கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவின் புகழை மேலும் உச்சத்திற்கு கொண்டு சென்ற பெருமைக்குரியவர் கேப்டன் எம்.எஸ்.தோனி. அவருடைய தலைமையில் இந்திய அணி பல்வேறு சர்வதேச கோப்பைகளை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. அப்படிப்பட்ட தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவந்துள்ள படமே ‘எம்.எஸ்.தோனி’.
இப்படத்தில் தோனி எங்கு பிறந்தார்? எப்படி வளர்ந்தார்? எப்படி கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார்? என்பது முதல் தொடங்கி, அவர் இந்தியாவுக்கு உலகக்கோப்பை வாங்கிக் கொடுத்ததோடு படம் முடிகிறது. படத்தில் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து படமாக்கியிருக்கிறார் இயக்குனர் நீரஜ் பாண்டே. தோனியின் வாழ்க்கை வரலாறு பெரும்பாலோனருக்கு தெரிந்த விஷயம்தான். என்றாலும், இந்த படத்தில் விறுவிறுப்பான திரைக்கதை மூலம் அழகாக படமாக்கி அவரைப் பற்றி தெரிந்தவர்கள்கூட ஆச்சர்யப்பட வைக்கும் வகையில் அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கியிருக்கிறார்.
படத்தில் தோனி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுஷாந்த் சிங் ராஜ்புட் பாராட்டப்பட வேண்டியவர். இவர் செய்கிற ஒவ்வொரு செய்கையும் தோனியை ஒத்துப்போவது ஆச்சர்யமளிக்கிறது. குறிப்பாக கிரிக்கெட்டில் தோனியின் ஸ்பெஷல் ஷாட்டான ஹெலிகாப்டர் ஷாட், அவருடைய நடை என அச்சு அசலாக செய்து அசத்தியிருக்கிறார். இதற்காக அவர் கஷ்டப்பட்டது வீண் போகவில்லை.
இவர் படத்தில் நடித்திருக்கிறார் என்று சொல்வதைவிட தோனியாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அவ்வளவு தத்ரூபமாக இருக்கிறது இவருடைய நடிப்பு. அதேபோல், செண்டிமென்ட் காட்சிகளில் எல்லாம் நம்மையும் கண்கலங்க வைத்திருக்கிறார். விளையாட்டு தொடர்பான காட்சிகளில், தோனி விளையாடும் அசல் காட்சிகளில் அவருடைய முகத்தில் கதாநாயகன் ராஜ்புத் முகத்தை ஒட்டி மார்பிங் செய்திருப்பது சிறப்பு. கிராபிக்ஸ் என்று தெரியாத அளவுக்கு அந்த காட்சிகள் அமைந்துள்ளன.
படத்தின் நீளம் 3 மணி நேரத்துக்கும் மேலாக இருந்தாலும், படம் போரடிக்காதவாறு காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு. படத்தில் எந்தவொரு காட்சியையும் குறை சொல்ல முடியாத அளவுக்கு இயக்குனரின் கைவண்ணம் கச்சிதமாக அமைந்திருக்கிறது. இதுதவிர தோனியின் காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. கிரிக்கெட்டில் ஆக்ரோஷமாக இருக்கும் தோனியால் இப்படியும் காதல் செய்யமுடியுமா? என்று ஆச்சர்யப்பட வைக்கிறது அந்த காதல் காட்சிகள்.
மேலும், படத்தில் தோனியின் அக்காவாக பூமிகா நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு திரையில் அவருக்கு மிகப்பெரிய கதாபாத்திரம். தனக்குரிய கதாபாத்திரத்தை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். தோனியின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனுபம் கெர்ரும் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அமல் மாலிக்கின் இசையில் பாடல்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது. இந்தியில் இருந்து தமிழுக்கு வரும் பாடல்கள் அவ்வளவாக ரசிக்கும்படி இருக்காது. ஆனால், இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும்படியாக இருப்பது சிறப்பு. சஞ்சய் சௌத்ரியின் பின்னணி இசையும் பெரிதாக பேசும்படி இருக்கிறது. சந்தோஷ் துண்டியாயில் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.
மொத்தத்தில் ‘எம்.எஸ்.தோனி’ சதம் அடிப்பார்.
Rank 5/4.5