Thursday, April 25
Shadow

ஐஸ்வர்யா கவுடா நாயகியாக நடிக்கும் பான் இந்தியா திரைப்படம் ‘எங்கேஜ்மெண்ட்’!

தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா கவுடா, பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் ‘எங்கேஜ்மெண்ட்’ (Engagement) படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

’ஜாகுவார்’ படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஐஸ்வர்யா கவுடா, வளர்ந்து நடிகையாக வலம் வருவதோடு, தனது திறமையால் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் வெளியான கன்னட திரைப்படம் ‘பிரவீணா’-வில் தனது நடிப்பு மூலம் பாராட்டுகளைப் பெற்ற ஐஸ்வர்யா கவுடா, விரைவில் வெளியாக இருக்கும் ‘ரேவ் பார்ட்டி’ என்ற திரைப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருக்கிறார்.

இந்த நிலையில், ‘ரேவ் பார்ட்டி’ திரைப்படத்தில் நடித்த ஐஸ்வர்யா கவுடாவின் திறமையை கவனித்த இயக்குநர் ராஜு போனகானி, பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ‘எங்கேஜ்மெண்ட்’ (Engagement) படத்தில் அவரை நாயகியாக தேர்வு செய்துள்ளார்.

போதைப்பொருள் மற்றும் அரசியலின் இருண்ட பாதையில் செல்லும் இளைஞர்களின் கதையை சொல்லும் பிரமாண்ட பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘ரேவ் பார்ட்டி’ கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. போனகானி எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில், ராஜு பொங்கானி இயக்கியிருக்கும் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

’ரேவ் பார்ட்டி’ திரைப்படம் வெளியான பிறகு நடிகை ஐஸ்வர்யா கவுடா, தென் இந்திய சினிமாவின் முக்கியமான நடிகையாக உருவெடுப்பார் என்று படக்குழு கூறி வந்த நிலையில், அவர் மற்றொரு பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமான ‘எங்கேஜ்மெண்ட்’-ன் நாயகியாக தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் வாய்ப்பு பற்றி நடிகை ஐஸ்வர்யா கவுடா கூறுகையில், “சிறு வயதில் இருந்தே எனக்கு நடிப்பில் ஆர்வம் அதிகம். 2016 ஆம் ஆண்டு ‘ஜாகுவார்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தேன். அதன் பிறகு ‘பிரவீணா’ படமும் எனக்கு பெரிய பிரேக் கொடுத்தது. தற்போது ‘ரேவ் பார்ட்டி’ படத்தில் எனது திறமையை பார்த்து இயக்குநர் ராஜு போனாகானி ‘எங்கேஜ்மெண்ட்’ படத்தில் என்னை கதாநாயகியாக நடிக்க வைத்திருக்கிறார். இந்த வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சியாக இருப்பதோடு, பெரும் நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. ‘எங்கேஜ்மெண்ட்’ படம் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் படமாக இருக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.” என்றார்.