Saturday, October 12
Shadow

நடிகை அதிதி சொல்லும் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது இயக்குனர் செல்வகண்ணன்

செல்வகண்ணன் ஆகிய நான் திரைத்துறையில் எட்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். இயக்குநர்கள் “சாமி” “ஏ.ஆர்.காந்திகிருஷ்ணா” “ராஜேஷ் செல்வா” ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளேன். தற்போது “நெடுநல்வாடை” என்ற தமிழ்த் திரைப்படத்தை இயக்கி வருகிறேன். என் மேலும், என் கதையின் மேலும் இருக்கும் நம்பிக்கையினால், இந்தப் படத்தை என்னுடைய கல்லூரிக்கால நண்பர்கள் ஐம்பது பேர்கள் ஒன்று சேர்ந்து ஆளுக்கு ஒரு லட்சம், இரண்டு லட்சம் என்ற முறையில் உதவி செய்து இந்தத் திரைப்படம் உருவாகிறது.
இந்தப் படத்தில் கதாநாயகியாக “அதிதி (சயானா / ஆதிரா சந்தோஷ்)” என்பவரை புதுமுக நாயகியாக அறிமுகப்படுத்தினேன். ஜனவரியில் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்தபின் இருந்த இடைவெளியில் “பட்டதாரி ” என்ற படத்தில் நாயகியாக நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது. என் படம் முடியாமல் அதிதி வேறு படம் நடிக்கக் கூடாது என்று ஒப்பந்தம் இருந்த போதும், மனிதாபிமான அடிப்படையில் நான் அதை அனுமதித்தேன்.
அந்தத் திரைப்படம் முடிந்து என் படத்தின் இரண்டாம் கட்ட ஷெட்யூலுக்கு ஜூன் மாதம் 13ம் தேதி அவுட்டோர் வந்த நடிகை அதிதி உடல்ரீதியாக மிகவும் சோர்ந்து போய் பலவீனமாக இருந்தார். மேலும், காட்சிகளில் முழு ஈடுபாடு இன்றி நடித்தார். இரவு நீண்ட நேரம் தூங்காமல் போனில் பேசிக் கொண்டிருந்துவிட்டு, காலையில் படப்பிடிப்புக்கு கண்வீங்கிப் போய் வந்தார். தொடர்ந்த அவரது இதுபோன்ற நடவடிக்கைகள் படப்பிடிப்பை வெகுவாகப் பாதித்தது. மேலும், இரண்டொரு நாளிலேயே திரும்ப ஊருக்குப் போகவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார்.
இதனால் இயக்குனராக எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் வந்தது. “மேற்கொண்டு இந்தப் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டாம் முழு ஈடுபாட்டுடன் நடிப்பதானால் நடியுங்கள், இல்லையானால் போய்விடுங்கள்” என்று சொன்னேன். அப்போது மன்னிப்புக் கேட்டுக்கொண்ட அவர் “பட்டதாரி படத்தில் நடித்த போது, அப்படத்தின் கதாநாயகனான “அபிசரவணன்” என்பவருக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பதாகவும், ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வதாகவும் (லிவிங் டுகெதர்) அவரைப் பார்க்கப் போகவேண்டும்” என்றும் தொரிவித்தார்.
நான் அவரிடம் “இதுபோன்ற ஒரு சூழலில் படப்பிடிப்பைத் தொடர முடியாது, நீங்கள் சொந்த வாழ்க்கையா, திரைப்படமா எது முக்கியம் என்பதைத் தீர்மானித்து விட்டு, மேற்கொண்டு நடியுங்கள், இல்லை என்றால் வேறு ஒரு கதாநாயகியை வைத்து நான் படத்தை எடுத்துக் கொள்கிறேன், இப்போதே போய்விட்டால் எனக்கு நஷ்டம் குறைவு, பின்னால் ஏதாவது பிரச்சனை வந்தால் கஷ்டம்” என்று சொல்ல, அதற்கு அவர் “சினிமா எனக்கு முக்கியம், நான் இனிமேல் ஈடுபாடுடன் இருக்கிறேன்” என்று நடிக்க ஒப்புக் கொண்டார். அடுத்து 15 நாட்கள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நன்றாகவே நடித்தார். இன்னும், 10 நாட்கள் படப்பிடிப்பு பாக்கி இருந்த நிலையில், மீண்டும் அபி சரவணன் அழைப்பதாகச் சொல்லி, ஊருக்குப் போக அடம் பிடித்தார். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் புரியாமல் பிடிவாதம் பிடிக்க, வேறுவழியில்லாமல் படப்பிடிப்பை இடையில் நிறுத்திவிட்டு சென்னை வந்தோம்.
