மணிரத்னம் இயக்கத்தில் கமல், சரண்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘நாயகன்’. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்த அப்படத்துக்கு இளையராஜா இசையமைத்தார். முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில் அக்டோபர் 21, 1987ல் இப்படம் வெளியானது.
இப்படம் வெளியாகி 29 வருடங்கள் ஆவதை முன்வைத்து #29YearsOfNayagan என்ற டேக்கில் பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இப்படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பில் இறுதிக்காட்சி எப்படி, எங்கு படமாக்கப்பட்டது தெரியுமா?
அடையாறில் தண்ணீரை எடுத்து, கமல் மீது மழை பெய்வது போன்ற காட்சியை காட்சிப்படுத்த திட்டமிட்டனர். அனைத்துமே தயாராக இருந்த போது, இவர்கள் படப்பிடிப்பு நடத்திய ஏரியாவில் உள்ள ரவுடி ஒருவர் “எப்படி இங்கு படப்பிடிப்பு நடத்தலாம்” என்று பேசி படப்பிடிப்புக்கு இடையூறு செய்தாராம்.
மாலை நேரம் என்பதால் ஒளியும் குறைந்து கொண்டே வருகிறது. ஒளியமைப்பு குறைவதற்குள் காட்சிப்படுத்த வேண்டும் என்பது பி.சி.ஸ்ரீராமின் திட்டமாக இருந்திருக்கிறது. படப்பிடிப்பில் பிரச்சினை ஏற்பட்ட போது, பி.சி.ஸ்ரீராமோ இதனை உடனே சரி செய்யுங்கள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
ரூ.50 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே, இங்கு படப்பிடிப்பு நடத்த முடியும் என்று தொடர்ந்து அந்த ரவுடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். வெளிச்சம் குறையத் தொடங்கியவுடன், பி.சி.ஸ்ரீராம் நேராக வந்து பிரச்சினை பண்ணிக் கொண்டிருந்தவரை அடித்துவிட்டார். இவர் அடித்தவுடன், அந்த ரவுடியோ அங்கிருந்து தெறித்து சென்றுவிட்டார்.
அனைத்தையும் காட்சிப்படுத்தி முடித்தவுடன், படக்குழுவினரை அழைத்து “அந்த நபர் எவ்வளவு கேட்டார்” என்று கேட்டிருக்கிறார் பி.சி.ஸ்ரீராம். ரூ.50 ஆயிரம் என்று படக்குழு கூற, ரூ.60 ஆயிரம் கொடுத்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார் பி.சி.ஸ்ரீராம்.
இதனை சமீபத்தில் நடைபெற்ற ‘சவரக்கத்தி’ டீஸர் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் பவா செல்லத்துரை தெரிவித்தார்.