Wednesday, March 29
Shadow

அரியவன் – திரை விமர்சனம் Rank 3.5/5

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அறிமுக நடிகர்‌‌ ஈஷான் நடித்து இந்த வெள்ளிக்கிழமை வெளியாகி உள்ள திரைப்படம் அரியவன். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

கதைப்படி நாயகன் ஈஷான் கபடி விளையாட்டு வீரர். இவரும் நடிகை ப்ரணாலியும் காதலித்து வருகின்றனர். அனாதை ஆசிரமத்தில் வாழ்ந்து வந்த நாயகி தனது தோழியுடன் வசித்து வருகிறார். பெண்களை காதலிப்பது போல் காதலித்து ஏமாற்றும் கும்பல் ஒன்று இளம் பெண்களை காதலித்து ஏமாற்றி அவர்களை பாலியல் தொழிலில் இறங்கிவிடுகின்றனர். அவர்களது தலைவன் டேனியல் பாலாஜி. நாயகியின் தோழியும் இந்த கும்பலில் சிக்கிவிட தற்கொலைக்கு முயல்கிறார். அவரை காப்பாற்றும் நாயகி நாயகனிடம் தெரிவிக்க அவர்களுக்கு உதவ முன்வருகிறார். இறுதியில் வில்லன் கும்பல் பிடிபட்டதா? சிக்கிய இளம் பெண்களின் நிலை என்ன என்பதே இப்படம். புதுமுகம் ஈஷான் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை கொடுத்துள்ளார். சில இடங்களில் இறுக்கமான முகபாவனைகள் இருந்தாலும் ஓரளவுக்கு நியாயம் சேர்த்துள்ளார். நாயகி ப்ரணாலி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சின்ன சின்ன முகபாவனைகள் ரசிக்க வைக்கிறது. ஜேம்ஸ் வசந்தன், வேத் சங்கர், கிரிநந்த் ஆகியோரின் இசையில் பாடல்கள் நன்றாக இருக்கிறது. பின்னணி இசை ஓகே. விஷ்ணுவின் ஒளிப்பதிவு நன்று. உடன் நடித்தவர்களும் தங்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

உங்களுக்கு பிரச்சினை என்றால் வானத்தில் இருந்து யாரும் குதித்து வர மாட்டார்கள். நீங்கள் தான் உங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற கருத்து முன்வைக்கிறது படம். நாயகன் தனக்கான நிறைய காட்சிகள் வைக்காமல் மற்றவர்களுக்கும் வழிவிட்டு நடித்திருப்பது நன்று. தமிழகத்தில் நடந்த சில பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கான தீர்வாக இயக்குனர் சொல்லியுள்ள விஷயம் வேறு வழியில்லை என்றே தோன்றுகிறது.