கவியரசர் கண்ணதாசனின் நினைவு தினத்தில் அவருக்கு கவிதை சமர்பித்துள்ள “ காதல் என்னுள் “ பாடல் புகழ் பாடலாசிரியர் வேல் முருகன் !!
கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னாரின் நினைவாக அவருக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் ஒரு கவிதையை எழுதியுள்ளார் கவிஞர் – திரைப்பட பாடலாசிரியர்வேல் முருகன் இவர் நிவின் பாலி நடிப்பில் – அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்த “ நேரம் “ படத்தில் ராஜேஷ் முருகேசனின் இசையில் இடம் பெற்ற “ காதல் என்னுள் வந்த நேரம் “ என்ற பிரபல பாடலை எழுதியவர். அப்படத்திற்கு பின்பு சித்தார்த் நடிப்பில் வெளிவந்த “ எனக்குள் ஒருவன் “ திரைப்படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். தற்போது நிவின் பாலியின் நடிப்பில் இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கிவரும் பெயரிடப்படாத திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதி வரும் இவர் , கிடாயின் கருணை மனு , பட்டினம்பாக்கம் , நாகேஷ் திரையரங்கம் போன்ற பல்வேறு படங்களுக்கு பாடல்கள் எழுதிவருகிறார்.
கலையரசன் நடிப்பில் உருவாகி வரும் பட்டினம்பாக்கம் திரைப்படத்தில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கருடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் மறைந்த பாடலாசிரியர் நா. முத்து குமாரிடம் உதவியாளராக பணியாற்றியவர். மறைந்த தன்னுடைய குருவின் புகழ் பாடும் வகையில் “ உன் ராஜபாட்டையில் “ என்னும் தலைப்பில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். தற்போது பல்வேறு இளம் இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றி வரும் வேல் முருகன் தன்னை பாடலாசிரியராக அறிமுகம் செய்த “ ராஜேஷ் முருகேஷனுடன் “ மீண்டும் இணைந்து பணியாற்ற காத்திருப்பதாக கூறுகிறார்.
கவியரசர் கண்ணதாசனின் நினைவு நாளான இன்று , அன்னாருக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் அவர் எழுதியுள்ள கவிதை இதோ , கவிஞர். கண்ணதாசன் அவர்களுக்கு.
வேல்முருகன்.
நாலுபேருக்கு நன்றி
அந்த நாலுபேருக்கு நன்றி
என்று பாடினாய்
அதனைக்கேட்ட ஒரு நாலுகோடி பேராவது
அந்த ரெண்டுபேருக்கு நன்றி
உன்னைப் பெற்ற ரெண்டு பேருக்கு நன்றி சொல்வார்கள்
என் தாத்தா காலத்தில்
என் அப்பா அம்மா காதலிக்க
பாட்டையையும் கொடுத்தாய்
என் பாட்டியை இழந்து வாடிய எம்பாட்டனுக்கு
உன் பாடலால்
அமைதியையும் கொடுத்தாய்.
உலகத்து தங்கச்சிக்களுக்கெல்லாம்
உன்பாட்டு ஓர் அண்ணை
அண்ணன் தங்கை
பாசம் என்றாலே
திசை காட்டும் உன்னை.
அண்ணன் தம்பி அக்கா தங்கைக்கு என
ஓடிஓடி உழைத்தவர்களை
அக்குடும்பம் நடுத்தெருவில் நிறுத்தும்போது
‘போனால் போகட்டும் போடா’ என்று தேற்றியதில்
கோபத்தை மறந்து
சிரித்தவர்கள் எத்தனையோ..
கவிஞரைப் பாட எடம் பத்தலையே..
நீ நிரந்தரமானவன்
எப்ப செத்த ?
எந்த நிலையிலும்
மக்கள் மனங்களில் நிப்ப..!
வேல்முருகன்.