Thursday, April 25
Shadow

சென்னை வானவில் திரைப்பட விழா!!! ஜனவரி 4 முதல் 8 வரை 5 நாட்கள் நடந்து நிறைவுப்பெற்றது!!!

சென்னை வானவில் திரைப்பட விழாவை (Chennai Rainbow Film Festival {LGBT}) சென்னை தோஸ்த் என்ற அமைப்பானது, ஜனவரி 4-ந்தேதி தொடங்கி 8-ந்தேதி வரை 5 நாட்களுக்கு கோலாகலமாக நடத்தியுள்ளது.

பாலின சிறுபான்மையினா் அல்லது மாற்றுப்பாலினம் கொண்டவா்களைப் பற்றியும், அவா்களின் வாழ்க்கை முறையைப் பற்றியும் ஆவணப்படங்கள், திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் மூலமாகப் பதிவு செய்துள்ள திரைப்படக் குழுவினா்களுக்கு சென்னை வானவில் திரை விழா ஒரு பிரம்மாண்ட மேடையை அமைத்துத்தருகிறது என்றால் அது மிகையல்ல.

முதல் நாளான 4-ந்தேதி மாலை அன்று சென்னை பார்க் ஹயாட் ஹோட்டலில் , பல்வேறு துறைகளில், தளங்களில் எங்கள் சமூக மேன்மைக்காக பணியாற்றும் ஆர்வலர்களை கௌரவிக்கும் பொருட்டு, அவர்களுக்கு வானவில் விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விருதுகளை டாக்டர் கமலா செல்வராஜ் தலைமையில் வழங்கப்பட்டன. அதன்படி, அமெரிக்கா கன்சுலேட் ஜெனரல் பிலிப் மின், பிரிட்டிஷ் தூதரக துணை ஆணையர் பரத் ஜோஷி, ‘தம்பிதுரை’ திரைப்படத்தில் திருநங்கை வேடத்தை நல்ல முறையில் காட்சியளித்ததுக்காக திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி, டோனி & கய் நிறுவனத்தில் பாலின/பாலியல் வேறுபாடின்றி அனைவர்க்கும் வேலைவாய்ப்புக் கொடுத்ததிற்காக நிறுவனர் சாம் பாலுக்கும், பாலின சிறுபான்மையினருக்காக குரல் கொடுத்த நடிகை சோனியா அகர்வாலுக்கும், மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கத்திற்கும் மற்றும் பலருக்கும் இவ்விருதுகள் கொடுக்கப்பட்டன. நடிகர் பரத், நடிகை தீபா ராமானுஜம் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.

5-ந்தேதி அன்று முதல் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இது கோடம்பாக்கத்தில் உள்ள MM திரையரங்கில் நடைபெற்றது. இதில் தமிழ் மகிழ்வன் (gay) முழு நீளப் படமான யாக்னா இயக்கத்தில் வெளிவந்த “23C” மற்றும் பல குறும்படங்கள் திரையிடப்பட்டன.

இதனை தொடர்ந்து 6-ந்தேதி நுங்கம்பாக்கம் உள்ள அலியன்ஸ் பிரான்ல்சேவில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் காட்சிகள் நடைபெற்றன. ஆடம் க்ரெய்க் மற்றும் திரைப்பட பாடகர் அலிஷா தாமஸ் இசை நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கேபிரியேல் அவர்களின் நகைச்சுவை நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.

7-ந்தேதி அன்று மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோஸியல் ஒர்க் கல்லூரியில் நிகழ்ச்சிகள் தொடங்கின. பெங்களூர் சேர்ந்த அலக்ஸ் விக்டரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் ‘கேப்பிடல் ஐ’ என்கிற ஓடியா திரைப்படமும் திரையிடப்பட்டது.

