Tuesday, December 3
Shadow

”பிக் பாஸ் ஹவுஸை விட எங்கள் படப்பிடிப்பில் அதிக கேமராக்கள் இருந்தது” – ”80’ஸ் பில்டப் “ ஆடியோ வெளியீட்டில் சந்தானம்

பிக் பாஸ் ஹவுஸை விட எங்கள் படப்பிடிப்பில் அதிக கேமராக்கள் இருந்தது” – ”80’ஸ் பில்டப் “ ஆடியோ வெளியீட்டில் சந்தானம்

இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில், சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “80’ஸ் பில்டப்”. நாயகியாக ராதிகா ப்ரீத்தி நடிக்க, பிற முக்கிய கதாபாத்திரங்களில் ஆடுகளம் நரேன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், இயக்குநர் சுந்தர்ராஜன், தங்கதுரை, சுவாமிநாதன், கும்கி அஷ்வின், சுபாஷினி கண்ணன், சங்கீதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைக்க, ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசியதாவது, இப்படத்தின் இயக்குநர் கல்யாண் அவர்களை 2015 காலகட்டத்தில் இருந்தே எனக்குத் தெரியும். அவர் வரிசையாக ஆறு படங்களை இயக்கி இருந்தாலும் கூட அவருடைய மொபைல் எண்ணை நான் KSP கல்யாண், அதாவது கதை சொல்லப் போறோம் கல்யாண் என்று தான் பதிவு செய்திருக்கிறேன். அவரது இயக்கத்தில் வந்த படங்களில் எனக்கு கதை சொல்லப் போறோம் திரைப்படம் மிகவும் பிடிக்கும். அதுபோல் ஜாக்பாட், குலேபகாவலி படத்தில் வரும் அந்தப் பாடலை யாரும் மறந்திருக்க மாட்டோம். இயக்குநர் கல்யாணின் காமெடி சென்ஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் இப்படத்தின் படப்பிடிப்பை 15 நாட்களில் முடித்துவிட்டார், 18 நாட்களில் முடித்துவிட்டார் என்றெல்லாம் பத்திரிக்கைகளில் செய்திகளைப் பார்க்கும் போது பயமாக இருக்கிறது. ஏனென்றால் அவை எதுவும் உண்மையில்லை. ஒரு குறிப்பிட்ட டாக்கி போர்ஷனை மட்டும் அவர் 15 நாட்களில் முடித்தார் என்பதே உண்மை. ஆனால் உண்மையாகவே அவரின் உழைப்பின் வேகம் என்னை பிரமிக்க வைக்கிறது. மல்டி கேமரா செட்டப்பை வைத்துக் கொண்டு இவ்வளவு வேகமாக ஒரு படப்பிடிப்பை முடித்துவிட முடியுமா..? என்று எனக்கு இன்னும் ஆச்சரியமாகவே உள்ளது. இப்பொழுது கல்யாண் இயக்கத்தில் எனக்கும் உங்கள் எல்லோருக்கும் பிடித்த நாயகன் சந்தானத்தை வைத்துக் கொண்டு 80’s பில்டப் படத்தை முடித்திருக்கிறார். எப்பொழுதுமே சந்தானம் பேய்-உடன் முட்டுக் கொடுத்தால் அந்தப் படம் வெற்றி பெற்றுவிடும். இப்படத்தில் அவர் மூன்று ஆவிகளுடன் முட்டுக் கொடுத்து நடித்திருக்கிறார். இது மிகவும் கஷ்டம், இல்லாத ஒன்றை இருப்பது போல் நினைத்துக் கொண்டு நகைச்சுவையாக நடிப்பது சவால் நிறைந்தது. இதை எப்படி இவ்வளவு எளிதாக சந்தானம் செய்து முடிக்கிறார் என்று நான் எப்பொழுதுமே ஆச்சரியப்படுவேன். மேலும் சந்தானம் ஒரு சாவு வீட்டில் இருப்பது போல் அமையும் திரைப்படங்கள் பெரும் வெற்றி பெறும். A1 திரைப்படம் உங்களுக்கு நினைவு இருக்கும். சுமார் 5 வருடங்களுக்கு முன்பாக அப்படத்தை நான் பலாஸோவில் பார்த்தேன். A சென்டர் ஆடியன்ஸ் கூட மிகவும் ரசித்த திரைப்படம் அது. அப்படத்தின் வெற்றியைப் போல் 80’s பில்டப் படத்தின் வெற்றியும் அமையும் என்று நம்புகிறேன். சந்தானம் காமெடியில் கலக்கும் திரைப்படங்கள் எதுவுமே சோடை போனதில்லை. மேலும் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் இருக்கிறது. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சின்ன புரட்சி தலைவர் ஆனந்த்ராஜ் ஒரு கவர்ச்சிக் கன்னியாகவே மாறி வளவளப்பான இடுப்பைக் காட்டி வசீகரிக்கிறார். அந்த இடுப்பை பார்க்கும் போதே தொட வேண்டும் போல் இருக்கிறது. இன்னும் பல்வேறு காமெடி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். படத்தின் கதைப்படி நாயகன் சந்தானம் கமல் ரசிகர், அவரின் தாத்தா ரஜினி ரசிகர் என்று வித்தியாசமாக கதையை அமைத்து அதகளம் செய்திருக்கிறார் இயக்குநர். இப்படம் நவம்பர் 24ல் திரைக்கு வருகிறது. இப்படம் இயக்குநர் கல்யாண் அவர்களுக்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அவர்களுக்கும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வாழ்த்துகிறேன். படத்தில் நடித்திருக்கும் பிற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான், பாடலாசிரியர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தை வாங்கி வெளியிடும் சக்தி பிலிம் ஃபேக்டரி சக்திவேலன் அவர்களுக்கும், இசை உரிமத்தை பெற்றிருக்கும் ஜங்லி மியுசிக் பாஸ்கர் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். என்று பேசினார்.

