அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் ‘குற்றம் 23’ படமானது அதன் ஆரம்பக்கட்டத்தில் இருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆர்த்தி அருணின் ‘இன் சினிமாஸ் எண்டர்டைன்மென்ட்’ நிறுவனத்தோடு இணைந்து ‘ரெதான் – தி சினிமா பீப்பல்’ நிறுவனத்தின் உரிமையாளர் இந்தெர் குமார் தயாரித்து வரும் இந்த ‘குற்றம் 23’ படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அறிவழகன். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கும் இந்த ‘குற்றம் 23’ படத்தின் இசை உரிமையை தற்போது ‘சோனி மியூசிக்’ நிறுவனம் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
” நடிப்பிற்காக தன்னையே முழுமையாக அர்ப்பணித்து கொள்ளும் ஒரு நடிகர் அருண் விஜய் சார். அவருடைய படத்திற்கு இசை அமைக்கும் வாய்ப்பை எனக்கு அளித்த இயக்குனர் அறிவழகன் சாருக்கு என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். உலகின் தலை சிறந்த இசை நிறுவனமான ‘சோனி மியூசிக்’ எங்கள் ‘குற்றம் 23’ படத்தின் இசை உரிமையை வாங்கி இருப்பது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது…இந்த (ஆகஸ்ட்) மாதத்தில் வெளியாக இருக்கும் ‘குற்றம் 23′ படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது…’ என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘குற்றம் 23’ படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர்.