Tuesday, September 10
Shadow

அதாகபட்டது மகா ஜனங்களே படத்தின் பாடல்களுக்கு ஆயுள் அதிகம் – இசையமைப்பாளர் டி.இமான் !!

அதாகபட்டது மகா ஜனங்களே திரைப்படத்தின் இயக்குநர் இன்பசேகரன் பேசியது :-

எனக்கு பாட்டு கேட்க ரொம்ப பிடிக்கும் என யாரெல்லாம் சொல்லுவார்களோ அவர்கள் அனைவருக்கும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் பிடிக்கும். இசையமைப்பாளர் D.இமான் அவர்கள் எங்களுக்கு கொடுத்த ஆதரவு நான்கு பாடல்களாக வெளிவந்துள்ளது.இப்படத்துக்கு அவர் கூடுதலாக ஒரு பாடலை வழங்கியுள்ளார். அப்பாடல் ஆல்பத்தில் மட்டும் இடம்பெறும். இப்படம் காமெடி கலந்த த்ரில்லர் படமாகும். நடிப்பில் வெவ்வேறு பரிமாணங்களை காட்டி வரும் நடிகர் தம்பி ராமையா அவர்களுடைய மகன் உமாபதி தான் இப்படத்தின் கதாநாயகன். எல்லோருக்கும் சில விஷயங்கள் அமையும் என்று கூறுவார்கள் அதே போல் எனக்கு கதைக்கு ஏற்ற கதாநாயகனை தேடும் போது உமாபதி அமைந்தார். இக்கதைக்கு புதுமுக கதாநாயகன் தான் தேவைபட்டார். அதே போல் நாம் தினம்தோறும் அக்கம்பக்கத்தில் பார்க்கும் முகம் போல் இருக்க வேண்டும் நான் தேடி வந்த போது சரியான தேர்வாக அவர் அமைந்தார். படத்தின் கதாநாயகி ரேஷ்மா ரதோர் இவர் தெலுங்குவில் இரண்டு படங்களில் நடித்துள்ளார். தமிழில் நாங்கள் தான் அவரை அறிமுகம் செய்கிறோம். படத்தில் அவர் கதாநாயகியாக அல்லாமல் கதையின் நாயகியாக இருப்பார். கதைக்கு பொருத்தமான ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். இப்படத்தில் மனோபாலா , பாண்டியராஜன் , நரேன் ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் முழுவதும் கதாநாயகனோடு பயணமாகும் ஒரு கதாபாத்திரத்தில் கருணா நடித்துள்ளார். படத்துக்கு ஒளிப்பதிவு பி.கே.வர்மா. படத்தொகுப்பு ஏ.எல்.ரமேஷ் இவர் அப்பா , நாடோடிகள் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். நடிகர் தம்பி ராமையாவின் மகன் இப்படத்தில் நடித்துள்ளதால் இப்படத்தில் தம்பி ராமையாவின் பங்கு என்ன என்று எல்லோருக்கும் ஒரு கேள்வி இருக்கும். அதற்கு பதில் இதுவரை யாரும் பார்காத தம்பி ராமையாவை இப்படத்தில் பார்க்கலாம் என்று இயக்குநர் இன்ப சேகரன் கூறினார்.

