Saturday, October 12
Shadow

அக்கரன் – திரைவிமர்சனம் (அன்பானவன் ) Rank 3.5/5

தமிழ் சினிமாவின் அடுத்த பரிமாணம் தான் அக்கரன் திரைப்படம் என்று சொல்லவேண்டும். கதைக்கு மட்டும் முக்கியத்துவம் கொண்டம் படம் ஆடல் பாடல் இல்லாமல் கதைக்கு தேவையான கதாபாத்திரங்களை வைத்து மிக சிறப்பாக எடுத்துள்ள படம் அக்கரன் என்று சொல்லணும்

அறிமுக இயக்குனர் அருண் கே பிரசாத் இயக்கத்தில் எம் எஸ் பாஸ்கர், கபாலி விஸ்வாந்த், வெண்பா, நமோ நாராயணன், ஆகாஷ் பிரேம் குமார், ப்ரியதர்ஷினி அருணாச்சலம், அன்னராஜ் கார்த்திகேயன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “அக்கரன்”.

படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஆனந்த். இசையமைத்திருக்கிறார் ஹரி.

படத்தொகுப்பு செய்திருக்கிறார் மணிகண்டன். குன்றம் புரொடக்‌ஷன் சார்பில் கே கே டி இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

கதைக்குள் போகலாம் ..

குஸ்தி வாத்தியாராக இருந்த எம் எஸ் பாஸ்கருக்கு இரு மகள்கள். மூத்த மகளான வெண்பாவிற்கு திருமண ஏற்பாடு நடத்தப்பட்டு திருமணம் தடைபடுகிறது. நிச்சயம் செய்த மாப்பிள்ளையான கபாலி விஸ்வாந்த் தான் வேண்டும் என்றும் வெண்பா பிடிவாதமாக இருக்க, விஸ்வாந்த் வேண்டாம் என்று எம் எஸ் பாஸ்கர் உறுதியாக இருக்கிறார்.

இதற்கிடையில், இரண்டாம் மகளான ப்ரியதர்ஷினி, மருத்துவம் படிப்பதற்காக நீட் நுழைவு தேர்விற்கு தயாராகி வருகிறார். அதற்காக தனியார் இன்ஸ்டியூட் ஒன்றில் சேர்ந்து படித்து வருகிறார்.

மருத்துவ படிப்பிற்கான சீட் வேண்டுமென்றால் பத்து லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று இன்ஸ்டியூட் நிறுவனம் கேட்பதாக ப்ரியதர்ஷினி வென்பாவிடம் சொல்கிறார்.

அன்றைய தினமே ப்ரியதர்ஷினி மாயமாகிறார். தனது தங்கையை காணவில்லையென்று வெண்பாவும் தனது மகளை காணவில்லையென்று எம் எஸ் பாஸ்கரும் துடிக்கிறார்கள்.

ப்ரியதர்ஷினியை கண்டுபிடித்து தருமாறு போலீஸில் தஞ்சம் புகுகின்றனர் வென்பாவும் எம் எஸ் பாஸ்கரும்.

வழக்கை எடுத்து விசாரிக்க ஆரம்பிக்கின்றனர். அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

ப்ரியதர்ஷினிக்கு என்னவானது.? எம் எஸ் பாஸ்கரின் குடும்பம் என்னவானது.?? இதுவே கதை.

மூத்த நடிகர் தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர் எம் எஸ் பாஸ்கர் மீது தான் படத்தின் மொத்த கதையும் பயணப்படுகிறது. மொத்த படத்தையும் தாங்கி நிற்கிறார். தனது மகள்கள் மீது கொண்ட பாசத்தை வெளிக்காட்டும் இடமாக இருக்கட்டும், இரு மகள்கள் தான் தனது உலகம் என்று வாழ்ந்து வருவதாக இருக்கட்டும் தனது மகள்களுக்கு நடந்ததை நினைத்து உருகி உடைந்து அழும் காட்சியாக இருக்கட்டும் என பல இடங்களில் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்திற்கும் அது நன்றாகவே வொர்க்-அவுட் ஆகியுள்ளது.

கொஞ்சும் தமிழில் பேசி நடிப்பிலும் அழகிலும் அதிகமாகவே ரசிக்க வைத்திருக்கிறார் நடிகை வெண்பா. தனது தங்கையை நினைத்து மனம் உடையும் காட்சியில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார் வெண்பா.

தனக்குக் கொடுக்கப்பட்ட கேரக்டரை அளவாக செய்து முடித்திருக்கிறார் நடிகை ப்ரியதர்ஷினி… ஆகாஷ் பிரேம் குமாரின் நடிப்பும் பாராட்டும்படியாக இருந்தது படத்திற்கு வலுவாக இருந்தது…

ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலமாக நின்றிருக்கிறது. பாடல்கள் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்.

பின்னணி குரல் சேர்ப்பு பணியில் இன்னமும் நன்றாகவே மெனக்கெடல் செய்திருக்கலாம்.

அழகான கதையை கையில் எடுத்த இயக்குனர் அதை படைப்பாக கொடுக்க வேண்டிய இடத்தில் சற்று தடுமாறியிருக்கிறார். காட்சிகளை இன்னுமும் பெரிதாக கொடுத்து படத்திற்குள் நம்மையும் இழுத்துச் சென்றிருக்கலாம்…

எனினும் எடுத்த முயற்சிக்காக படக்குழுவினருக்கு வாழ்த்துகள்.. இந்த கோடை விடுமுறைக்கு குடும்பத்துடன் பார்க்கலாம்

அக்கரன் – அன்பானவன்