
கலைப்பயணத்தின் புதிய கட்டத்திற்குள் நுழையும் நடிகர் மகத் ராகவேந்திரா – ‘Mechanic’ புகைப்படத் தொகுப்பு வெளியீடு
நடிகர் மகத் ராகவேந்திரா தனது கலைப்பயணத்தின் அடுத்த கட்டத்தை அறிவித்துள்ளார். தொடக்கம் முதலே ரசிகர்களும் ஊடகங்களும் வழங்கி வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து, புதிய நோக்கத்துடன் மீண்டும் மேடைக்கு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக தன்னைச் சுற்றியுள்ள சூழலிலிருந்து ஓரளவு விலகி, சுய பரிசோதனையும், தன்னிறைவு பயிற்சிகளிலும் ஈடுபட்டதாக மகத் கூறினார். இதன் விளைவாக, மேம்பட்ட ஒரு தனிநபராகவும், கலைஞராகவும் மீண்டும் செயல்படத் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
இந்த மாற்றப் பயணத்தின் அடையாளமாக, ‘Mechanic’ என்ற தலைப்பில் புதிய புகைப்படத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். இது வெறும் உடல் அழகியலைப் பதிவு செய்யும் புகைப்படத் தொடர் மட்டுமல்ல; மனம், உடல், ஆன்மா ஆகியவற்றின் ஒருங்கிணைப்பை பிரதிபலிக்கும் ஒரு கலை முயற்சியாகவும் அவர் விளக்குகிறார்.
இனிமேலும் நல்ல கதைகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் படைப்புகளில் பங்கேற்பதே தனது முதன்மை குறிக்கோளாக இருக்கும் எனவும், அந்த முயற்சிகளில் கிடைக்கும் வெற்றியை சமூகத்திற்கு திருப்பிக் கொடுக்கும் பணிகளில் ஈடுபடுவேன் எனவும் மகத் ராகவேந்திரா தெரிவித்துள்ளார்.
கடவுள் அருளுடன் இந்த புதிய கலைப்பயண கட்டத்தை தொடங்குவதில் மகத் மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், ரசிகர்களின் மற்றும் ஊடகங்களின் தொடர்ந்த ஆதரவை எதிர்பார்த்துள்ளார்.
