெண்களை பெற்றோர் பயமுறுத்தியும் ஆண்களுக்கு சுதந்திரம் கொடுத்தும் வளர்ப்பதும்தான் இது போன்ற தவறுகளுக்கு காரணமாக அமைகிறது. சூரியன் அஸ்தமனமானதும் பெண்கள் வீட்டுக்கு வந்து விட வேண்டும். பார்ட்டி பீச் என்று சுற்றக்கூடாது என்று புத்திமதி சொல்கிறார்கள்.
அதையே மகன்களிடமும் சொல்லி இரவில் விருந்து என்று சுற்றாமல் வீடு வந்து சேர் என்று கட்டுப்பாட்டுடன் வளர்த்தால் தவறுகள் கட்டுப்படுத்தப்படும். எனக்கு திருமணம் ஆன பிறகு பெண் குழந்தை பெற்றுக்கொள்ளவே விரும்புவேன். நான் வளர்ந்த மாதிரி இல்லாமல் தவறு செய்யும் ஆண்களை எதிர்த்து நிற்கும் துணிச்சலான பெண்ணாக கட்டுப்பாடு இல்லாமல் பயமுறுத்தாமல் சுதந்திரமாக வளர்ப்பேன்.”