இயக்குநர் கல்யாண் பேசும்போது, “இப்படத்தை இயக்குவதற்கு வாய்ப்பு அளித்த ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் நாளைய இயக்குநர் சீசனில் இருந்து வெளிவந்த உடனே ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் படம் செய்ய வேண்டும் என்று நினைத்தது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தில் தான். அந்த கனவு இன்று நனவாகி இருக்கிறது. எல்லோருமே நான் வேகமாக படப்பிடிப்பை முடித்து விடுகிறேன் என்று பேசினார்கள். ஆனால் அது என் தனிப்பட்ட ஒருவனால் சாத்தியமான விசயம் அல்ல. என்னோடு பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர் நடிகைகள் அனைவரும் ஒத்துழைத்ததால் தான் சாத்தியமானது. அவர்களுக்கு என் நன்றிகள். நான் இந்தக் கதையை சந்தானம் சாருக்காகவே தான் உருவாக்கினேன். கிட்டத்தட்ட ஒரு வருடம் அவருக்காக காத்திருந்தேன். இடையில் பல்வேறு சிக்கல்கள் வந்தது. இருப்பினும் இப்பொழுது திரைப்படம் முழுமையடைந்து வெளியாக இருக்கிறது. வாய்ப்பளித்த சந்தானம் சாருக்கு நன்றி. பத்திரிக்கை நண்பர்கள் இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும்..” என்று பேசினார்.


நடிகர் சுவாமிநாதன் பேசும் போது, “எங்களுக்கு எல்லாமே சந்தானம் தான். சந்தானத்தின் எல்லாப் படங்களிலும் நான் இருக்க வேண்டும் என்பதே எல்லோருடைய ஆசையும். நான் இங்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருப்பது தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா மற்றும் தனஞ்ஜெயன் சார் இருவருக்கும் தான். ஏனென்றால் இவர்கள் டிக் செய்யாவிட்டால் இப்படத்தில் நான் இல்லை. டிடி ரிட்டன்ஸ் படத்தைப் போல் இப்படமும் ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரே காமெடி தான். அந்த பிரேமானந்த் எப்படியோ அதே போல் தான் இந்த கல்யாண். படத்தில் 30 அல்லது 40 ஆர்டிஸ்ட் இருந்தாலும் ஒவ்வொருவரும் தனியாக தெரிவார்கள். அப்படி ஒரு வாய்ப்பை எனக்கு இப்படத்தில் கொடுத்திருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி. இது அவரோடு நான் பணியாற்றும் 4வது படம். கல்யாணின் படங்கள் எப்பொழுதுமே விறுவிறுப்பாகத் தான் இருக்கும். இந்த 80s பில்டப்பும் அப்படித்தான். அரண்மனை படத்தில் சந்தானத்துடன் முழுவதும் வருவது போல் இப்படத்திலும் வருகிறேன். படம் கண்டிப்பாக வெற்றி பெறும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.” என்று பேசினார்.

நடிகர் கும்கி அஷ்வின் பேசும் போது, “இது எனக்கு மிகப்பெரிய மேடை. இந்த மேடையில் நான் இருக்கிறேன் என்பதே பெருமையாக இருக்கிறது. இயக்குநர் கல்யாண் அவர்களைப் பொறுத்தவரை படத்தில் எத்தனை ஆர்டிஸ்டுகள் இருந்தாலும் அனைவருமே தனியாகத் தெரிவோம். இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த இயக்குநர் கல்யாண், நடிகர் சந்தானம், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சார் அனைவருக்கும் என் நன்றிகள்.” என்று பேசினார்.

