முன்னூறு பேர் முன்னாடி அப்படி ஆடி நடிச்ச போது வெட்கம் வெட்கமா வந்திச்சு என்று ஒரு கதாநாயகி நடிகை சினிமா விழாவில் பேசினார். இதுபற்றிய விவரம் வருமாறு :
ஸ்ரீகலைவாணி மூவிஸ் மற்றும் ஜே.எம்.பி இண்டர் நேஷ்னல் இணைந்து வழங்கும் படம் ‘மேச்சேரி வன பத்ரகாளி’. இப்படத்தை டாக்டர் கே.எம். ஆனந்தன் இயக்கித் தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று ஆர்கேவி ஸ்டுடியோவில் நடந்தது. இயக்குநர் ஆர்.அரவிந்தராஜ் பாடல்களை வெளியிட்டார்.
விழாவில் படத்தின் இயக்குநர் கே.எம். ஆனந்தன் பேசும்போது” அம்மன் படம் வந்து, ஏழெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.ராமநாராயணனுக்குப் பிறகு கிராபிக்ஸ் செலவுக்குப் பயந்து யாரும் அம்மன் படம் எடுப்பதில்லை. இப்படத்தை காசு கொடுத்துப் பார்க்கும் போது பொழுதுபோக்குடன் கூடுதலாக காளியின் அருளும் கிடைக்கும். சில ஆண்டுகளாக நடமாடி வரும் எல்லாப் பேய்களையும் ‘மேச்சேரி வன பத்ரகாளி’ விரட்டி அருள் தரும்.” என்றார்.
நாயகன் மணீஷ் பேசும்போது ” நான் சினிமாவில் நடிக்க வீட்டில் மனைவியிடம் அனுமதி கேட்டேன். மறுத்து அனுமதி தரமுடியாது என்றார்கள். சாமி படம் என்றதும் வீட்டார்கள் ‘ வன பத்ரகாளி’ ஒப்புக் கொண்டார்கள். ” என்றார்.
கவிஞர் சொற்கோ பேசும்போது ” ரொம்ப நாளாக பிசாசுகளாகவே பார்த்துக் கொண்டு இருந்தோம். பிசாசுகளின் ஆட்டங்களின் மத்தியில் ‘ வன பத்ரகாளி’ அம்மனின் ஆட்டம் வெற்றி பெறும் ” என்றார்.
இயக்குநர் ஆர். அரவிந்தராஜ் பேசும்போது ” ‘ஊமை விழிகள்’ படம் எனக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத் தந்த படம் .அதே போல ‘சூலம்’ பக்தி தொடர் எனக்கு பரவலான பெயரையும் புகழையும் பெற்றுத் தந்த தொடர். ‘சூலம்’தான் என்னை ஒவ்வொரு வீட்டிலும்கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறது. சூலத்துக்கு குற்றாலத்தில் ஒரு கோவிலில் படப்பிடிப்பு நடந்தது.தொடரை எப்படி விரிவாக்கி இழுப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தோம். ஒருவர் தினமும் அந்தக் கோயிலை சுற்றிச் சுற்றிப் பார்த்து விட்டு போய் விடுவார். அவரை விசாரித்தால் விரிவாக்கி இழுப்பதற்கு ஏதாவது கிடைக்கும் என்று விசாரித்தோம். அவர் மிகப் பெரிய கோடீஸ்வரராம். எல்லாவற்றையும் விட்டுவிட்டு கோவில் வாசலில் உட்கார்ந்து இருக்கிறார் அவர் சொன்னார் பிழைப்புக்காக தொடர் எடுக்கிறீர்கள்.அம்மன் பற்றி எடுப்பது பூர்வஜென்ம புண்ணியம் என்றார். அதுபோல்தான் ‘மேச்சேரி வன பத்ரகாளி’எடுப்பதும் ஆனந்தனின் பூர்வ ஜென்ம புண்ணியம்” என்றார்.
நாயகி நடிகை சந்தியா பேசும்போது-.” இந்தப்படம் எடுக்கும் போது இயக்குநர் பல சோதனைகளைச் சந்தித்தார். படம் முடிந்ததும் எல்லாம் கஷ்டமும் தீர்ந்து போன உணர்வு. முதலில் அவர் என்னிடம் சொன்ன கதை புரியவில்லை. சின்னத்திரையில் அழுது கொண்டே நடித்துக் கொண்டிருக்கிறேன். இது மாறுபட்ட அனுபவம். வெளிப்புறப் படப்பிடிப்பில் நடிப்பது கஷ்டமாக இருந்தது.அப்போது வெட்கம் வெட்கமாக வரும்.எனக்கு நடனமே தெரியாது.முன்னூறு பேர் மத்தியில் அப்படி ஆடும் போது கூச்சமாக இருந்தது. . 200.பேர் 300பேர் மத்தியில் அப்படி நடனம் ஆடுவது எவ்வளவு சிரமம் ? ஆனால் நான் ருத்ர தாண்டவமே ஆடினேன். ஆடியபோது என்னால் அம்மன் அதிர்வை உணர முடிந்தது. இதற்கு அம்மன் அருள்தான் காரணம்.”
விழாவில் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ், படத்தின் வில்லன் நடிகர்கள் முருகேசன், ராமநாதன்,கவிஞர்கள் சொற்கோ, சிற்பி, மேச்சேரி ராமசாமி,நடிகர் ‘கலைஞர் டிவி’ பெரேரா, பி.ஆர்.ஓ.சங்கத்தின் பொருளாளர் விஜயமுரளி, இசையமைப்பாளர் ஆதீஷ் உத்ரியன். ஒளிப்பதிவாளர் விஜய் திருமூலம் ஆகியோரும் கலந்து கொண்டனார்.