Sunday, April 21
Shadow

2016யில் பெரிய எதிர்பார்ப்பை உண்டு பண்ணி ஏமாற்றிய படங்கள்

ஒவ்வொரு வருடமும் ஒரு படத்திற்கு முதல் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே சில படங்கள் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். சில படங்கள் பற்றிய செய்திகள் வரவர அந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகும். சில படங்களின் பாடல்கள் வெளியாகும் போது அந்தப் படம் மீதான எதிர்ப்பு புதிதாக ஏற்படும். டீசர், டிரைலர் வெளியான பின் அட..வித்தியாசமாக இருக்கிறதே என சில படங்களைப் பார்க்கலாம் என்ற எண்ணம் ஏற்படும்.

இப்படி ஏதோ ஒரு விதத்தில் நம்முள் எதிர்பார்ப்புகளைத் தூண்டி இந்த 2016ம் ஆண்டில் ஏமாற்றிய படங்களும் உள்ளன. சரியான கதையைத் தேர்வு செய்யாதது, தொய்வில்லாத திரைக்கதை இல்லாதது, பொருத்தமான நட்சத்திரங்கள் இல்லாதது, ரசிக்கும்படியான பாடல்கள் இல்லாதது, மனதை ஈர்க்கும் ஒரு காட்சி கூட இல்லாதது, என பல இல்லாத விஷயங்களால் அந்தப் படங்கள் நம்மை ஏமாற்றியிருக்கும்.

அந்தப் படத்தில் நடித்தவர்கள், இயக்கியவர்கள், இசையமைத்தவர்கள் என யாராவது ஒருவராலும் அந்தப் படங்கள் மீது ஒரு நம்பிக்கை வைத்து படத்தைப் பார்க்கக் காத்திருப்போம். படத்தைப் பார்த்த பிறகுதான், அட, இதற்குத்தானா ஆசைப்பட்டோம் என்று நம்மை நாமே நொந்து கொண்டு தொங்கிய முகத்துடன் தியேட்டரை விட்டு வெளியே வந்திருப்போம். அப்படி நம்மை எதிர்பார்த்து பார்க்க வைத்து ஏமாற்றிய 2016ம் ஆண்டு படங்கள் எவை என்பதைப் பார்ப்போம்.

தாரை தப்பட்டை

இளையராஜா இசையில் வெளிவரும் 1000மாவது படம் என்ற தனி அடையாளத்துடன் வந்த படம். அந்த ஒரு சிறப்புக்காகவாவது இயக்குனர் பாலா ஒரு நல்ல கதையை உருவாக்கியிருக்கலாம். இளையராஜாவின் ஆயிரமாவது படம் இப்படியா இருக்க வேண்டும் என்று இளையராஜாவின் ரசிகர்கள் படத்தைப் பார்த்ததும் துவண்டு போய்விட்டனர். இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் பாலா இப்படி ஒரே டைப்பிலான படங்களைக் கொடுத்து சோதிக்கப் போகிறார் என ரசிகர்களும் நினைக்க ஆரம்பித்துவிட்டனர்.

பெங்களூர் நாட்கள்

மலையாளத்தில் பெங்களூர் டேய்ஸ் என்ற பெயரில் 2014ம் ஆண்டு வெளிவந்து மிகப் பெரும் வெற்றி பெற்ற படம். சுமார் 9 கோடி ரூபாய் செலவில் தயாரான இந்தப் படம் சுமார் 50 கோடி ரூபாய் வரையில் வசூலித்ததாக மல்லுவுட்டில் சொல்கிறார்கள். தமிழில் ரீமேக் செய்ய ஆரம்பிக்கும் போதே, இவர் நடிக்கிறார், அவர் நடிக்கிறார் என பலர் பெயரைச் சொல்லி, கடைசியில் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு பொருத்தமில்லாத நட்சத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்க வைத்து ஒரு மோசமான படமாக தமிழில் ரீமேக் செய்தார்கள். தெலுங்கில் பொம்மரிலு என்ற சூப்பர்ஹிட் படத்தைக் கொடுத்த பாஸ்கர் தமிழில் நேரடிப் படத்தை இயக்க ஆசைப்பட்டு தன் பெயரையும் கெடுத்துக் கொண்டார். படத்தின் மொத்த தோல்விக்கும் அதில் நடித்த பொருத்தமில்லாத நட்சத்திரங்கள்தான் காரணம் என்பதுதான் உண்மை.

