மிமோசா கிரியேஷன்ஸ் சார்பில் பெட்டி சி.கே., மற்றும் பி.ஆர்.மோகன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ’கொஞ்சம் கொஞ்சம்’.
இந்தப் படத்தில் கோகுல், நீனு, ப்ரியா மோகன், மதுமிதா, ஷர்மிளா தாபா, சாந்தாமணி பாட்டி, தவசி, இவர்களுடன் முக்கிய வேடங்களில் அப்புக்குட்டியும், மன்சூரலிகானும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – நிக்கி பி.ஆர்.கண்ணன், இசை – வல்லவன், படத் தொகுப்பு – ரஞ்சித், நடனம் – தினா, மக்கள் தொடர்பு – பெருதுளசி பழனிவேல், தயாரிப்பு – பெட்டி சி.கே., பி.ஆர்.மோகன்.
இந்தப் படத்தை தேசிய விருது பெற்ற மலையாள இயக்குநரான லோகிததாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய உதயசங்கரன் இயக்குகிறார். இது இவருக்கு முதல் படமாகும்.
இதில் கேரளாவுக்கு சென்று இரும்புத் தொழில் ஏற்றுமதி செய்து பணக்காரராகும் வேடத்தில் அப்புக்குட்டி நடிக்கிறார்.
விஞ்ஞானியாகவும், ரெளடியாகவும் இரு மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறார் மன்சூரலிகான்.
அக்கா கேரக்டரில் நடிக்கும் பிரியா மோகனின் ஜாடையிலேயே ஹீரோ இருக்க வேண்டுமென நினைத்து நாடு முழுவதும் தீவிர வேட்டை நடத்தி கடைசியாக கோவையில் கோகுல் என்னும் இளைஞரை பிடித்து அவரையே ஹீரோவாக்கியிருக்கிறார்கள். ஹீரோயினாக கேரளாவைச் சேர்ந்த நீனு நடிக்கிறார்.
‘காதலாகி காதலாகி தேடுதே தேடுதே உந்தன் பாதை’, ‘தளிரே தளிரே உனக்குள்ளே’ என்ற இரண்டு பாடல் காட்சிகளில் கோகுலும், நீனுவும் ஆடிப் பாடும் காட்சிகளை சமீபத்தில் பாண்டிச்சேரியில் படமாக்கியுள்ளனர்.
இதேபோல் ப்ரியா மோகன் நடித்திருக்கும் ‘தேடுகிற பாதையெல்லாம் தெரியாமல் மறைஞ்சிடுமா’ என்கிற பாடல் காட்சியும், அப்புக்குட்டி, ஷர்மிளா தாபா, மதுமிதா மூவரும் கலந்து கொள்ளும் ‘வாழ்க்கை வட்டம்தான் வயசுப் பட்டம்தான்’ என்கிற பாடல் காட்சியும் பாண்டிச்சேரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
தற்போது படத்தின் பின்பணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.