
தமிழ் சினிமாவில் எதார்த்தமான படங்களை கொடுத்து தனக்கென ஒரு தனிஇடத்தை பிடித்துள்ளவர் இயக்குநர் அமீர். திரைக்கதையின் மூலம் ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் அமீரின் படங்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. ‘ராம்’ , ‘மௌனம் பேசியதே’ , ‘பருத்திவீரன்’ , ‘ஆதி பகவன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள அமீர், ஒருசில படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், தனது அடுத்த படத்தை ஜல்லிக்கட்டை மையமாக வைத்து இயக்கப் போவதாக அறிவித்துள்ளார் இயக்குநர் அமீர். இந்தப் படத்துக்கு “சந்தனத் தேவன்” என்று தலைப்பிட்டுள்ளார்.
இந்தப் படத்தில் இயக்குநர் அமீர், ஆர்யா, ஆர்யாவின் தம்பி சத்யா ஆகியோர் நாயகர்களாக நடிக்கிறார்கள்.
படத்தின் முதல் தோற்றப் போஸ்டரில் ஒரு ஜல்லிக்கட்டுக் காளையை ஆர்யாவும் சத்யாவும் அடக்குவது போன்ற படம் இடம்பெற்றுள்ளது.
மேலும் அதில், “அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடி, மண்ணை நேசி, மனிதனாக இரு…” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
படத்தை அமீர் பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கிறது.
அமீர்-ஆர்யா முதன்முறையாக இணையவுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘மஞ்சப்பை’ இயக்குநர் ராகவன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள `கடம்பன்` படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. `கடம்பன்` படத்திற்கு பின்னர் ஆர்யா, அமீருடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இனிவரும் படங்கள் தமிழ் கலாசாரத்தை மையபடுத்தி தான் இயக்குவேன் என்று சொன்ன அமீர் அது மட்டும் இல்லை இந்த ஜல்லிக்கட்டு மட்டும் இல்லை இன்னும் பல விஷயங்கள் அடங்கிய கதை தான் இந்த சந்தன தேவன் படம் என்று கூறினார் அடுத்த மாதம் மதுரையில் படபிடிப்பு ஆரம்பம் என்று கூறினார்.