Saturday, December 14
Shadow

காமி – திரைவிமர்சனம் Rank 3/5

தெலுங்கு பட இயக்குனர் வித்யாதர் காகிடா இயக்கத்தில் விஸ்வக் சென், சாந்தினி சவுத்ரி, அபிநயா, ஹைகா பெட்டா நடிப்பில் தெலுங்கு மொழியில் உருவாகியிருக்கும் படம் தான் காமி.

தெலுங்கு உலகில் ஏற்கனவே வசூலில் சக்கை போடு போடும் படமான காமி, தமிழ்நாட்டிலும் நல்லதொரு வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஸ்வீகர் அகஸ்தி. ஒளிப்பதிவு செய்திருக்கிறார் விஸ்வாந்த் ரெட்டி .

பின்னணி இசை – நரேஷ் குமரன்

தயாரிப்பாளர்: கார்த்திக் சபரீஷ்

கதைக்குள் சென்று விடலாம்…

தேவதாசியாக வாழ்ந்து வரும் அபிநயா தனது மகளை கயவர்கள் சிலரிடம் இருந்து காப்பாற்ற போராடி வருகிறார்.

சில சிறுவர்களை ஜெயில் போன்ற ஒரு கட்டிடத்தில் அடைத்து வைத்து, அவர்களை வைத்து ஏதோ ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது ஒரு டீம்.

அகோரியாக வாழ்ந்து வரும் விஸ்வக் சென்னின் உடம்பில் மனிதனின் கை பட்டால், அவரது உடல் பழுப்பாக மாறி மயங்கி விழுகிறார். இந்த துயரம் போக வேண்டுமென்றால், இமயமலையில் 36 வருடங்களுக்கு ஒரு முறை முளைக்கும் அதிசய மின்னும் காளானை எடுக்க வேண்டும் என்று கூறுகிறார் முனிவர் ஒருவர். அதைக் கேட்டு இமயமலைப் பயணப்படுகிறார் விஸ்வக் சென்.

இந்த மூன்று கதைகளும் ஒரு இடத்தில் மையமாகிறது. அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் விஸ்வக் சென், வித்தியாசமான ஒரு நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அகோரியாக வாழும் மனிதனின் மனநிலை எப்படி இருக்கும், அவரது உடல்மொழி என்னவாக இருக்கும் என்பதையெல்லாம் புரிந்து கொண்டு ஒவ்வொரு காட்சியிலும் தனது தனித்துவத்தை நிரூபித்திருக்கிறார் நாயகன் விஸ்வக்.

சிங்கத்தோடு போராடும் காட்சியாக இருக்கட்டும், மலைப்பகுதியில் இருந்து கீழே விழும் காட்சியாக இருக்கட்டும் என பல திகிலூட்டும் காட்சிகள் படத்தில் மிகப்பெரும் வலுவை சேர்த்துள்ளது.

நாயகி சாந்தினி தன்னால் முடிந்த முயற்சியைக் கொடுத்திருக்கிறார். நடிப்பில் ஈர்ப்பு கொண்டு வந்து அசத்தியிருக்கிறார் நடிகை அபிநயா. தனது மகளோடு சேர்ந்து வாழத்துடிக்கும் கதாபாத்திரத்தில் அதிகமாகவே கவனம் ஈர்த்திருக்கிறார். தேவதாசி வாழ்வியலை கண்முன்னே கொண்டு வந்திருக்கின்றனர்.

சிறுமியாக நடித்த ஹரிகா பெட்டாவின் நடிப்பும் பாராட்டும்விதமாக இருந்தது.

படம் எடுக்கட்ட கதைக்களம் படத்திற்கு மிகப்பெரும் பலம். காலகட்டத்தை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். படத்தின் பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார்கள்.

கதையின் போக்கு வேறு வேறு விதமாக சென்று ஆங்காங்கே சற்று குழப்பத்தை ஏற்படுத்தினாலும், திரைக்கதையின் வேகம் படத்திற்கு சரியாக ஈடு கொடுத்து சென்றிருக்கிறது.

மொத்தத்தில் காமி – விறுவிறுப்பு  Rank 3/5