தற்போதைக்கு தமிழ் சினிமாவில் ஒரு உலகப்படம் என்று சொல்லக்கூடியது தான் காக்காமுட்டை. இப்படி ஒரு தரமான படத்தை கொடுத்த இயக்குனர் மணிகண்டன், தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் சேதுபதியுடன் கைக்கோர்த்தால் எப்படியிருக்கும்? அதற்கான பதில் தான் இந்த ஆண்டவன் கட்டளை.
ஒரு சிறிய தவறு மனிதனை எத்தனை பிரச்சனைகளில் மாட்ட வைக்கின்றது என்பதே படத்தின் ஒன் லைன். விஜய் சேதுபதி குடும்ப கஷ்டத்திற்காக லண்டன் செல்ல முடிவு செய்கிறார்.
இவருடன் நண்பர் யோகி பாபுவும் வர, ஒரு ஏஜெண்ட் மூலம் பாஸ்போர்ட் எடுக்கிறார், அதில் கார்மேகன்குழலி என்று ஒரு மனைவி இருப்பதாக பொய்யும் கூறுகிறார்.(எளிதில் விசா கிடைக்க வேண்டும் என்று).
விசா இண்டர்வியூவில் யோகி பாபுவிற்கு விசா கிடைக்க, விஜய் சேதுபதிக்கு கிடைக்கவில்லை, அந்த நேரத்தில் நாசர் வைத்திருக்கும் நாடக கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார்.
அந்த நாடக கம்பெனி லண்டன் போக, விஜய் சேதுபதியும் அழைக்க, இந்த முறை பாஸ்போர்ட்டில் இருக்கும் மனைவி பெயரை எடுக்க வேண்டிய கட்டாயம், இதற்காக அதே பெயரில் இருக்கும் ரித்திகா சிங்கை இதற்கு சம்மதிக்க போராட, இறுதியில் விஜய் சேதுபதி லண்டன் போனாரா? இல்லை பிரச்சனையில் மாட்டினாரா? என்பதே மீதிக்கதை.
இன்று சமூகத்தில் நடக்கும் பல 420 வேலைகளை கண்முன் கொண்டு வருகின்றது, பாஸ்போர்ட்டில் எத்தனை முறைக்கேடு நடக்கின்றது, எதிலும் நியாயம் வேண்டும், தவறான வழியை தேர்ந்தெடுத்தால் எவ்வளவு பிரச்சனைகளை சந்திக்க வேண்டும் என்பதை மணிகண்டன் தெளிவாக கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி இனி நாங்கள் சொல்லி அவர் சிறந்த நடிகர் என்று தெரிய வேண்டியது இல்லை, எந்த கதாபாத்திரம் என்றாலும் சிக்ஸர் தான், அதிலும் வாய் பேச முடியாதவராக இவர் செய்யும் செய்கைகள் திரையரங்கே கைத்தட்டல் பறக்கின்றது.
ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்திற்கு பிறகு என்ன செய்வார் என்று எதிர்ப்பார்க்க, தான் எந்த வழியில் போக வேண்டும் என்பதை தெளிவாக தேர்ந்தெடுத்து நடித்துள்ளார், ரிப்போர்ட்டராக வந்து விஜய் சேதுபதிக்கு உதவும் இடத்திலும் சரி, விவாகரத்திற்காக இவர் கோர்ட் கவுன்ஸிலிங்கில் பேசும் காட்சிகளிலும் சரி, அத்தனை முகபாவனையில் ரசிகர்களை கவர்கிறார்.
விஜய் சேதுபதியின் நண்பராக வரும் யோகி பாபு, ஏற்கனவே இவர் பிஸி தான், இந்த படத்திற்கு பிறகு நிற்ககூட நேரம் இருக்காது போல, இவர் திரையில் வந்தாலே சிரிப்பு சத்தம் பறக்கின்றது, அதிலும் விசா கிடைத்தவுடன் விஜய் சேதுபதியை கலாய்க்கு இடமெல்லாம் செம்ம.
இலங்கை தமிழராக வருபவரும் மனதை கவர்கிறார், தன் குடும்பத்தை தொலைத்து, அகதி என்று கூட சொல்ல முடியாமல் அவர் படும் கஷ்டம், பல வலிகளை தாங்கி செல்கின்றது. படம் பாஸ்போர்ட் முறைக்கேடுகள், ஏமாற்றுதல் பற்றி எடுத்திருந்தாலும் விவாகரத்து பற்றி காட்டிய விதம் சுவாரசியம்.
கே இசையில் பாடல்கள் ஏதும் மனதில் நிற்கவில்லை என்றாலும், பின்னணி இசை நன்றாக உள்ளது, படத்தின் எல்லாம் நன்றாக இருந்தும் திரைக்கதை மட்டும் நாம் தான் தள்ளி செல்ல வேண்டிய கட்டாயம்.
எடுத்துக்கொண்ட கதைக்களம், நடிகர், நடிகைகளின் யதார்த்தமான நடிப்பு.
சென்னையில் ஒரு வீடு வாடகைக்கு கிடைக்க எத்தனை கஷ்டம் என்று காட்டிய விதம்.
யோகி பாபு வரும் அனைத்து காட்சிகளும்.
மொத்தத்தில் ஆண்டவன் கட்டளை பார்ப்பவர்களை இனி ஒரு சிறிய தவறு செய்யக்கூட யோசிக்க வைக்கும்.
Ranking 5/4.5