புண்ணியகோடி இந்தியாவின் முதல் சமஸ்க்ருத அனிமேஷன் திரைப்படமாகும்.
by admin
புண்ணியகோடி இந்தியாவின் முதல் சமஸ்க்ருத அனிமேஷன் திரைப்படமாகும். இது crowd funded ( குழு முதலீடு ) மற்றும் crowd sourced முறையில் செய்யப்படும் ஒரு புதிய முயற்சி . இப்படம் உண்மையை மட்டும் பேசும் ஒரு பசுவின் கதை. இப்படம் மனிதனின் பேராசையால் இயற்கைக்கு உருவாகும் தீங்கை பொழுது போக்கு விஷயங்களோடு சேர்த்து கூறும் புதுமையான ஒரு படைப்பு . இப்படத்தின் மூல கதை மஹாபாரத காவியத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
கருநாடு என்னும் கிராமத்தில் உண்மையை மட்டும் உரைத்து வாழும் ஒரு பசு மாடு வாழ்ந்து வந்தது. ஒரு நாள் புண்ணியகோடி என்னும் அந்த பசு மாட்டை ஒரு புலி பிடித்துவிடுகிறது. அப்போது புண்ணியகோடி புலியிடம் – நான் என் கன்றுக்கு பால் கொடுக்க வேண்டும் ஆதலால் என்னை விடுவிக்க வேண்டும், என் கன்றுக்கு பால் கொடுத்த பிறகு நான் திரும்பி வருகிறேன் என்று கேட்கிறது. பிறகு புண்ணிய கோடி தன் கன்றின் பசியாறிய பின்பு மீண்டும் புலியிடம் செல்கிறது. தப்பித்து செல்ல வாய்ப்பிருந்தும் திரும்ப வந்த புண்ணியகோடியின் நேர்மையை கண்டு அந்த புலி புண்ணியகோடியை கொல்லாமல் விட்டு செல்கிறது.
இப்படத்தில் புகழ் பெற்ற பல தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுகின்றனர் . படத்திற்கு இசை இசைஞானி இளையராஜா , நடிகை மற்றும் இயக்குநர் ரேவதி இப்படத்தில் முக்கிய பாத்திரமான புண்ணியகோடிக்கு டப்பிங் பேசுகிறார். இது தவிர யு-டர்ன் படத்தில் நடித்த ரோஜர் நாராயணன் மற்றும் கன்னட மேதை நரசிம்மமுர்த்தி ஆகியோரும் இப்படத்திற்கு டப்பிங் பேசுகிறார்கள்.
வி. ரவி சங்கர் இப்படத்தை இயக்குகிறார். இவர் மல்டி மீடியா மற்றும் அனிமேஷன் துறையில் சிறுவர்களுக்கான படங்களை உருவாக்குவதில் 20 வருடங்களுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இவர் தற்போது இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இப்படத்தின் இயக்குநர் ரவி தன்னுடைய முயற்சியால் பல்வேறு துறையில் நிபுணத்துவம் பெற்ற பற்பல தொழில்நுட்ப கலைஞர்கலைகளை சமஸ்கிருத மொழியில் உருவாகும் இப்படத்தில் பணியாற்ற ஒருங்கிணைத்துள்ளார்.
படத்தை பற்றி புண்ணியகோடி திரைப்படத்தின் இயக்குநர் ரவி சங்கர் பேசியது , தி லேஜென்ட் ஆப் புண்ணியகோடி திரைப்படம் உண்மை மற்றும் தூய்மை பற்றி பேசும் ஒரு படைப்பாகும். இப்படத்தில் உள்ள கருத்து அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். சமஸ்கிருதம் 5000 வருடம் பழமையான மொழியாகும். அதை அழியாமல் பாதுகாக்கும் பணி நம்முடையது. இப்படத்தின் வெற்றி மேலும் இதை போன்ற படங்களை உருவாக்க ஒரு ஊன்றுதலாக அமையும் என்றார்.
இந்த முயற்சியை உதவ துபாயில் வாழும் ஓவியர் திருமதி ஷெரின் அப்ரஹாம் ஒரு கலை கண்காட்சி செய்ய முடிவெடுத்துள்ளார். இதில் இவர் செய்த இருபதிற்கும் மேற்பட்ட ஓவியங்கள் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளது. இந்த ஓவியங்களின் விற்பனையால் வரும் தொகையை புண்ணியகோடியின் தயாரிப்புக்கு கொடுக்கப்போவதாக ஷெரின் அறிவித்துள்ளார். இந்த கண்காட்சி சென்னை ஆள்வார்பேட்டையில் உள்ள ஆர்ட் ஹௌஸ் அரங்கில் ஆகஸ்ட் 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெறவுள்ளது. ஒரு படம் தயாரிக்க ஓவியர்கள் ஒருங்கிணைவது இது முதன்முறையாகும்.