நாசர், ஜெயக்குமார், தலைவாசல் விஜய், வினோத் கிஷன், ஸ்வயம் சித்தா யாமினி, தரணி, பரத், வினோதினி மற்றும் பலர் நடிப்பில் முகமத் ஆசிப் அஹமத்இசையமைத்து இயக்கி இருக்கும் படம் அக்காலி
சரி கதைக்குள் போகலாம் …
காவல்துறை அதிகாரி ஜெய்குமார் தலைமையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க குழு ஒன்று அமைக்கப்படுகிறது. அந்த குழுவினருக்கு மயானத்தில் புதைக்கப்படும் உடல்களை எடுத்துவிட்டு அந்த குழிகளில் போதைப்பொருட்களை பதுக்கி வைக்கிறார்கள், என்ற தகவல் கிடைக்கிறது. அதன்படி அந்த மயானத்தில் போலீஸ் ரகசிய நடவடிக்கை மேற்கொள்ளும் போது, அவர்களுக்கு பல அதிர்ச்சிகமரான உண்மைகள் தெரிய வருகிறது.
சாத்தானை வழிபடும் குழுவினர், அங்கு விசித்திரமான பூஜைகள் செய்வதையும், மனிதர்களை நரபலி கொடுப்பதையும் ஜெய்குமார் கண்டுபிடிக்கிறார். அது குறித்து மேலும் விசாரிக்கும் போது, அந்த குழுவின் பின்னணி, அதைச் சார்ந்தவர்கள் மாயமானது மற்றும் அவர்களின் மர்ம மரணம் போன்றவை பற்றி தெரிய வருகிறது. உயர் அதிகாரி தடுத்தும், இந்த விசயங்களில் தீவிரம் காட்டும் ஜெய்குமார், இதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் போது அவரைச் சுற்றி பல மர்ம விசயங்கள் நடைபெறுகிறது. இறுதியில் அனைத்து மர்ம முடிச்சுகளையும் அவர் எப்படி அவிழ்கிறார் என்பதை சொல்வதோடு, மர்மங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல், கமா போட்டு தொடர்வது தான் ‘தி அக்காலி’ படத்தின் கதை.
சாத்தான்களை வழிபடுபவர்களின் நரபலி சம்பவங்களை மையமாக வைத்துக்கொண்டு விறுவிறுப்பான க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் அதை வித்தியாசமான முறையிலும் சொல்ல முயற்சித்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜெய்குமார், கிறிஸ்துவ மத போதகராக நடித்திருக்கும் நாசர், காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் தலைவாசல் விஜய், ஸ்வயம் சித்தா, வினோத் கிஷன், வினோதினி, அர்ஜய், சேகர், யாமினி, தாரணி, பரத் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதோடு, வித்தியாசமான தோற்றம் மற்றும் உடல் அசைவுகள் மூலம் புதிதாக தெரிகிறார்கள்.
பேய் பிடித்தது போல் ஆக்ரோஷமாக இருக்கும் தாரணி, பிளாக் மேஜிக்கால் ஈர்க்கப்பட்ட யாமினி, சாத்தான் குழுவால் பாதிக்கப்பட்ட அர்ஜய், கருப்பு உலகத்தைச் சேர்ந்த வினோத் கிஷன், நாசர் ஆகியோரின் கதாபாத்திர வடிவமைப்பும், அதில் அவர்கள் வெளிப்படுத்திய நடிப்பும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் கிரி முர்பி, இதுவரை தமிழ்ப் படங்களில் இடம்பெறாத லொக்கேஷன்களை தேடி பிடித்து காட்சிப்படுத்தியிருப்பதும், பயன்படுத்தப்பட்ட வண்ணங்களும் வழக்கமான படங்களில் இருந்து வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.
கலை இயக்குநர் தோட்டா தரணியின் பணி படம் முழுவதும் தெரிகிறது. பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ் என்றாலும், அதனுடன் தோட்டா தரணியின் கலை இயக்கம் கச்சிதமாக பின்னி பிணைந்திருக்கிறது.
VFX காட்சிகள் படத்தில் முக்கிய பங்கு வகிப்பதோடு, பெரும்பாலான காட்சிகளை பிரமாண்டமாக நகர்த்த பெரிதும் பயன்பட்டிருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் முகமது ஆசிப் ஹமீத் நரபலி என்ற கதைக்களத்தை வித்தியாசமான பாணியில் சொல்ல முயற்சித்திருப்பது சில இடங்களில் எடுபட்டாலும், பல இடங்களில் படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. படத்தின் ஆரம்பம் எதிர்பார்ப்புடன் இருந்தாலும், அதன் பிறகு இடம்பெறும் காட்சிகளின் நீளம் அதிமாக இருப்பது திரைக்கதையை தொய்வடைய செய்கிறது. குறிப்பாக படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சிகள் மற்றும் சேசிங் காட்சிகள் ரசிகர்களின் பொறுமையை சோதிப்பதுடன், கதை என்னவென்று புரியாமல் தலையை பிய்த்துக் கொள்ள வைக்கிறது.
மொத்தத்தில், ‘தி அக்காலி’ நம்மை மிகவும் சோதிக்கிறது