24

சயின்ஸ் பிக்ஷன் படம் வித்தியாசமான கதை, பிரம்மாண்டமான படம், ஏ.ஆர்.ரகுமானின் இசை படம் வெளியாவதற்கு முன் இந்தப் படம் பற்றி பல்வேறுவிதமான பில்ட்-அப்புகளைக் கொடுத்தார்கள். படத்தைப் பற்றிய புகைப்படங்களைக் கூட வெளியில் விடவில்லை. படம் வெளிவந்த பிறகும் அவர்கள் அதைக் கொடுக்கவில்லை என்பது அதைவிட பெரிய விஷயம். ஓவர்-பில்ட்-அப் உடம்புக்கு ஆகாது என்று சூர்யாவிற்கு அஞ்சான் படத்திற்குப் பிறகு மீண்டும் புரிய வைத்த படம். இந்தப் படத்திற்கு செலவு செய்த தொகையை இதே மாதிரி இதற்கு முன்பு வெளிவந்த இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிகுமாரிடம் கொடுத்திருந்தால் அவரே சூப்பரான ஒரு படத்தை எடுத்துக் கொடுத்திருப்பார்.

கோ 2

2016ம் ஆண்டில் இதற்கு முந்தைய ஆண்டுகளில் வெளிவந்து வெற்றி பெற்ற சில படங்களின் இரண்டாம் பாகம் வெளிவந்தது. “டார்லிங் 2, ஜித்தன் 2, கோ 2, சதுரம் 2, சென்னை 28 – 2, மணல் கயிறு 2” என சில இரண்டாம் பாகம் படங்கள் வெளிவந்தன. இவற்றில் கோ 2 படம் மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அதற்குக் காரணம், 2011ம் ஆண்டில் வெளிவந்த கோ படத்தின் முதல் பாகத்திற்குக் கிடைத்த வெற்றி. அந்த அளவிற்கு இல்லையென்றாலும், ஏதோ 50 சதவீதமாவது திருப்திப்படுத்த மாட்டார்களா என ரசிகர்களும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அதுவும் தவறு என்று நிரூபித்த படம் இது. பாபி சிம்ஹா, ஹீரோவாக நடிப்பதற்கு சரிப்படமாட்டார் என புரிய வைத்த படம் இது. ஜிகர்தண்டா படத்தில் கிடைத்த பெரையும், புகழையும் தக்க வைத்துக் கொள்ளத் தவறி பாபி சிம்ஹா, இழந்த தன்னுடைய பெயரை 2017-லாவது மீட்டெடுப்பார் என்று நம்புவோமாக.

இறைவி

பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய இரண்டு படங்கள் மூலம் இன்றைய இளம் இயக்குனர்களில் வேகமாகப் பெயர் எடுத்தவர் கார்த்திக் சுப்பராஜ். ஜிகர்தண்டா படத்திலேயே தயாரிப்பாளருடன் மோதிக் கொண்டவர். படத்திற்கு அதிகம் செலவு வைத்துவிட்டார் என்ற ச்ச்சையில் சிக்கியவர். இருந்தாலும் இவர் இயக்கி இந்த ஆண்டில் வெளிவந்த இறைவி படம் மீது ரசிகர்களுக்கு நிறையவே எதிர்பார்ப்பு இருந்தது. எஸ்.ஜே.சூர்யா, விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா என மல்டி ஸ்டார் படமாக வந்தது. இறைவி என்பது பெண்களைப் பெருமைப்படுத்தும் படமாக இருக்கும் என படத்திற்கு முன் அனைத்துப் பேட்டிகளிலும் சொன்னார் கார்த்திக். ஆனால், படத்தைப் பார்த்த பிறகுதான் அது பெண்களைப் பெருமைப்படுத்தும் படமாக இல்லை என்பது புரிந்தது. இரண்டு படம் மூலம் கிடைத்த பெயரால், நாம் என்ன சொன்னாலும் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்ற எண்ணம் கார்த்திக்கிடம் மேலோங்கியதோ என்பது இறைவி படத்தைப் பார்த்தவர்கள் கேட்க ஆரம்பித்தார்கள். தமிழ் ரசிகர்களை அவ்வளவு சீக்கிரத்தில் ஏமாற்றிவிட முடியாது என்பது இளம் இயக்குனர்கள் பலருக்கும் புரிந்திருக்கும். அதற்குக் காரணம் இறைவியும் கூடத்தான்.

குற்றமே தண்டனை

காக்கா முட்டை என்ற அற்புதமான படத்தைக் கொடுத்த இயக்குனர் மணிகண்டன் இரண்டாவதாக இயக்கி வெளிவந்த படம் குற்றமே தண்டனை. ஒரு இயக்குனரின் இரண்டாவது படத்தைப் பார்க்கச் செல்லும் ரசிகர்கள் அவருடைய முதல் படத்தைப் பற்றிய பார்வையை மனதில் வைத்துக் கொண்டேதான் படம் பார்க்கச் செல்வார். இரண்டாவது படம் பற்றிய பார்வையும் அந்த இயக்குனரது முதல் படத்தைப் பற்றிய ஒப்பீட்டாகவே இருக்கும். குற்றமே தண்டனை படம் சிறந்த கதையம்சம் கொண்ட படம்தான். ஆனால், அதை திரைக்கதையாக வடித்த விதத்தில்தான் சாதாரண ரசிகனைத் திருப்திப்படுத்தத் தவறிவிட்டார் மணிகண்டன். இளையராஜாவின் இசை என்பதும் படம் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தன்னுடைய படத்தைப் பற்றிய விமர்சனப் பார்வையே தவறு என ஒரு சந்தர்ப்பத்தில் சண்டைக்கும் வந்தார் மணிகண்டன். நல்ல படங்களைத் தரும் போது பாராட்டுவதும், எதிர்பார்த்த படி படம் அமையாத போது அந்த இயக்குனரைப் பற்றி விமர்சிப்பதும் சாதாரண ரசிகர்கள் கூடச் செய்வார்கள் என்பதே உண்மை.

