“யானை இருந்தாலும் ஆயிரம் பொன், யானை மறைந்தாலும் ஆயிரம் பொன்…” என்ற கருத்தை நேற்று நடைபெற்ற ‘ரிக்ஷாக்காரன்’ படத்தின் டிஜிட்டல் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் உறுதி செய்திருக்கிறார்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பக்தர்கள். சென்னையில் உள்ள தேவி பாரடைஸ் திரையரங்கில் விமர்சையாக நடைபெற்ற இந்த விழாவில் தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரும், சத்யா மூவிஸின் நிறுவனருமான ஆர். எம். வீரப்பன், சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், பிரபல தயாரிப்பாளருமான தியாகராஜன், நடிகர் மயில்சாமி, நடிகர் சின்னி ஜெயிந்த், நடிகர் வின்சென்ட் அசோகன், கோயம்பத்தூர் திரைப்பட சங்கத்தின் தலைவர் சண்முகம், ‘ஆல்பர்ட்’ மாரியப்பன் மற்றும் இந்த ரிக்க்ஷாக்காரன் படத்தை நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியிடும் ‘குவாலிட்டி சினிமா’ நிறுவனத்தின் உரிமையாளர்கள் பி. மணி, டி.கே.கிருஷ்ணகுமார் மற்றும் ‘பிலிம் விஷன்’ நிறுவனத்தின் உரிமையாளர் கே. ராமு ஆகியோர் பங்கேற்றனர். ஏறக்குறைய நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ரிக்க்ஷாக்காரன் படம் வெளியான அதே தேவி பாரடைஸ் திரையரங்கில் இந்த விழா அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.
“குற்றம் இல்லாத மனிதன், கடவுள் இல்லாத கோவில் நம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். என்னுடைய சிறு வயதில் இருந்தே நான் புரட்சி தலைவரின் படங்களையும் அவரின் பாடல்களையும் மட்டுமே பார்த்து வளர்ந்தேன். ‘ஆங்கிலம் என்பது அறிவை வளர்த்து கொள்வதற்காக மட்டுமே தவிர ஆடம்பரத்திற்காக இல்லை…’ என்ற நம் தலைவரின் ‘ரிக்ஷாக்காரன்’ பட வசனத்தை இன்றளவும் என்னால் மறக்க முடியாது…தன்னுடைய ரசிகர்களின் டிக்கெட் விலை ஏறிவிடக் கூடாது என்று தன் சம்பளத்தை உயர்த்தாத ஒரே நடிகர் நம் மக்கள் திலகம் மட்டும் தான்…அப்படிப்பட்ட தெய்வத்தின் ‘ரிக்ஷாக்காரன்’ படத்தை மீண்டும் நவீன முறையில் மெருகேற்றி வெளியிடும் ‘குவாலிட்டி சினிமா’ நிறுவனத்தின் உரிமையாளர்கள் டி.கே.கிருஷ்ணகுமார், பி. மணி அவர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்…’ என்று கூறினார் நடிகர் மயில்சாமி.
“ஏழை சிரிச்சா அது மகிழ்ச்சி…ஆனால் நம் தலைவர் எம்.ஜி.ஆர் சிரித்தால் அது புரட்சி…” என்று நடிகர் சின்னி ஜெயந்த் கூற, திரையரங்கில் அமர்ந்திருந்த அனைத்து எம்.ஜி.ஆர் பக்தர்களும் மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளிப்படுத்தினர். “தவறான வார்த்தைகளை பயன்படுத்தாத ஒரே மாமனிதர், நம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தான். இன்று நான் பங்கேற்று இருக்கும் இந்த விழாவானது, என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை தேடி தந்திருக்கிறது…” என்று பெருமையுடன் கூறினார் நடிகர் சின்னி ஜெயந்த்.
“நாற்பது வருடங்களுக்கு முன்பே நாற்பது அடி உயரத்தில் ஒரு பிரம்மாண்ட அரங்கத்தை அமைத்த பெருமை, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த ‘ரிக்ஷாக்காரன்’ படத்திற்கு தான் உண்டு. 1971 ஆம் ஆண்டில் ‘ரிக்ஷாக்காரன்’ திரைப்படம் வெளியான அதே திரையரங்கில் இன்று இந்த விழாவானது நடைபெற்று வருகிறது. எனக்கு வயது தற்போது 90 என்றாலும், இந்த நாள் மூலம் எனக்கு நாற்பது வயது குறைந்து இருக்கிறது…என்னை இங்கு அழைத்து என்னை அன்போடு வரவேற்ற ஒவ்வொரு எம்.ஜி.ஆர். பக்தர்களுக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்…’ என்று கூறினார் தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன்.