8-ந்தேதி அன்று நிகழ்ச்சிகள் திநகர் AGS திரையரங்கில் நடைபெற்றது. முதன்முறையாக இந்தியாவில் ஹாலிவுட் வெற்றிபெற்ற “ஸ்டோன்வால் ” திரைப்படம் மற்றும் முதல் தமிழ் மகிழ்வினி (லெஸ்பியன்) திரைப்படமான ‘லேடீஸ் & ஜெண்டில்வுமன்’ என்கிற மாலினி ஜீவரத்தினம் அவர்கள் இயக்கிய திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இறுதியில் ‘லேடீஸ் & ஜெண்டில்வுமன்’ திரைப்படத்திற்காக மாலினி ஜீவரத்தினத்திற்கு சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருது நடிகர் ஆதி அவர்களின் தலைமையில் கொடுக்கப்பட்டது. 7 நாட்கள் துபாய் சுற்றலா பரிசாக இந்த விருது வெங்கட் ராமன் விளம்பரதாரர் மூலம் வழங்கப்பட்டது.

பாலின சிறுபான்மையினா் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மக்கள் மன்றத்தின் பார்வைக்கு வைத்து, அவா்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு இந்த ஐந்து நாள் திரைப்பட விழா ஓர் உதவியாக அமைந்தது . வணிகமயமாக்கப்பட்ட திரையரங்குகள் மூலம் வெகுசன மக்களை சென்றடையாத இந்தத் திரைப்படங்களை அவா்கள் முன் திரையிடுவதன் மூலம் பாலியல் சிறுபான்மையினா் மீதான தவறான புரிதல்களை களைய இது ஒரு வாய்ப்பாக அமைந்தது என்பது திண்ணம். அதே நேரத்தில் திரைத்துறையில் ஆர்வம் கொண்ட புதிய படைப்பாளிகளின் திறமைகளை (Independent Indian Film makers) அங்கீகரிக்கவும் மாபெரும் வாய்ப்பையும் இவ்விழா ஏற்படுத்தித் தந்துள்ளது..
அமெரிக்கா, கனடா, பிரேசில், ஆஸ்திரேலியா, எகிப்து, மியான்மா், பிரான்ஸ், தாய்லாந்து, ஜொ்மனி, மலேசியா, சிங்கப்பூா், பிலிப்பெயின்ஸ் மற்றும் மத்திய கிழக்காசிய நாடுகள் உள்பட உலகின் 70 நாடுகளிலிருந்து, திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் விண்ணப்பித்திருந்தன.

இத்திரைப்பட விழாவில் தமிழ்த் திரைப்படங்களைத் தவிர்த்து, ஆங்கிலம் பிரெஞ்சு, ஸ்பானிஷ், போர்த்துகீசு உள்பட பல்வேறு உலக மொழித் திரைப்படங்களும் திரையிடப்படுகிறன்றன. அத்திரைப்படங்கள் பாலின சிறுபான்மையினரின் வாழ்கை முறை மற்றும் அவா்கள் சந்திக்கும் பிரச்சனைகளை வெளிக்கொணரும் வண்ணம் அமைந்தது..

இத்திரைப்பட விழாவானது, பாலின சிறுபான்மையினா் அடையாளம் மற்றும் பன்முகத்தன்மையை மட்டும் வெளிப்படுத்தும் விழாவாக மட்டுமல்லாமல், அவா்களின் பொருமை, பெருமை, அன்பு, காதல், சமஉரிமை, எதிர்பார்ப்பு அத்துனைக்கும் மேலாக சமூக அங்கீகாரம் (Social Recognition) பெறுவதற்கு மக்கள் மன்றத்தின் முன்னால் நின்று போராடும் களமாகவும் அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இது மக்கள் மனதில் விழிப்புணா்வையும், எங்களது சமூகத்தின் மீது அன்பையும் ஏற்படுத்தும் திருவிழாவாக அமைந்தது என்று நிச்சயம் நம்புகிறோம்.

இத்திரைப்பட விழாவில் இந்த ஆண்டு அதன் சிறப்பு தூதராக பிரபல அப்சரா ரெட்டி நியமிக்கப்பட்டார் என்பது சிறப்பு வாய்ந்தது.

Leave a Reply