எப்படி இருக்கிறது விமல் நடித்துள்ள “தெய்வ மச்சான்” – திரை விமர்சனம்!
நடிகர் விமல் கிராமத்து படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். சில பல பஞ்சாயத்துகளுக்கு பிறகு அவர் நடித்த விலங்கு வெப் சீரிஸ் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது தெய்வ மச்சான் படத்துடன் வந்துள்ளார். இப்படத்தை மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கியுள்ளார். கதைப்படி விமல் எலக்ட்ரிக் கடை வைத்துள்ளார். அப்பா பாண்டியராஜன், அண்ணன், தங்கை அனிதா உடன் வாழ்ந்து வருகிறார். இவரது நண்பர் பால சரவணன். தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்து வருகிறார் ஆனால் எந்த வரனும் செட் ஆகவில்லை. இந்த நிலையில் ஆடுகள் நரேன் தனது வயதான தம்பிக்கு பொண்ணு கேட்டு வருகிறார். ஆனால் விமலும் பாலசரவணனும் சேர்ந்து அவர்களை அவமானப்படுத்தி அனுப்பி விடுகின்றனர். இதனால் இவர்களை பழிவாங்க நினைக்கிறார் ஆடுகளம் நரேன். இது ஒருபுறம் இருக்க விமலுக்கு சிறுவயதில் இருந்தே கனவில் ஒரு குதிரையில் வரும் நபர் சொல்வது அப்படி பலித்துவிடும். அம்மா இறந்துவிடும் ஒன்று சொல்லும்போது அதே போன்று விமலின்அம்மா இறந்துவிடுவார். இதேபோன்று பலமுறை நடக்கிறது. எப்படியோ தங்கச்சிக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்கிறது. கல்யாண வேலை நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் விமலுக்கு கனவு வருகிறது. அதில் உனது தங்கையின் கணவர் மச்சான் இரண்டு நாட்களில் இறந்துவிடுவார் என்று அந்த நபர் சொல்கிறார். இதனால் அதிர்ச்சி அடைகிறார் விமல். இறுதியில் மச்சானை காப்பாற்றினாரா? பழிவாங்கும் கும்பல் என்ன செய்தது? என்பதை காமெடி ஆக சொல்லியுள்ளனர்.
விமலை வைத்து எந்த மாதிரி படம் எடுக்க வேண்டும் என்பதை உணர்ந்து கதை அமைத்துள்ளார் இயக்குனர். படம் முழுவதும் விமலும் பால சரவணனும் இணைந்து நம்மை சிரிக்க வைத்துள்ளனர். பல இடங்களில் காமெடி நன்றாக ஒர்க்அவுட் ஆகியுள்ளது. சாதாரண கதையை அருமையான திரைக்கதையுடன் கொடுத்துள்ளனர். விமல் தனக்கு என்ன வரும் என்பதை உணர்ந்து நடித்துள்ளார். அநாயாசமாக இக்கதாபாத்திரத்தை கையாண்டுள்ளார். பால சரவணன் படம் முழுவதும் வருகிறார். நல்ல ஒரு பேர் சொல்லும் படம் அவருக்கு. அப்பாவாக பாண்டியராஜன். அவ்வளவாக காட்சிகள் இல்லை. தங்கையாக அனிதா சம்பத். வசனங்கள் குறைவு தான். அன்பான தங்கையாக நடித்துள்ளார். மச்சானாக நடித்துள்ளவரின் நடிப்பு நன்று. தீபா சங்கர் வழக்கமான பார்த்த வேடம்தான். அதே ஓவர் ஆக்டிங் பாணிதான் இதிலும். ஆடுகளம் நரேன், அவரது தம்பியாக நடித்தவர் என அனைவரும் படத்துக்கு தேவையான வேலையை செய்துள்ளனர். நாயகி இருக்கிறார் அவ்வளவே. படத்தில் விமலுக்கு டூயட் பாட்டு கூட இல்லை. கதையை நம்பி தன்னை அர்ப்பணித்துள்ளார்.
கேமில் ஜே அலேக்ஸின் ஒளிப்பதிவு திண்டுக்கல் மலை அழகை அற்புதமாக காட்சிப்படுத்தியுள்ளது. புதுமையான இடங்கள் படத்தின் உயிரோட்டத்தை அதிகரித்துள்ளது. அஜீஸின் பின்னணி இசை ஒரு காமெடி படத்துக்கு தேவையானதை கொடுத்துள்ளார். மொத்தத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு நல்லா சிரித்து மகிழ ஒரு நல்ல படமாக வந்துள்ளது. இறுதியில் ஒரு கருத்தும் சொல்லியுள்ளனர். தேவையான கருத்து. மச்சான் துணை இருந்தால் மலை ஏறலாம் என்பார்கள். இந்த தெய்வ மச்சானை நம்பி போய் பார்க்கலாம்.