நடிகர் தங்கதுரை பேசும் போது, “இது அண்ணன் சந்தானத்துடன் டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து நடித்திருக்கும் அடுத்த படம். படத்தின் தலைப்பிலேயே பில்டப் இருப்பதால் நானும் கொஞ்சம் பில்டப்பாகவே வந்தேன். எல்லா படங்களிலும் அண்ணன் சந்தானம் காமெடி மன்னனாக வலம் வருவார். இப்படத்தில் காதல் மன்னனாக வருகிறார். அவருடைய டிரஸ், ஹேர் ஸ்டைல் எல்லாமே படு ஸ்டைலாக இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் எல்லோருமே அவரைப் பார்த்து ரசித்துக் கொண்டு இருப்போம். பெயரிலேயே தானம் இருப்பதாலோ என்னவோ பலருக்கும் பல்வேறு வகைகளில் உதவிகளை மறைமுகமாக செய்து வருகிறார். அவர் என்னிடம் ஒரு முறை, “தங்கதுரை இனி நீ தாண்டா எல்லா ஹீரோக்களுக்கும் ப்ரெண்டு” என்று கூறினார். இப்படத்தில் நான் அவருக்கே ப்ரெண்டாக நடித்து இருக்கிறேன். எல்லோருடைய காதலுக்கும் அவர் தூது போய் உதவி செய்வார். இப்படத்தில் அவரின் காதலுக்கு நான் தூது போய் உதவி செய்கிறேன். அவர் சொன்னது போலவே இன்று பல நாயகர்களுக்கு நண்பனாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். அதற்காக அவருக்கு நன்றி. இயக்குநர் கல்யாணின் திரைப்படங்கள் எல்லாமே குடும்பத்தோடு பார்க்க ஏற்ற திரைப்படங்கள். அவரின் படங்களுக்கு பெண்கள் கூட்டம் அதிகமாக வரும். அவர் வைகை எக்ஸ்பிரஸ் போல ஒரு சினிமா எக்ஸ்பிரஸ், அவ்வளவு வேகமாக காட்சிகளை படம் ஆக்குவார். படப்பிடிப்பு தளம் நேரு ஸ்டேடியத்தில் அவார்டு ஃபங்ஷன் நடக்கும் இடம் போலவே இருக்கும். எங்கு திரும்பினாலும் கேமராக்கள் இருக்கும். 42 ஆர்டிஸ்டுகள் காரில் வந்து இறங்கிக் கொண்டே இருப்பார்கள். கல்யாணுடன் பணியாற்றியது சிறப்பான அனுபவம். ஜாலியாக வேலை வாங்குவார். தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா முகத்தில் எப்பொழுதுமே சிரிப்பு இருக்கும். அவர் வந்தாலே நமக்கு எனர்ஜி தான். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களுடன் நடித்தது மிகப்பெரிய பாக்கியம். அவருடைய கதாபாத்திரம் சிறப்பாக இருக்கும். அது போல் மன்சூர அலிகான், முனிஸ்காந்த், கிங்க்ஸ்லி என பல நட்சத்திரங்கள் இருப்பார்கள். ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒரு பில்டப் உண்டு. 2கே கிட்ஸ் பைக்கில் வீலிங் செய்கிறேன் என்று அந்தப் பொண்னை தோளில் உக்கார வைத்துக் கொள்வார்கள். 90ஸ் கிட்ஸ் பஸ்சின் பின்புற படிக்கட்டில் தொங்கிக் கொண்டு வருவார்கள். அந்தப் பெண் பஸ்சில் முன்னாள் இருக்கும். 80ஸ் கிட்ஸ் மலை மீது இருக்கும் பெண்ணை மலையடிவாரத்தில் இருந்து காதலிப்பார்கள். இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் 2கே கிட்ஸ் பாக்குற பொண்ணை எல்லாம் லவ் பண்ணுவாங்க, 90ஸ் கிட்ஸ் பாக்காமலேயே காதலிப்பாங்க.. இந்த 80ஸ் கிட்ஸ் பொண்ணே இல்லாம காதலிப்பாங்க.. இதை ஏன் சொல்கிறேன் என்றால், அசுரன் படத்தில் வடக்கூரான் கதாபாத்திரத்தில் மிரட்டிய ஆடுகளம் நரேன் சார், இந்த 80ஸ் பில்டப் படத்தில் பெண் வேடத்தில் இருக்கும் ஆனந்தராஜ் சாரை உருகி உருகி காதலிக்கிறார். இந்த வருடம் சிறந்த நடிகைக்கான விருது ஆனந்த்ராஜ் சாருக்கு நிச்சயம் கிடைக்கும்” என்று பேசினார்.

நடிகர் ஆனந்த்ராஜ் பேசும் போது, “இப்படத்தின் தயாரிப்பாளர் என் தம்பி ஞானவேல்ராஜா சார் மற்றும் அவருக்கு துணையாக இருக்கும் தனஞ்ஜெயன் சார் இவர்களின் முயற்சியால் இந்த “80ஸ் பில்டப்” திரைப்படம் மிகச்சிறப்பாக உருவாகி இருக்கிறது. சந்தானம் சாருக்கும் எனக்கும் ஏகப் பொருத்தம். ஒரு நல்ல காம்பினேஷன் எங்களுக்குள் இருக்கிறது. இயக்குநர் கல்யாண் உடன் குலேபகாவலி படத்தில் பணியாற்றினேன். ‘ஜாக்பாட்’ படத்தில் அவர் பணியாற்றுவதைப் பார்த்து ஜோதிகாவிற்கு வியர்த்துவிட்டது. கையில் சாப்பாட்டு தட்டை வைத்துக் கொண்டே ஆக்ஷன் என்று கூறுவார். அவரிடம் ஒரு முதிர்ந்த இயக்குநருக்கான பக்குவம் உண்டு. இப்பொழுதுள்ள இயக்குநர்களில் சிலருக்கு மூன்று கேமராக்களை கொடுத்தால் எங்கு அதை வைப்பது என்றே தெரியாது. இப்படத்தில் பல காட்சிகள் ஒரே ஷாட்டாக எடுக்கப்பட்டது. அந்த மொத்த காட்சிக்குமான விசயங்களை மனதில் வைத்துக் கொண்டு நடிப்பது என்பது மிகவும் சிரமம். எதை உங்களிடம் இருந்து பறித்தாலும் உங்களுடைய திறமையை உங்களிடம் இருந்து யாரும் பறிக்க முடியாது. எப்படி படிப்பு என்பது உங்களது சொத்தோ அது போல் திறமை என்பது உங்களது சொத்து அதை யாரும் உங்களிடம் இருந்து பறிக்க முடியாது. நான் கொலை செய்வதற்கு எத்தனையோ கெட்டப் போட்டு இருக்கிறேன். ஆனால் என்னை கொலை செய்வதற்கு கெட்டப் போட்டவர் இயக்குநர் கல்யாண் தான். ஜாக்பாட் படத்தின் போதே மிகவும் யோசித்தேன், மானஸ்தன் மானஸ்தி இது வொர்க் அவுட் ஆகுமா என்று. இந்த பெண் வேடம் என்பது ஒரு சாஸ்திரம் என்று நினைக்கிறேன். இதற்கு முன் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல்ஹாசன், ரஜினி, அஜீத், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விஷால் இப்படி பலரும் அந்த கெட்டப் போட்டு இருக்கிறார்கள். அது ஹிட் ஆகியிருக்கிறது. நானும் ஜாக்பாட் திரைப்படத்தின் மூலம் அது போன்ற ஒரு கதாபாத்திரம் செய்தேன். இப்படத்தில் இன்னொரு ரகசியம் இருக்கிறது. இப்படத்தில் நான் இன்னொரு கதாபாத்திரமும் செய்து இருக்கிறேன். என் ஒரிஜினல் கெட்டப். அது டிரைலரில் அக்கதாபாத்திரம் காட்டப்படவில்லை. அது சஸ்பென்ஸ். உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா கோப்பை வெல்ல எங்கள் தயாரிப்பு மற்றும் படக்குழுவினர் சார்பாக வாழ்த்துக்கள். நவம்பர் 24ல் எங்களுக்கான கோப்பையை நாங்கள் வாங்க இருக்கிறோம். மிகவும் ஜாலியான திரைப்படம். தியேட்டரில் வந்து பாருங்கள். இது தவிர்த்து தயாரிப்பாளர்கள் தரப்புக்கு ஒரு வேண்டுகோள். ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்களை வர்ணனையாளராக பயன்படுத்துவதைப் போல் மூத்த நடிகர் நடிகைகளை திரைப்படங்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி, வணக்கம். “ என்று பேசினார்.

நடிகை சுபாஷினி கண்ணன் பேசும் போது, “இப்படத்தில் நான் சந்தானத்தின் அக்காவாக நடித்திருக்கிறேன். இப்படம் மிகச்சிறப்பான பொழுது போக்கு திரைப்படம். குடும்பத்தோடு சேர்ந்து பார்த்து ரசிக்க வேண்டிய மிகச் சிறப்பான காமெடி திரைப்படம் இது. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ஆடுகளம் நரேன், ஆனந்த்ராஜ் சார் இவர்களோடு சேர்ந்து நடித்தது மிகப்பெரிய அனுபவம். ஆனந்த்ராஜ் சார் சொன்னதைப் போல் மூத்த நடிகர்களுடன் சேர்ந்து நடிப்பது என்பது ஒரு நடிப்பு பல்கலைகழகத்தில் சென்று வருவதைப் போன்றது. இது போன்ற தருணங்களில் என்னைப் போன்ற இன்றைய தலைமுறை நடிகர்கள் நிறைய கற்றுக் கொள்வோம். இசையமைப்பாளர் ஜிப்ரான் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தமிழ் பேசத் தெரிந்த நாயகியாக வந்திருக்கும் ராதிகா மற்றும் சக கலைஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.” என்று பேசினார்.

இயக்குநரும் நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் அவர்கள் பேசும் போது, நான் பிறர் இயக்கத்தில் நடிக்க செல்லும் போது இவர்களிடம் இருந்து என்ன கத்துக் கொள்ள முடியும் என்று பார்ப்பேன். அதைப் பார்க்கும் போது எனக்கு என்ன தோன்றும் என்றால், நாமும் இவர்களைப் போல் நிதானமாக 10 பதினைந்து டேக் எடுக்க வேண்டும், மெதுவாக காட்சிப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் கல்யாண் என்னிடம் கதை சொல்லியவுடன் எப்படியும் இதை எடுக்க 30 நாள் ஆகும் என்று நான் நினைக்க, அவர் 5 நாள் போதும் என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் மொத்த காட்சியும் ஒரே டேக்கில் படமாக்கப்பட இருக்கிறது என்றார். நான் அது நாடகத்தனமாக இருக்குமே என்று கேட்க, இல்லை சார் நான் கட் செய்து கட் செய்து காட்டிவிடுவேன் என்றார். அங்கு போய் பார்த்தால் பல்வேறு கேமராக்களை வைத்துக் கொண்டு ஒரு ரியாலிட்டி ஷோ சூட் செய்வதைப் போல் படம் பிடித்துக் கொண்டு இருந்தார். ஒரு இயக்குநருக்கு எடிட்டிங் அறிவு இருக்க வேண்டும். அது இருந்தால் தான் அவர்கள் நீண்ட காலம் நிலைக்க முடியும். அவருக்கு மிக உறுதுணையாக இருந்தது ஒளிப்பதிவாளர் ஜேக்கப். எல்லா இடங்களிலும் கேமராவை வைத்துவிட்டால் லைட்டை எங்கு தான் வைப்பது. அந்த தலைவலியை எல்லாம் மிகச்சிறப்பாக கையாண்டது ஒளிப்பதிவாளர் ஜேக்கப் தான். அவருக்கு வாழ்த்துக்கள். சந்தானம் தமிழ் சினிமாவில் காமெடி கதைக்கான ஹீரோக்கள் இல்லை என்கின்ற வெற்றிடத்தை மிகச் சிறப்பாக நிரப்பி இருக்கிறார். சில படங்கள் சரியாக போகவில்லை என்றாலும் கூட அதில் தான் என்ன தவறு செய்தேன், அதை எப்படி திருத்திக் கொள்ள வேண்டும் என்கின்ற புரிதல் அவருக்கு சிறப்பாக இருக்கிறது. கவுண்டமணி, நாகேஷ் போன்றோர் கூட நாயகனாக நடித்துவிட்டு மீண்டும் காமெடி செய்ய போய்விட்டனர். ஆனால் சந்தானம் தான் என்னவாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். மேலும் இயக்குநருடனான புரிதல் அவருக்கு சிறப்பாக இருக்கிறது. அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற என் வாழ்த்துக்கள். எல்லோரும் பேசுவதைப் பார்த்தால் ஆனந்தராஜை அயிட்டமாகவே மாற்றி விடுவார்கள் போல. ஆனந்த்ராஜ் ஆஃப் ஸ்கிரீனில் தான் அதிகமாக கமெண்ட் அடிப்பார். அவர் வில்லனாக நடித்த காலகட்டத்தை விட வெரைட்டியான கதாபாத்திரங்கள் இப்பொழுது தான் கிடைக்கத் துவங்கியிருக்கிறது. சுவாமிநாதனைப் பற்றி சொல்லவே வேண்டாம். அவர் மேடை நாடக நடிகர். இப்படத்தில் எனக்கு மாடர்ன் லோக்கல் எமன் கதாபாத்திரம். ஒரு கைலி மற்றும் டிசர்ட்டை மட்டும் கொடுத்து அனுப்பிவிட்டனர். நான் வலுக்கட்டாயமாக கதாயுதம் வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொண்டேன். விழாவின் நாயகன் ஜிப்ரான் மெலடி கிங். அவரின் மெலடி பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருக்கும் படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

இயக்குநர் கெளரவ் பேசும் போது, “எல்லாரையும் நான் டயர்ட் ஆக்குவேன்.. இவன் என்னையே டயர்ட் ஆக்கிட்டாண்டா” என்று என் குருநாதர் கே.எஸ்.ரவிக்குமார் என்னிடம் கூறினார். நான் உடனே கல்யாணுக்கு போன் செய்து நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள் என்று சொன்னேன். என் பையனும் பொண்ணும் சந்தானம் சாரின் மிகப்பெரிய ரசிகர்கள். அவர்கள் இது போன்ற காமெடிப் படம் சந்தானம் அங்கிளை வைத்து பண்ணுங்கள் என்று என்னை நச்சரிக்கிறார்கள். அதற்காகவாவது கண்டிப்பாக அவருடன் இணைந்து படம் செய்ய விரும்புகிறேன். வெறும் இடுப்பைக் காட்டியே எல்லோரையும் கட்டிப் போட்டுவிட்டார் ஆனந்த்ராஜ் சார். அவரை மீண்டும் என்னுடைய படத்தில் வில்லத்தனம் செய்யும் கொடூர வில்லனாக பார்க்க ஆசை. என்னுடைய படத்தில் அது நடக்கும் என்று நினைக்கிறேன். ஜிப்ரானின் பின்னணி இசை மற்றும் மெலடி எனக்கு மிகவும் பிடிக்கும். அடுத்த படத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற இருக்கிறேன். எந்தப் படத்தை எப்பொழுது வெளியிட வேண்டும் என்கின்ற வியாபார நுணுக்கம் தெரிந்தவர் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, அவரோடு இணைந்து என்னுடைய தயாரிப்பாளர் தனஞ்ஜெயனும் இணைந்திருப்பது மகிழ்ச்சி. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

சக்திவேல் ஃப்லிம் பேக்டரி சக்திவேலன் பேசும் போது, “பேய்களுக்கு பிடித்த ஹீரோ சந்தானம் சார். சந்தானம் சார் பேய் படம் இந்த இரண்டும் இணைந்தாலே படம் ஹிட். தியேட்டருக்கு வரும் ஆடியன்ஸ் எந்தமாதிரி எதிர்பார்ப்பில் வருவார்கள் என்று எங்களுக்குத் தெரியும். அந்த எதிர்பார்ப்பை கண்டிப்பாக இந்த 80ஸ் பில்டப் திரைப்படம் நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கிறோம். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா மற்றும் தனஞ்ஜெயன் இருவருக்கும் 2024ம் வருடம் மிகப்பெரிய வருடமாக இருக்கும். ஏனென்றால் தெலுங்கில் 6 புராஜெக்ட்கள், ஹிந்தியில் இரண்டு புராஜெக்ட்கள், கன்னடத்தில் ஒரு புராஜெக்ட் என்று தொடர்ச்சியாக பல படங்களின் ஆடியோ வெளியீடு, வெற்றி விழா கொண்டாட்டங்கள் இருக்கும். அதற்கு இப்பொழுதே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று பேசினார்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசும் போது, “பொதுவாக காமெடிப் படங்களுக்கு இசை அமைப்பது என்பது மிகவும் கடினம். நான் அதை சில வருடங்கள் தவிர்த்து வந்தேன். த்ரில்லர், ஆக்ஷன் படங்களுக்கு தொடர்ச்சியாக இசையமைத்து ஒரு கட்டத்தில் எனக்கு ஒருவித சைக்கோ மனநிலை வந்துவிட்டது. இனி துணிந்து ஒரு காமெடி படத்திற்கு இசை அமைக்கலாம் என்கின்ற முடிவுக்கு வந்தேன். இப்படத்திற்கு இசை அமைத்தது பெரிய அனுபவம். இயக்குநர் கல்யாண் காமெடி படத்திற்கு இசை அமைப்பதற்கு எனக்கு உறுதுணையாக இருந்தார். அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். அவருக்கு நன்றி. பாடலாசிரியர்கள் முத்தமிழ், என்னமங்களம் பழனிச்சாமி மற்றும் வாமனன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்” என்று பேசினார்.

படத்தின் நாயகி ராதிகா ப்ரீத்தி பேசும் போது, ” நான் ஒரு நல்ல தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் நடிக்க வேண்டும் என்று வெகுநாளாக காத்துக் கொண்டு இருந்தேன். இந்த வாய்ப்பைக் கொடுத்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சாருக்கு நன்றி. நான் கல்யாண் சாரின் மிகப்பெரிய ரசிகை. அவருடைய திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் கல்லூரி காலத்தில் இருந்தே சந்தானம் சாரின் மிகப்பெரிய ரசிகை. என் தோழிகள் என்னை பார்த்தா என்றே அழைப்பார்கள். அவருடன் சேர்ந்து அவருக்கு ஜோடியாக நடித்தது என் பாக்கியம். என்னை அழகாக காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளருக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று பேசினார்.

 

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசும் போது, “ஆனந்தராஜ் சார் கேட்டுக் கொண்டபடியே கண்டிப்பாக மூத்த கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். எங்கள் நிறுவனத்தில் படம் செய்த இயக்குநர்களை விட நான் அதிகமாக பழகிய இயக்குநர் என்றால் அது கே.எஸ்.ரவிக்குமார் சார் தான். ‘சகுனி’ பட டைட்டில் முதலில் சூர்யா நடிக்கும் ஒரு படத்திற்காக முடிவான டைட்டில். சூர்யாவைக் கொண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் தயாரிப்பதற்கான முயற்சி இருந்தது. அப்பொழுது நான் கற்றுக் கொண்ட சினிமா அறிவு மிகப்பெரியது. ஒரு கதை, கதை விவாதத்தில் எப்படி வளருகிறது என்று நான் பார்த்துக் கற்றுக் கொண்டது அவரிடம் தான். சிலருடைய வளர்ச்சி நம்மை பொறாமைபடச் செய்யும், சிலருடைய வளர்ச்சி நம்மை எரிச்சலடையச் செய்யும், இன்னும் சிலரின் வளர்ச்சி நம்மை உண்மையாகவே சந்தோசப்படுத்தும். நடிகர் சந்தானத்தின் வளர்ச்சி அப்படிப்பட்டது. ஆரம்பத்தில் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் நடிக்கும் போது ஒன்றே முக்கால் இலட்சம் நான் சந்தானத்திற்கு சம்பளமாகக் கொடுத்தேன். அடுத்து 18 இலட்சம், அடுத்து 56 இலட்சம் இன்று 3 கோடி வரை சம்பளமாக கொடுக்கிறேன். 30 கோடி சம்பளமாக கொடுக்கும் இடத்திற்கு அவர் வளர வேண்டும் என்று உண்மையாகவே விரும்புகிறேன். அவருடன் சேர்ந்து நானும் வளர வேண்டும் என்று விரும்புகிறேன். இயக்குநர் கல்யாணைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், தயாரிப்பாளரே சற்று மெதுவாக செல்லலாமா..? என்று கேட்கும் அளவிற்கு வேகமாக செல்பவர். திரில்லர் மற்றும் ஆக்சன் படங்கள் வேகமாக எடுத்துவிடலாம். ஆனால் ஒரு காமெடி படத்தினை இவ்வளவு வேகமாக எடுப்பது என்பது மிகப்பெரிய சவால். அதை சிறப்பாக செய்து காட்டியிருக்கிறார். எனக்கே யார் யார் நடிக்கிறார்கள் என்பது ஒரு கட்டம் வரை தெரியாது. ஆடுகளம் நரேன் ஆல் இன் ஆல் அழகுராஜாவில் கலக்கியதைப் போல் இதிலும் கலக்கி இருக்கிறார். விழா நாயகன் ஜிப்ரானுடன் இப்படத்தில் இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. இப்பாடல்களை கேட்கும் போது எனக்கு ஆடுகளம் பாடல்கள் நினைவு வருகிறது. எனக்கு படத்தில் தங்கள் முழு ஒத்துழைப்பை கொடுக்கும் தொழில்நுட்பக்கலைஞர்களை மிகவும் பிடிக்கும். அப்படி ஜிப்ரானையும் பிடித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் ஜேக்கப்னின் வேகம் கல்யாணின் வேகத்திற்கு இணையானது. அவருக்கும் வாழ்த்துக்கள். இயக்குநர் கெளரவ் இயக்கத்தில் ஹிந்தியில் ஒரு பிரபல நாயகனை வைத்து படம் தயாரிக்க இருக்கிறோம். அது குறித்த அறிவிப்பு விரைவில் வரும். இந்த தகவல் இன்னும் கெளரவிற்கு கூட தெரியாது. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.

நடிகர் சந்தானம் பேசும் போது, “எல்லோருக்குமே வாழ்வில் ஒரு பயம் வரும். அப்படி ஒரு பயம் வரும் போதெல்லாம் என் பின்னால் இருந்து என்னை தாங்கிப் பிடிக்கும் என் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த டைட்டிலை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சார் தான் வைத்திருப்பாரோ என்று தோன்றுகிறது. நான் அவரை “அண்ணா” என்று அழைப்பேன். அவரும் என்னை பதிலுக்கு அண்ணா என்று அழைப்பார். கோயமுத்தூர் ஸ்லாங்கில் பேசிக் கொள்வது போல் பேசிக் கொள்வோம். நான் நாள்கணக்கில் கொஞ்சம் அதிகம் சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்த காலத்தில் என்னை அணுகி, இடம் வாங்கி விட்டீர்களா..? என்று கேட்டார். இல்லை என்றதும் இந்த நாள் கணக்கில் சம்பளம் வாங்குவதை விட்டுவிட்டு மூன்று படங்களுக்கு மொத்தமாக சம்பளம் வாங்கிக் கொள்ளுங்கள். அதில் முதலில் ஒரு இடத்தை வாங்குங்கள்” என்று வழிகாட்டி என்னை முதன்முதலாக இடம் வாங்க வைத்த தயாரிப்பாளர் அவர் தான். தானும் வளர வேண்டும். தன்னுடன் சேர்ந்து மற்றவர்களும் வளர வேண்டும் என்கின்ற நல்லெண்ணம் அவருக்கு உண்டு. ரொம்பவே ஞானம் உள்ள புரொடியூஷர் ஞானவேல்ராஜா. 2024ம் ஆண்டு ஞானவேல்ராஜாவுக்கான ஆண்டு என்று கூறினார்கள். இது எனக்கு முன்பே தெரியும். ஏனென்றால் அவர் எப்படி சிந்திப்பார் என்பதை நான் அறிவேன். என் படங்கள் சரியாக போகாத போது, வீட்டிற்கு வந்து என்னுடன் கலந்தாலோசித்து எனக்கு ஆலோசனைகள் வழங்குவார். அது போல் தனஞ்ஜெயன் சார் தயாரிப்பில் கண்டேன் காதலை படத்தில் நடிக்கும் போது ஒரு கிராமத்து கெட்டப் கொடுத்து ஒட்டு மீசையோடு நடிக்க வைத்தது தனஞ்ஜெயன் சாரின் முடிவு தான். தயாரிப்பாளராக மட்டுமின்றி கதாபாத்திர வடிவமைப்பையும் யோசிக்கும் தனஞ்ஜெயன் உடன் இருக்கும் போது ஸ்டுடியோ க்ரீன் இன்னும் பல உச்சங்களை தொடும் என்று நம்புகிறேன்.

