பரதன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பைரவா’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். கீர்த்தி சுரேஷ், சதீஷ், மைம் கோபி, ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். விஜயா வாஹினி நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று முடிவுற்று இருக்கிறது. சமீபத்தில் விஜய் – கீர்த்தி சுரேஷ் இருவரும் பங்கேற்ற பாடல் ஒன்றை வெளிநாட்டில் படமாக்கிவிட்டு திரும்பியிருக்கிறது படக்குழு.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டதற்கு முன்பே இணையத்தில் அது கசிந்தது குறிப்பிடத்தக்கது.
அதைப் போலவே, 28ம் தேதி அதிகாலை 12:01 இணையத்தில் ‘பைரவா’ டீஸர் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், 27-ம் தேதி இரவே சமூக வலைத்தளத்தில் டீஸர் கசிந்தது. இதனைத் தொடர்ந்து அதிகாரபூர்வமாக இரவு 9:30 மணிக்கு இணையத்தில் வெளியிடப்பட்டது.
தொடர்ச்சியாக விஜய் படத்தின் போஸ்டர், டீஸர் ஆகியவை முன்பே இணையத்தில் கசிந்து வருவது படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது. பொங்கல் வெளியீடாக இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.