Tuesday, September 10
Shadow

போட்ட காசை எடுத்தால் போதும் : தயாரிப்பாளருக்கு கே. பாக்யராஜ் யதார்த்த வாழ்த்து!

‘அய்யனார் வீதி ‘ படக்கதை. இப்படத்தில் ஐயராக பாக்யராஜும், ஐயனாராக பொன்வண்ணனும் நடித்துள்ள னர்.. ஜிப்ஸி என். ராஜ்குமார் இயக்கியுள்ளார். யூ.கே..முரளி இசையமைத்துள்ளார். ஸ்ரீசாய் சண்முகர் பிக்சர்ஸ் சார்பில் செந்தில்வேல், விஜயசங்கர் தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழா சென்னை ஆர்.கேவி ஸ்டுடியோவில் இன்று நடந்தது.

பொதுவாக சினிமா விழாக்களில் வாழ்த்திப் பேசும்போது ‘இந்தப்படம் நூறுநாள் ஓடவேண்டும்’,’ வெற்றிவிழாவில் சந்திப்போம் ‘என்றெல்லாம் மிகையாகப் பேசி வாழ்த்துவதுண்டு. இன்றைய சினிமா சூழலில் நூறுநாள் ஓடுவது என்பதெல்லாம் சாத்தியமில்லாத ஒன்றாகும்.. ஆனாலும் விழாவுக்கு விழா அப்படித்தான் கூறிக் கொண்டு வருகிறார்கள். ஆனால் ‘அய்யனார் வீதி’ படத்தின் பர்ஸ்ட்லுக்கை வெளியிட்டு விட்டு அந்த விழாவில் பேசிய கே.பாக்யராஜ், ‘தயாரிப்பாளர் போட்ட காசை எடுத்தால் போதும் ‘ என்று யதார்த்தமாக பேசினார்.

விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது ,

” இந்தப் படத்தில் நான் நடித்த போது தயாரிப்பாளர் செந்தில்வேலின் சுறு சுறுப்பைக் கண்டேன். அவருடன் தயாரிப்பில் இணைந்து கொண்டிருக்கிறார் அவரது நண்பர் விஜயசங்கர். பொதுவாகவே சினிமாவில் யாரும் துணைக்கு வரமாட்டார்கள். நீ முன்னாலே போ; நான் பின்னாலே வருகிறேன் என்பார்கள். முன்னாடி போகவிட்டு போகிறவனை ஆழம் பார்ப்பார்கள். ஆனால் அப்படிப் பார்க்காமல், அவரது நண்பர் உடன் வந்து இணைந்திருக்கிறார்.

இப்போது எனக்கு என் பழைய நினைவு வருகிறது.அன்றைக்கு ‘நீ முன்னாலே போநான் பின்னாலே வருகிறேன்’ என்று இருந்தவர் ஆர்.சுந்தர்ராஜன் .நானும் அவரும் சின்ன வயதில் ஒரே பள்ளியில்தான் படித்தோம். ஐந்தாம் வகுப்புக்குப் பிறகு அவர் வேறுபள்ளிக்குப் போனார். நாங்கள் நண்பர்கள்தான் .என்னைப் போலவே அவருக்கும் சினிமா மீது ஆர்வம்.ஆனாலும் லேசா பயம் .அதனால் வரத் தைரியமில்லை. ஆனால் நான் துணிச்சலாக சென்னைக்கு வந்து விட்டேன் .நான் சோறு தண்ணி பார்க்க மாட்டேன். அவருக்கு சாப்பாடு சரியாக இருக்க வேண்டும்.

நான் இங்கு வந்தேன். கஷ்டப் பட்டேன். உதவி இயக்குநராகச் சேர்ந்து விட்டேன். பிறகு மெல்ல மெல்ல வளர்ந்தேன். நான் 92 சி எண்ணுள்ள என் அறையில் இருப்பேன்.அங்கு வருவார். வந்து என் நிலைமையைப் பார்த்து விட்டுப் போவார். நான் உயர்ந்த பிறகு அவரை ஊர்க்காரர்களே விட வில்லை. பாக்யராஜே பெரிய ஆளாய்ட்டார். நீ இங்கு என்னசெய்கிறாய் எனப்.. பாடாய்ப் படுத்த,அவர் புறப்பட்டு விட்டார். இங்கு வந்து பாண்டிபஜார். ,தேனாம் பேட்டை என என்னைப் போலவே இருந்து அவரும் பெரிய ஆளாகிவிட்டார்.
அப்படி இல்லாமல் விஜயசங்கரோ கூடவே வந்து விட்டார். இந்தத் தயாரிப்பாளர்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது. நான் இந்தப் படத்தில் ஆரம்பிக்கும் முன்பு இல்லை. ஆரம்பித்த பிறகுதான் உள்ளே வந்தேன். படத்துக்காக சொந்த ஊரில் படப்பிடிப்பு நடத்தினார்கள். சொந்த ஊரில் படப்பிடிப்பு நடத்துவது ஒரு பெருமையாக இருந்தாலும் சில நேரம் தொந்தரவாகிப் பதற்றமாக இருக்கும்.

ராஜபாளையத்தில் நான் படப்பிடிப்பு நடத்தியது இல்லை. இந்தப் படத்துக்காகத்தான் போனேன். போனபிறகுதான் தெரிந்தது, அங்கே எனக்கு வேண்டியவர்கள் பலபேர் இருந்தார்கள். இதில் நடித்த போதுதான் ஐயனார் பற்றியே எனக்கு விரிவாகத் தெரிந்தது. படத்தில் 108 ஐயனார் பற்றிய பாடலும் வருகிறது.

படத்துக்கு வெறும் ஐயனார் மட்டும்போதாது படத்தில் இளைஞர்களும் வந்தால்தான் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.இளைஞர்யுவனும் நடித்திருக்கிறார். இந்தப்படம் பற்றிப் பெரிய பேராசை எல்லாம் இல்லை. தயாரிப்பாளர் போட்ட காசை எடுத்தால் போதும் என்று மட்டும் வாழ்த்துகிறேன்..தயாரிப்பாளர் போட்ட காசை எடுத்தால் போதும் ,அவர் தப்பித்துக்கொள்வார். நிறைய படங்கள் எடுக்கும் தைரியம் வந்து விடும்.பலருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் நிலைக்கு வந்து விடுவார். ” என்று கே.பாக்யராஜ் இயல்பாகப் பேசி படக்குழுவினரை வாழ்த்தினார்.

Leave a Reply