‘காதலுக்கு எந்தவித எல்லையும் கிடையாது’ என்பதை மைய கருத்தாக கொண்டு உருவாகி இருக்கிறது, ஜீவா – காஜல் அகர்வால் நடித்து, அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘கவலை வேண்டாம்’ திரைப்படம். ‘யாமிருக்க பயமே’ படப்புகழ் டீகே இயக்கி, RS இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து இருக்கும் இந்த ‘கவலை வேண்டாம்’ படத்தில், வர்த்தக வெற்றிக்கு தேவையான அனைத்து சிறப்பம்சங்களும் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. எனவே காதல் கலந்த காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த ‘கவலை வேண்டாம்’ படத்தின் விநியோக உரிமையை பெற பல முன்னணி விநியோகஸ்தர்கள் போட்டியிட, இறுதியாக இந்த படத்தின் விநியோக உரிமையை “அபி அண்ட் அபி’ நிறுவனத்தின் சார்பில் வாங்கியிருக்கிறார் அபினேஷ் இளங்கோவன்.
“தமிழ் சினிமாவில் என்றுமே காதலுக்கும் – நகைச்சுவைக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கும். ஒரு படத்தின் வெற்றிக்கு கதைக்களம் முக்கிய காரணமாக இருந்தாலும், அந்த படத்தின் அமோக வெற்றிக்கு சிறந்த நடிகர்கள், மனதை மயக்கும் இசை, காண்போரை பிரமிக்க வைக்கும் காட்சிகள், சிறந்த தயாரிப்பு என அனைத்தும் தேவை அந்த வகையில் இந்த அனைத்து குணங்களும் முழுமையாக பொருந்தி இருக்கும் ஒரு திரைப்படமாக ‘கவலை வேண்டாம்’ படத்தை நான் கருதுகிறேன். அந்த ஒரு காரணமே என்னை கவலை வேண்டாம் படத்தின் விநியோக உரிமையை வாங்க தூண்டியது. வருகின்ற அக்டோபர் 7 ஆம் தேதி மிக பிரமாண்டமான முறையில் வெளியாக இருக்கும் எங்களின் ‘கவலை வேண்டாம்’ திரைப்படமானது, அதன் தலைப்பிற்கு ஏற்றது போல் ரசிகர்களின் கவலைகளை மறைத்து அவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும்…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘அபி அண்ட் அபி’ நிறுவனத்தின் உரிமையாளர் அபினேஷ் இளங்கோவன்.