Wednesday, February 21
Shadow

ஜல்லிகட்டு படத்துக்கு எதிர்ப்பு வந்தால் சந்திக்க தயார்: இயக்குனர் ஆவேசம்

இயக்குனர் சுசீந்திரனின் உதவியாளர் ஜுலியன் பிரகாஷ் சொந்தமாக தயாரித்து இயக்கி உள்ள படம் இளமி. இது 300 ஆண்டுகளுக்கு முன்பிருந்த வடம் ஜல்லிக்கட்டு பற்றிய கதை. சாட்டை யுவன், அனுகிருஷ்ணா ரவிமரியா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் இயக்குனர் ஜுலியன் பிரகாஷ் ஆவேசமாக பேசியதாவது:

18 ம் நூற்றாண்டில் நடக்கும் இக்கதையில் ஜல்லிக்கட்டு மையக்கருவாக உள்ளது. அந்த காலகட்டத்தில் புழக்கத்தில் இருந்த வடம் ஜல்லிக்கட்டு இன்று அடியோடு அழிந்து விட்டது. ஜல்லிக்கட்டில் பல வகைகள் இருந்தாலும் வடம் ஜல்லிக்கட்டு என்பது, உயிரை பணயம் வைத்து விளையாடும் வீர விளையாட்டு. முற்றிலும் அழிந்து போன இக்கலையை நாங்கள் திரையில் மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறோம். இதன் மூலமாக இப்பொழுது தடை செய்யப்பட்டு இருக்கும் ஜல்லிக்கட்டிற்கு ஒரு விடிவு பிறக்கும் என ஆணித்தரமாக நம்புகிறோம்.

இத்திரைப்படத்தை பார்க்கும் போது, 18 ம் நூற்றாண்டில் நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் ஜல்லிக்கட்டு காளையை தம் பிள்ளைகள் போல் நினைத்து பண்டுதம் பார்த்து, மேய்ச்சலுக்கு கொண்டு சென்று வாழ்நாள் எல்லாம் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக பாவித்து ஜீவ காருண்யம் பேணி வந்தார்கள். அப்படி வளர்க்கப்பட்ட காளைகள் இன்று அடி மாடுகளாக ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மாடு பிடி வீரர்கள் வேதனையில் மருகிக்கொண்டிருக்கின்றனர். இன்னும் ஐந்து ஆண்டுகள் இந்த ஜல்லிக்கட்டு நடக்கவில்லை என்றால் மாடுபிடி வீரர்களே இல்லாமல் போய் விடுவார்கள். ஜல்லிக்கட்டு என்ற கலை முற்றிலுமாக அழிந்து போய் விடும். நம் தமிழ் கலாச்சாரத்தின் ஆணி வேரான ஜல்லிக்கட்டு கலையை அழிக்க நினைப்பவர்களுக்கே அவ்வளவு வன்மம் இருந்தால், அதை காக்க துடிக்கும் நமக்கு எவ்வளவு இருக்கும்..?

நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்ட ஒன்றை படமாக எடுத்திருக்கிறாய் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டார்கள் என்று பலர் பயமுறுத்தினார்கள். இந்த படத்துக்கு பிரச்சினை வரும் என்று தெரியும். அதனால்தான் மற்றவர்கள் பணத்தில் படம் எடுக்காமல் என் பணத்தில் படத்தை எடுத்திருக்கிறேன். இந்த கலையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். என்றார் இயக்குனர் ஜூலியன் பிரகாஷ்.

Leave a Reply