அதன்பின் அவரைத் தொடர்பு கொள்ள முயன்றால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவருடன் வாழும் அபிசரவணனைத் தொடர்பு கொண்டபோது, “அதிதி மேற்கொண்டு இந்தப் படத்தில் நடிக்க மாட்டார், இந்தப் படம் இனிமேல் நடக்காது” என்று சவால் விட்டார். அதிதிக்கு மேனேஜர் என்று யாரும் இல்லாததால் வேறு வழியில்லாத நிலையில், தயாரிப்பாளர் கில்டிலும், இயக்குநர் சங்கத்திலும் கடந்த ஜூலை 16ம் தேதி புகார் கொடுத்தேன். அவர்களும் அபிசரவணன் மூலமாக அதிதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேரில் வரச்சொன்னார்கள். ஆனால், அதிதியோ அவரது உறவினரோ, மேனேஜரோ இன்றுவரை எந்த சங்கத்திற்கும் பேச்சுவார்த்தைக்கு வரவே இல்லை. பின், வளவரவாக்கம் காவல் நிலையத்திலும் நான் புகார் கொடுத்தேன். ஆனால், அங்கும் அதிதி நேரில் வந்து ஆஜராகவில்லை. வெளியூரில் இருப்பதாகவும், உடல் நிலை சரியில்லை என்றும் சொல்லிக்கொண்டும் தலைமறைவாகவே இருந்தார்.
இந்த நிலையில், கடந்த வாரம் சாலிகிராமத்தில் ஒரு விளம்பரப் படப்பிடிப்பிற்கு தற்செயலாகப் போனபோது, அதிதி அதில் நடித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்த நான் அவா¢டம் ஏன் என் படத்தில் நடிக்க வர மறுக்கிறீர்கள், சங்கத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று அழைத்தேன். அதில் எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் வந்தது. பின்னர் விருகம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆணையர் இருவரையும் அழைத்துப் பேசி, விரைவில் சங்கத்தில் இந்தப் பிரச்சனையைப் பேசித்தீர்த்துக் கொள்ளுங்கள் என்று அதிதிக்கு அறிவுரை சொல்லி, எழுதி வாங்கினார். தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சங்கத்திற்கு அவரே நேரடியாகப் பேசி பிரச்சனையை முடிக்கும்படி அறிவுறுத்தினார்.
ஆனால், அதன்பின்னும் அதிதி எந்த சங்கத்திற்கும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. அவரையோ, அவர் சார்பாக காவல் நிலையத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வந்தவர்களையோ தொடர்புகொள்ளவே முடியவில்லை. பேச்சுவார்த்தைக்கு வந்தால், அதிதியால் படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்பட்டதும், அதற்கு காரணமான அபிசரவணன் உடனான தன்னுடைய மறைமுகக் காதல் வாழ்க்கை வெளிச்சத்திற்கு வரும் என்றும், அவர் பேச்சுவார்த்தைக்கு வராமல் தவிர்க்கிறார்.
இந்தப் பிரச்சனையில் இருந்து அவர் தப்பிப்பதற்காக, வேறு எந்த வழியும் இல்லாத நிலையில், என் மீது “நான் அவரைத் திருமணம் செய்ய வற்புறுத்தினேன் என்றும், தவறாக நடக்க முயன்றேன்” என்றும் என் பெயரைக் களங்கப்படுத்தும் விதமாக பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி, தற்கொலை நாடகம் நடத்தி பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டுள்ளார்.
அவர் சொல்லும் குற்றச்சாட்டு உண்மையாக இருக்குமானால், அவர் சங்கத்திலோ, காவல்துறையிலோ புகார் செய்யலாம். அதை சட்டரீதியாக எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். இந்தப் பிரச்சனை தொடர்பாக, இதுவரை நடந்த அனைத்து விவகாரங்களையும், தயாரிப்பாளர் சங்க கில்டும், இயக்குனர் சங்கமும் முழுவதும் அறியும். பத்திரிக்கையாள நண்பர்கள் இரண்டு சங்கத்திலும் விசாரித்து உண்மை நிலையை தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply