எம்.எல்.வசந்தகுமாரி என்பதன் விரிவு மெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி என்பதாகும். இவர் 1928 ஜூலை 3ஆம் தேதி பிறந்தவர். எம்.எல்.வியின் தாய் லலிதாங்கி என்பதைப் பார்த்தோம், தந்தையார் ஐயாசாமி ஐயர். எம்.எல்.வியின் பள்ளிக் கல்வி சென்னை நகரத்தில்தான். இசைக் கல்வி ஜி.என்.பாலசுப்ரமணியம் அவர்களிடம். புரந்தரதாசர் பற்றி இசை அறிந்தோருக்கு எல்லாம் நன்கு தெரியும். அவருடைய கன்னட மொழி பாடல்களை தமிழ் நாட்டில் பிரபலப்படுத்தியவர் எம்.எல்.வி. இவர் தன்னுடைய தாயாருடன் வட இந்தியாவுக்குச் சென்றிருந்த சமயம் அவரோடு சேர்ந்து இவரும் பாடியிருக்கிறார். அப்பொது அவருக்கு வயது 12. இவர் தனிக் கச்சேரி செய்தது பெங்களூரில். 1950க்குப் பின்னர் வந்த காலகட்டத்தில் இவருடைய இசை கேட்காத இடமில்லை, நாளில்லை என்று ஆயிற்று. இவர் இசையால் வசப்படுத்திய உள்ளங்கள் ஏராளம். குரலில் ஒரு தனித் தன்மை, மணமகள் படம் இவர் பாடலை உலகறியச் செய்தது.
கர்நாடக இசையுலகில் இவர் எத்தனை பிரபலமோ, அதே அளவுக்கு திரையுலகிலும் இவர் பிரபல பாடகியாக விளங்கினார். 1951இல் வெளிவந்த “மணமகள்” படத்தில் இவர் பாடிய “எல்லாம் இன்ப மயம்” எனும் பாடல் இன்றுவரை சிறந்த இடத்தைப் பெற்றிருக்கிறது. மகா கவி சுப்ரமணிய பாரதியார் “சின்னஞ்சிறு கிளியே” என்ற பாடலை இயற்றியதோடு அதற்கு ராகத்தையும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அந்தப் பாட்டை திரைப்படத்துக்காக இசை அமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமன் அவர்கள் அமைத்த இசையில் எம்.எல்.வி. பாடிய பாடல்தான் இன்றும் பிரபலமாகியிருக்கிறது. “கொஞ்சும் புறாவே” என்றொரு பாடல், இவர் குரலில் கொஞ்சியது. இப்படி இவர் பாடிய பாடல்கள் எல்லாம் காலத்தால் மறக்க முடியாத பாடல்களாகவே அமைந்தன.
காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருப்பாவை திருவெம்பாவை மாநாடுகள் நடத்தச் சொன்னதும், எல்லா ஊர்களிலும் அத்தகைய மாநாடுகள் நடந்தன. அதற்காக அவர் பாடிய திருப்பாவை பாடல்கள் ஒலித்தட்டுகளாக வந்து மக்கள் மனங்களைக் கவர்ந்தன. இசைக் கச்சேரிக்கு எம்.எல்.வி. வந்து மேடையில் அமர்ந்தவுடனேயே அங்கு ஒரு கம்பீரம் தோற்றமளிக்கும். அவர் பாடத் தொடங்கிய பின்னர் முடிக்கும் வரை மக்கள் உள்ளங்கள் கட்டிப்போடப்பட்டிருக்கும். விகடம் கிருஷ்ணமூர்த்தி மேடைகளில் ‘விகடக் கச்சேரி’ செய்வார். பெரும்பாலும் ராஜாஜி, கல்கி ஆகியோர் செல்லும் இடங்களில் எல்லாம் இவர் மேடையேறி விகடம் செய்வார். அதில் ராஜாஜியை வைத்துக் கொண்டே அவரைப் போலவே கையில் கைத்தடி, முகபாவம் எல்லாம் காட்டி அவையை கலகலப்பாக்குவார்.
1951இல் எம்.எல்.வி. இந்த விகடம் கிருஷ்ணமூர்த்தியைத் திருமணம் செய்து கொண்டார், ராஜாஜியின் ஆசியுடன். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள். அந்த மகள்தான் பிரபல நடிகை ஸ்ரீவித்யா. எம்.எல்.வி. புரந்தரதாசரின் படைப்புகளை வைத்து மைசூர் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இளம் வயதில் சங்கீத கலாநிதி விருதினையும் பெற்றார். மத்திய அரசின் பத்ம பூஷன் விருதினையும் பெற்றார். 1948 தொடங்கி 1965 வரையிலான காலகட்டத்தில் இவர் ஏராளமான திரைப்படங்களில் பாடியுள்ளார். இத்தனை புகழையும் ஏற்றுக்கொண்டு இசையுலகின் சக்கரவர்த்தினியாக வாழ்ந்த எம்.எல்.வசந்தகுமாரி 1990ஆம் வருஷம் இதே நாள் தன்னுடைய 63ஆம் வயதில் இறைவனடி சேர்ந்தார்.