11 ஆண்டுகளுக்குப் பிறகு நான் நடித்துள்ள தேவி பேய்ப் படம்தான் என்றாலும் முழுமையான பேய்ப் படம் அல்ல என்று நடிகர் பிரபுதேவா கூறினார்.
தேவி படம், அதில் நடித்தது குறித்து அவர் கூறுகையில், “நான் தமிழ் படங்களில் நடித்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது ‘தேவி’ படம் மூலம் மீண்டும் நடிக்க வந்து இருக்கிறேன். ரசிகர்கள் முன்பு போலவே வரவேற்பும் ஆதரவும் அளிக்கிறார்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது. இனிமேல் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் தொடர்ந்து நடிப்பேன்.
சில வருடங்களுக்கு முன்பு மும்பையில் ஒரு நடிகை கொலை செய்யப்பட்டார். அந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தேவி படம் தயாராகி உள்ளது.
ரசிகர்களின் ரசனைகளுக்கு ஏற்றவாறு நல்ல தரமான கதைகளை தேர்ந்தெடுத்து அதை திரைப்படங்களாக வழங்குவதே எங்கள் ‘பிரபு தேவா ஸ்டுடியோஸின்’ முக்கிய கடமை. அதற்கு நல்லதொரு தொடக்கமாக அமைய இருப்பது தான் தேவி.
“இதில் தமன்னா கிராமத்துப் பெண்ணாகவும் நகரத்துப் பெண்ணாகவும் இரண்டு தோற்றங்களில் வருகிறார். சோனு சூட்டும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் 4 பாடல்கள் உள்ளன. ஒரு பாடல் காட்சியில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் எனது நடனம் இருக்கும். கோவை பின்னணியில் இந்த கதையை உருவாக்கி உள்ளோம்.
திகில் படமாக தயாராகி உள்ள தேவியில், பேய் போன்ற அமானுஷ்ய விஷயங்களைப் பார்க்கலாம். ஆனால் முழு பேய் படமாகவும் இருக்காது,” என்றார்.