இயக்குநர் கல்யாண் என்னிடம் எப்போதுமே கால்ஷீட் கேட்டுக் கொண்டே இருப்பார். நான் என்னிடம் தேதி இல்லை என்று சொல்லிக் கொண்டே இருப்பேன். அப்படி ஒரு முறை கேட்கும் போது 15 நாள் மட்டுமே எனக்கு ப்ரேக் இருக்கிறது என்று சொன்னேன். உடனே அப்படி என்றால் வாருங்கள் சார் நாம் டாக்கி போர்ஷனை முடித்துவிடுமோம் என்று கூறினார். எனக்கு அதிர்ச்சி ஆகிவிட்டது. எப்படி முடிப்பீர்கள், மீது உள்ளதை எப்போது எடுப்பீர்கள் என்று கேட்டேன். ஒரு படப்பிடிப்புக்கு செல்வதற்கு 20 நாட்கள் முன்பே எப்படி படப்பிடிப்பை நடத்துவது என்று திட்டம் இடுவார்கள். இவர் 20 நாளில் மொத்த படப்பிடிப்பையே எப்படி முடிப்பது என்று திட்டமிடுகிறார். பிக் பாஸ் ஹவுஸை விட எங்கள் படப்பிடிப்பு தளத்தில் அதிக கேமராக்கள் இருக்கும். எல்லோரும் அனகோண்டா முட்டையில் ஆம்லேட் போடுவார்கள் என்றார், இயக்குநர் கல்யாண் அவிச்ச முட்டையில் ஆம்லேட் போட்டுவிடுவார். சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது ஐ போனில் ஒரு குளோஷப் ஷாட் எடுத்துக் கொண்டு போவார். சூட்டிங் ஸ்பாட் டாஸ்மாக் கடையின் முன்புறம் போல் எப்பொழுதும் கூட்டமாகத் தான் இருக்கும். எல்லோரும் கிம்பலை வைத்து படப்பிடிப்பு நடத்துவார்கள். இவர் கும்பலை வைத்துக் கொண்டு தான் படப்பிடிப்பு நடத்துவார். எனக்கே எப்படி இவ்வளவு ஆர்ட்டிஸ்டுகளை வைத்துக் கொண்டு இவ்வளவு வேகமாக படப்பிடிப்பு நடத்துகிறார் என்று ஆச்சரியமாக இருக்கும். என்ன நினைத்தாரோ அதை சிறப்பாக எடுத்து முடித்திருக்கிறார் இயக்குநர் கல்யாண். அவருக்கு மிக உறுதுணையாக இருந்தது ஒளிப்பதிவாளர் ஜேக்கப், நான் வீட்டுக்கு கிளம்புகிறேன் என்றால் என் காரில் ஒரு ரிக்கை கட்டி அனுப்பிவிடுவார்கள். எனக்கு மட்டும் இல்லை. எல்லா ஆர்டிஸ்டையும் ஒரு கேமரா துரத்திக் கொண்டு செல்லும். இசையமைப்பாளர் ஜிப்ரான் உடன் ‘ஓடி ஓடி உழைக்கணும்’ என்கின்ற படத்தில் பணியாற்றினேன். அப்படம் வெளியாகவில்லை. அதில் மிகச்சிறப்பான ஒரு மெலடி பாடலை கொடுத்து இருந்தார். இப்படத்தில் அவரோடு பணியாற்ற முடிந்தது சிறப்பான அனுபவம். படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சார், சுந்தர்ராஜன் சார், முனிஷ்காந்த், கிங்க்ஸ்லி இவர்கள் நால்வரும் ஒரு அணி, ஒரு கிண்டலான வசனம் வரும். அதை சிறப்பாக ரவிக்குமார் சார் செய்திருக்கிறார்.
இயக்குநர் சுந்தர்ராஜன் சார் இறந்த பிணமாக நடித்திருக்கிறார். இறந்த பின் காமெடி செய்யும் கதாபாத்திரம். மனோபாலா சார், மொட்டை ராஜேந்திரன் மற்றும் மன்சூரலிகான் சார் மூவரும் ஒரு கேங். பாட்ஷா படத்தில ரஜினி சாரை கம்பத்துல கட்டி வைச்சி அடிச்ச ஆனந்தராஜ் சாரை காட்டன் புடவை கட்ட வைச்சி காமெடி பண்ணியிருக்காங்க…. ஆடுகளம் நரேன் சாரை வேற மாதிரி இந்தப் படத்துல மாத்தி வச்சிருக்காங்க, அதை பார்க்கும் போதே இந்த காமெடி எல்லாம் வொர்கவுட் ஆகும்ங்குற நம்பிக்கை வருது. படத்துல வேலை பார்த்த தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.
சந்தானம் படம் என்றாலே ஹீரோயின் கிடைக்கவில்லை என்கின்ற நியூஸ் வைரல் ஆகும். ஆனா இந்த படத்துல தமிழ் பேசத் தெரிஞ்ச ராதிகா அழகான ஹீரோயினா கிடைச்சிருக்காங்க… இந்தக் கதைக்குள்ள லவ்வை ரொம்ப அழகா இயக்குநர் கொண்டு வந்திருக்காரு… என் தங்கச்சி கதாபாத்திரத்துல சங்கீதா நடிச்சிருக்காங்க… அவுங்ககிட்ட நான் போடுற ஒரு சவால்ல தான் மொத்த கதையும் மூவ் ஆகும். 80 காலகட்டத்துல எடுக்க வேண்டிய படத்தை இப்ப எடுத்திருக்காங்கன்னு நினைக்காம, 80ஸ்ல நடக்குற ஒரு கதையை 80ஸ் காலகட்டத்துக்கே போயி நாம பாக்குறோம்னு நினைச்சி நீங்க பாத்தீங்கன்னா இந்தப் படம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். குடும்பத்தோடு பாக்கலாம். லாஜிக் இதெல்லாம் தூக்கி ஓரமா வச்சிட்டுப் பாத்தீங்கன்னா இந்தப் படம் குடும் பத்தோட பாத்து குதூகலிக்கிற ஒரு படமா இருக்கும். பத்திரிக்கை நண்பர்கள் இந்தப் படத்திற்கு ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன். “ என்று பேசினார்.

Trailer Link ▶️ https://youtu.be/i8Da_4atGko