Friday, December 6
Shadow

சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் சினேகா

ஒரு படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் முன்னதாகவே ரசிகர்களை ஈர்க்க கூடிய வலிமை ஒரு சில படங்களுக்கு மட்டும் தான் இருக்கின்றது. இயக்குனர் மோகன் ராஜாவின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்க இருக்கும் பெயர் சூட்டப்படாத திரைப்படமே அதற்கு சிறந்த உதாரணம். 24 ஏ எம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர் டி ராஜா தயாரித்து வரும் இந்த திரைப்படமானது ஏற்கனவே பாஹத் பாசில், ஆர் ஜே பாலாஜி, சதீஷ் மற்றும் தம்பி ராமையா என பல சிறந்த நடிகர்களை உள்ளடக்கி இருக்க, தற்போது இந்த திரைப்படத்தின் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகை சினேகா நடிக்க இருப்பது, ரசிகர்களின் எதிர்பார்ப்பை வானளவு உயர்த்தி இருக்கிறது.

“கவிதை எழுதுவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல… சிறந்த உருவகம், பொருத்தமான சொற்கள் என அனைத்தும் மனதில் இருந்து வர வேண்டும். அது போல தான் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிப்பது என்பதும்… மனதில் அந்த வேடத்தை உள் வாங்கினால் மட்டுமே, அந்த கதாப்பாத்திரத்தை கன கட்சிதமாக திரையில் பிரதிபலிக்க முடியும். அப்படி நடிக்க கூடிய ஒரு நடிகை தான் சினேகா. இந்த படத்தின் கதையை நாங்கள் எழுதும் போதே இந்த கதாப்பாத்திரத்தில் சினேகா தான் நடிக்க வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்துவிட்டோம்…சினேகாவும் எங்கள் படத்தின் கதையை கேட்ட அடுத்த கணமே இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பு கொண்டுவிட்டார்… எங்களின் ஒட்டுமொத்த படக்குழுவினரின் சார்பிலும் அவர்களை அன்போடு வரவேற்கிறோம்…வருகின்ற செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்த பெயர் சூட்டப்படாத படத்தின் படப்பிடிப்பை நாங்கள் தொடங்க இருக்கிறோம்…” என்று கூறுகிறார் இயக்குனர் மோகன் ராஜா.

“சினிமாவில் நான் மீண்டும் காலடி எடுத்து வைக்கும் படம் ஒரு மிக பெரிய திரைப்படமாக இருக்க வேண்டும் என நான் ஆசைப்பட்டேன்… ஆனால் இந்த திரைப்படமோ பிரம்மாண்டத்தின் உச்ச கட்டமாக இருக்கிறது…தயாரிப்பாளர் ராஜா சாருடன் பணியாற்றுவது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது…இப்படிப்பட்ட ஒரு சவாலான கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு என்னை தேர்வு செய்த இயக்குனர் மோகன் ராஜா சாருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்….நிச்சயமாக என்னுடைய இந்த கதாப்பாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது…” என்று கூறினார் சினேகா.

Leave a Reply