தொடரி

மைனா படத்திற்குப் பிறகு தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குனர்களின் பட்டியலில் பிரபு சாலமனும் இடம் பிடித்தார். அது அவர் இயக்கிய கும்கி படமும் பெரிய வெற்றியைப் பெற்றது. கயல் படத்தில் கொஞ்சம் ஏமாற்றியவர் தொடரி படத்தில் மொத்தமாக ஏமாற்றினார். சத்யஜோதி பிலிம்ஸ் போன்ற பெரிய நிறுவனத்தின் தயாரிப்பு, தனுஷ் போன்ற திறமையான நடிகர் இருந்தும் வலுவில்லாத கதை, விறுவிறுப்பில்லாத திரைக்கதை, சினிமாத்தனமான காட்சிகளுக்கே சவால் விடும் சினிமாத்தனமான காட்சிகள் என தொடரியை முற்றிலுமாக தொய்வாக்கினார். அவர் மீது இருந்த ரசிகர்களின் நம்பிக்கை இந்தப் படத்தில் தோற்றுப் போனது. தனது திறமையை மீண்டும் நிரூபிக்க 2017லாவது மைனா போன்ற ஒரு யதார்த்தமான படைப்பைத் தருவார் என்று நம்புவோம்.

பலே, வெள்ளையத்தேவா

படத்தின் தலைப்புதான் பழைய தலைப்பு என்று பார்த்தால், படத்தையும் ரொம்பப் பழைய ஒன்றாகக் கொடுத்தார்கள். சுப்பிரமணியபுரம் படத்தை இயக்கி, நாயகனாக அறிமுகமான சசிகுமார், அந்தக் காலத்திய பாக்யராஜ், பார்த்திபன் ஆகியோரது இடத்தைப் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், அதன் பின் அவர் இயக்கிய ஈசன் படம் தோல்வியடைந்ததற்குப் பிறகு அவர் படங்கள் இயக்குவதையே நிறுத்திவிட்டார். தொடர்ந்து நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்த ஆண்டில் அவரது நடிப்பில் தாரை தப்பட்டை, வெற்றிவேல், கிடாரி, பலே வெள்ளையத்தேவா ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. இவற்றில் வெற்றிவேல் படம் சுமாரான வெற்றியையும், கிடாரி படம் லாபகரமான வசூலையும் கொடுத்தது. தாரை தப்பட்டை, பலே வெள்ளையத் தேவா ஆகிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்துவிட்டன. பலே வெள்ளையத்தேவா மாதிரியான படங்களில் நடித்து சசிகுமார் தனக்குக் கிடைத்துள்ள பெயரை கெடுத்துக் கொள்ளாமல் இருப்பதுதான் அவருக்கும் நல்லது. வருடத்திற்கு ஓரிரு படங்களில் நடித்தால் கூட, பெயர் சொல்லும்படியான படங்களில் அவர் நடிக்கலாம்.

சில இயக்குனர்கள் மீது, சில நடிகர்கள் மீது நமக்கென ஒரு தனி ஈர்ப்பு இருக்கும். அவர்களிடமிருந்து தரமான படங்களை நாம் எதிர்பார்ப்பது வழக்கம்தான். அப்படித்தான் மேலே சொன்ன படங்களின் இயக்குனர்கள், நடிகர்கள் ஆகியோரிடமிருந்து தங்கத்திற்கும் குறையாத தரமான படங்களை எதிர்பார்க்கிறோம். அந்தப் படங்கள் வெண்கலப் படங்களாகப் படங்களாக இருந்தால் கூடப் பரவாயில்லை, ஆனால், வெற்றுப் படங்களாகப் போய்விட வேண்டாம். சம்பந்தப்பட்டவர்களுக்கும் அது தெரிந்திருக்கும். 2017ல் அவர்களிடமிருந்து தங்கத்தையும் மிஞ்சும் தன்னிகரில்லா படங்களையே எதிர்பார்க்கிறோம்.

இந்த பட்டியலில் இல்லாத இன்னும் சில பல படங்கள் உள்ளது அதை எல்லாவற்றையும் பார்க்க முடியாது என்பதால் முக்கிய படங்களை மட்டும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

Leave a Reply