
இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படத்தின் இசை & முன்னோட்டம்
ஆர். கே. ட்ரீம் ஃபேக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில், டி. ராதாகிருஷ்ணன் தயாரித்து, எஸ். கார்த்தீஸ்வரன் இயக்கி நடித்துள்ள ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படம் சோரியன் மீடியா என்டர்டெயின்மென்ட் வெளியீடாக டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் கே. பாக்யராஜ் இசை மற்றும் டிரெய்லரை வெளியிட்டார். விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ. எம். வி. பிரபாகர் ராஜா மற்றும் இயக்குனர்–நடிகர் கௌரவ் நாராயணன் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
எஸ். கார்த்தீஸ்வரன் இயக்கும் இந்த படத்தில் லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, ஆதவன், அகல்யா வெங்கடேசன், ஸ்ரீநிதி, கோதை சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு — என். எஸ். ராஜேஷ் குமார்;

இசை — ஸ்ரீகாந்த் தேவா.
சமூகத்தில் அதிகரித்து வரும் வகைவகையான மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் டி. ராதாகிருஷ்ணனுடன், கே.எம்.பி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் எம். புவனேஸ்வரன், எஸ். பி. எம் ஸ்டுடியோஸின் சி. சாஜு–ஜோதிலட்சுமி இணைத் தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.
விழாவில் கே. பாக்யராஜ், கௌரவ் நாராயணன், சி.பி.எஃப்.சி ஆலோசனைக்குழு உறுப்பினர் சௌதாமணி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் டி. ராதாகிருஷ்ணன
“சினிமாவுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லாத நிலையிலிருந்த நான், இந்தப் படக்குழுவின் காரணமாகத் திரை உலகில் கால் பதித்திருக்கிறேன். அனைவருக்கும் என் நன்றி.”

பாடலாசிரியர் கருணாகரன்
“ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் முழுப் பாடல்களையும் எழுதும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. நீண்டநாள் ஆசை இன்று நிறைவேறியது.”
நடிகை மஞ்சு
“எல்லோருமே வாழ்க்கையில் ஏதாவது ஒரு முறையாவது மோசடியில் சிக்கியிருக்கிறோம். உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் கண்டிப்பாக திரையரங்கில் வந்து ஆதரிக்க வேண்டும்.”
நடிகர் பிளாக் பாண்டி
தன் ஆன்லைன் மோசடி அனுபவத்தை பகிர்ந்து கொண்டு,
“ஒரு தவறான லிங்க் காரணமாக என் வங்கி கணக்கிலிருந்த முழு பணமும் திருடப்பட்டது. இப்படம் போன்ற படங்கள் தேவை,” என்றார்.
தணிக்கை குழு உறுப்பினர் சௌதாமணி
“கடந்த ஒரு ஆண்டில் இந்தியாவில் 17,000 கோடி ரூபாய் அளவுக்கு சைபர் மோசடிகள் நடந்திருக்கின்றன. சமூக விழிப்புணர்வை தூண்டும் இப்படக் குழுவை பாராட்டுகிறேன்.”

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா
“என் தந்தை தேவாவின் பிறந்தநாளில் அவரை கௌரவித்ததற்கான நன்றி. பொருத்தமான கதையைத் தேர்வு செய்து, தரத்தில் சலுகை இல்லாமல் படத்தை உருவாக்கியுள்ளார் தயாரிப்பாளர். இப்படம் லாபம் தரும்.”
இயக்குநர் கௌரவ் நாராயணன்
“’பார்க்கிங்’ படத்திற்கு தேசிய விருது கிடைக்க பின்னணியில் கே. பாக்யராஜ் படங்களின் திரைக்கதை மந்திரம் காரணம். மோசடிகளை பற்றிய படங்கள் எடுக்கப் பெரும் ஆராய்ச்சி தேவை. இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும்.”
ஏ. எம். வி. பிரபாகர் ராஜா (MLA)
“இன்று எல்லா துறைகளிலும் மோசடிகள் அதிகம். படித்தவர்களே அதிகம் ஏமாறுகிறார்கள், காரணம் பேராசை. மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே மோசடிகள் குறையும். இப்படம் அதற்கு தேவையான செய்தியை தருகிறது.”
இயக்குநர்–நாயகன் எஸ். கார்த்தீஸ்வரன்
“நாம் மீண்டும் மீண்டும் மோசடியில் சிக்கிக் கொள்கிறோம். நான்கு விதமான மோசடிகளை பொழுதுபோக்குடன் கலந்து இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன். ஹீரோவாக நடித்து இயக்க வேண்டும் என்ற நம்பிக்கையை முதலில் அளித்தவர் கே. பாக்யராஜ்.”
இயக்குநர் கே. பாக்யராஜ்
“மோசடி செய்யும் பேர்வழிகளுக்கு பொதுமக்களைவிட அதிக மூளை. அவர்களுக்கு எதிரான சுவாரசியமான கதையாடல் இப்படத்தில் இருப்பதாக உணர்கிறேன். இதுபோன்ற உண்மை சம்பவங்களால் உருவான படங்கள் வெற்றி பெறும்.”