அதாகபட்டது மகா ஜனங்களே திரைப்படத்தின் இசையமைப்பாளர் D.இமான் பேசியது :-

அதாகபட்டது மகா ஜனங்களே திரைப்படம் புதுமுகங்கள் நடித்து புதுமுக இயக்குனருடன் இணைந்து மிக சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ள திரைப்படம். நடிகர் தம்பி ராமையா அவர்களின் மகன் உமாபதி அறிமுகமாகும் இப்படத்தில் ரேஷ்மா ரதோர் என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இன்ப சேகர் அவர்கள் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்களில் வேலை செய்யும் போது மிகவும் இனிமையாக இருந்தது. ஏனென்றால் இப்படத்தில் அனைத்துமே பீல் குட் பாடல்கள் தான். நானும் யுகபாரதி அவர்களும் இணைந்து இப்படத்தில் நான்கு பாடல்களை உருவாக்கியுள்ளோம். அதில் மூன்று பாடல்கள் மெல்லிசை பாடல்கள். மீதம் உள்ள ஒரு பாடல் கதாநாயகனின் அறிமுக பாடல் ஆகும். “ ஏனடி இப்படி என்ன “ என்ற வரிகளோடு துவங்கும் ஒரு பாடல் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இப்பாடலின் கவர் வெர்ஷனாக ஸ்ரேயா கோஷலின் குரலில் ஐந்தாவது பாடல் இருக்கும். இப்பாடல் திரைப்படத்தில் இருக்காது , இப்பாடலை நாங்கள் படத்தின் விளம்பரத்துக்காக பயன்படுத்தவுள்ளோம். எனக்கும் தம்பி ராமையா அவர்களுக்கும் மைனா திரைப்படத்தில் இருந்து நல்ல உறவு இருந்து வருகிறது. அவர் தன்னுடைய மகன் நடிக்கும் இப்படத்துக்கு நான் தான் இசையமைக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் நான் அவரிடம் எனக்கு நிறைய படங்களுக்கு இசையமைக்கும் பணிகள் இருக்கிறது ஆதலால் என்னால் இசையமைக்க முடியாது என்று கூறினேன். முதலில் நீங்கள் கதை கேளுங்கள் கதை பிடித்திருந்தால் இசையமையுங்கள் என்று கூறினார். நானும் கதை கேட்டேன் , கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்கு பணிகள் இருப்பதனால் அதில் இருந்து தப்பிக்க நல்ல கதையை நன்றாக இல்லை என்று என்னால் கூற இயலாது அல்லவா ?? அதனால் கதை பிடித்திருக்கிறது நான் இசையமைக்கிறேன் கூறினேன். என்னுடைய வேலை பளுவை புரிந்து கொண்டு என்னோடு பணியாற்றிய இக்குழுவுக்கு நான் நிச்சயம் நன்றி கூற வேண்டும். நான் சரியான இடைவேளையில் இப்படத்துக்கு பாடல்களை தரவில்லை , நான் எப்போது தருகிறேனோ அப்போது பாடலை படமாக்கிய குழுவுக்கு நன்றி. என்னோடு வேலை செய்ய வேண்டும் என்று அபிமானத்தோடு இருந்த அக்குழுவுக்கு நான் கூடுதல் கவனத்தோடு பாடல்களுக்கு இசையமைத்து அதை அன்பாக திருப்பி கொடுத்தேன். என்னை நேசித்து வருபவர்களின் கதை எனக்கு பிடித்து போகும் பட்சத்தில் அவர்கள் புதியவர்கள் , கை தேர்ந்தவர்கள் என்று பாராது நான் அவர்களோடு பணியாற்றுவேன். இப்படத்தில் பாடல்கள் நன்றாக வர வேண்டும் என்று காரணத்தால் நான் பாடவில்லை.குரலுக்கு இது சரியாக இருக்கும் என்று தோணும் பாடல்களை மட்டும் தான் நான் பாடுவேன். இசையமைப்பாளர் இமான் பாடகர் இமான் அவர்களை மதிக்கவே மாட்டார். இப்பாடலுக்கு நான் பாடினால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் கேட்கும் போது நான் நிச்சயம் பாடுவேன் , மற்றபடி நான் இசையமைக்கும் பாடல்களுக்கு சரியான பாடகர்கள் தான் குரல் கொடுப்பார்கள். இப்படத்தின் பாடல்களுக்கு வாழ்நாள் அதிகம் இருக்கும் , எத்தனை வருடங்கள் கடந்து போனாலும் இப்படத்தின் பாடல்களை அனைவரும் நியாபகம் வைத்து கொள்வார்கள். அந்த ஒரு தரம் இப்படத்தில் உள்ளது என்பதை நான் பெரிதும் நம்புகிறன். நிறைய மக்கள் இப்படத்தின் “ ஏனடி இப்படி என்னை “ சிங்கள் பாடல் வெளியான போது என்னை மிக பெரிய அளவில் உலக தமிழர்கள் அனைவரும் பாராட்டினார்கள். ஆம் , ஒரு பெண் இலங்கையில் இருந்து இப்பாடலை கேட்டு விட்டு சென்னைக்கு நேரில் வந்து என்னை சந்தித்து வாழ்த்தினார். அதிலும் அவர் அவருடைய மகன் கூறியதால் கேட்ட முதல் சினிமா பாடல் இது தான் , உங்கள் பாடல் என்னை மிகவும் கவர்ந்துள்ளது என கூறி என்னை வாழ்த்தியது எனக்கு சந்தோஷத்தை அளித்துள்ளது. இந்த அளவிற்கு இப்பாடல் மிக பெரிய அளவில் வெற்றி அடைந்து எனக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதை வைத்து தான் இப்படத்தின் பாடல்களுக்கு ஆயுள் அதிகம் என கூறுகிறேன் என்றார் இசையமைப்பாளர் D.இமான்.

Leave a Reply