
சிறுவயதில் தன்னை சினிமாவிற்கு அழைத்துச் சென்ற பாட்டியை தான் இயக்கிய படத்திற்கு அழைத்துச் சென்று சந்தோஷப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி. மதுரை திருநகரை சேர்ந்த இவர், விஜய் சேதுபதி, தமன்னா நடித்த தர்மதுரை திரைப்படம் நேற்று வெளியானது. திருநகர் தேவி கலைவாணியில் 96 வயதான தனது பாட்டி வீரம்மாவுடன் நேற்று சீனு ராமசாமி அப்படத்தை பார்த்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: நான் சிறுவனாக இருந்தபோது எனது பாட்டி எனக்கு கதைகள் கூறுவதுடன் தியேட்டர்களுக்கு அழைத்துச் சென்று சினிமா காண்பித்தார். அவருக்கு, நான் கதைகூறி இயக்கிய சினிமாவை காண்பிக்க அழைத்து வந்தது மகிழ்ச்சியான நாள். ரசிகர்களுடன் ரசிகராக அவர் கைதட்டி ரசித்து பார்த்தது என் வாழ்நாள் பாக்கியம்.
படத்தை பார்த்த பாட்டி, அசிங்கம் இல்லாமல் அனைவரும் ரசிக்கும்படி எடுத்துள்ளாய் என கூறியதை கேட்டபோது எனது ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. மிகுந்த மனநிறைவு அடைந்தேன். மனிதநேயம், மனிதாபிமானம், கருணை, அன்பு, தர்மம் என்ற வார்த்தைகள் தற்போது தவறு என பலர் நினனக்கின்றனர். அதை நீக்கும் வகையில் இந்த படத்தை இயக்கி உள்ளேன்.
எனக்கு எட்டு வயதாயிருந்தபோது, திருநகரில் இதே தியேட்டரில் பாரதிராஜா, ரேவதி நேரில் தோன்றினர். அவர்களை நான் வெளியிலிருந்துதான் பார்த்தேன். பல முறை போர்வையை போர்த்திக் கொண்டு இந்த தியேட்டரில் சினிமா பார்த்துள்ளேன்.
இன்று அதே தியேட்டரில் அமர்ந்து நான் இயக்கிய படத்தை பார்த்தபோது மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியது. இதன்மூலம் நான் இயக்கிய படத்தை மதுரையில் பார்க்க வேண்டும் என்ற எனது நீண்டநாள் கனவும் நிறைவேறியது, என கண்களின் ஓரத்தில் கண்ணீர் கசிய கூறிய அவர், நான் இயக்கும் இடம் பொருள் ஏவல் படம் விரைவில் வெளிவர உள்ளது, என்றார்.