Sunday, December 8
Shadow

தேவி படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் தன் பட குழுவினரை பாராட்டிய பிரபு தேவா

ஒரு கலைஞனுக்கு தேவைப்படுவது பணம் மட்டுமே இல்லை. அத்துடன் தங்களின் உழைப்புக்கு ஏற்ற கௌரவத்தை தான் அவர்கள் விரும்புகிறார்கள்… ஒரு திரைப்படம் வெற்றி பெற்றுவிட்டால், அந்த வெற்றிக்கு உறுதுணையாய் இருந்து பணியாற்றிய நடிகர் நடிகைகளுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் தங்களின் பெயர் பதித்த கேடயங்களை வழங்குவது முன்பு வழக்கமாக இருந்து வந்தது…. கால போக்கில் அத்தகைய செயல் வெகுவாக மறைந்து போனது. “தேவி” படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ சார்பில் அந்த கலாச்சாரத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்திருக்கிறார்கள் பிரபுதேவா மற்றும் டாக்டர் கே கணேஷ். வெற்றிக்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும், அவர்களின் பெயரும், திரைப்படத்தின் பெயரும் பதித்த கேடயங்களை வழங்கி கௌரவித்து இருக்கிறார்கள் பிரபுதேவா மற்றும் டாக்டர் கே கணேஷ்.

பிரபு, நாசர், ஜெயம் ரவி, கார்த்தி, ஜீவா, உதயநிதி ஸ்டாலின், விஷால், விக்ரம் பிரபு, பரத், ராதா கிருஷ்ணன் பார்த்திபன், கிரிஷ், நடிகை மீனா, சங்கீதா, இயக்குநர் கே எஸ் ரவிக்குமார், வருண், இயக்குநர் லக்ஷ்மன் மற்றும் நடிகை லிசி என திரையுலகை சார்ந்த பல பிரபலங்கள் இந்த விமர்சையான விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தேவி படத்தில் நடித்த நகைச்சுவை நடிகர் சதீஷ் மற்றும் இயக்குநர் – நடிகர் ஆர் வி உதயகுமார் ஆகியோரும் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ‘தேவி’ படத்தின் முன்னணி கதாபாத்திரங்களான பிரபுதேவா – தமன்னா, படத்தின் இயக்குநர் விஜய் மற்றும் தயாரிப்பாளர் டாக்டர் கே கணேஷ் ஆகியோர், ‘தேவி’ படத்தில் பணியாற்றிய மற்ற நடிகர் நடிகைகளுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் கேடயங்களை வழங்கி கௌரவித்தனர். ஒருபுறம், பல காலங்கள் கழித்து கௌரவ கேடயங்களை பெற்ற மூத்த கலைஞர்கள் பழைய நினைவுகளை எண்ணி பெருமை கொள்ள, மறுபுறம் முதல் முறையாக கேடயங்களை பெற்ற இளம் கலைஞர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளித்தனர்.

விழாவின் முத்தான நிமிடங்களே, மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமார் அவர்களது கேடயத்தை அவரது மகன் ஆதவன் பெற்றுக் கொண்ட போது, விழாவில் குழுமி இருந்த அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி நெகிழ்சி ஊட்டியது தான்…

Leave a Reply