கிறிஸ்தவம், முஸ்லீம் , இந்து, ஏன் நாத்திகம் பேசும் மக்களால் கூட நேசிக்க படும் ஒரு தெய்வம் விநாயகர். மிக விரைவில் வர இருக்கும் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாட மக்கள் அனைவரும் தங்களை தயார் செய்து வருகின்றனர். அதற்கு ஓர் உதாரணம் தான் ‘ஆர்ட் ஹவுஸ்’ சார்பில், விரைவில் வெளியாக இருக்கும் ‘மியாவ்’ படத்தின் தயாரிப்பாளர் வின்சென்ட் அடைக்கலராஜ் தொடங்கி இருக்கும் ‘கணேஷ் 365’ என்னும் ஓவிய கண்காட்சி. சென்னையில் நேற்று தொடங்கிய இந்த அற்புதமான ‘கணேஷ் 365’ ஓவிய கண்காட்சியை, தேசிய விருது பெற்ற நடிகரும், விரைவில் வெளியாக இருக்கும் ‘வல்லவனுக்கும் வல்லவன்’ படத்தின் கதாநாயகனுமான பாபி சிம்ஹா தொடங்கி வைத்தார். அவருடன் இணைந்து சன் மியூசிக் தொகுப்பாளர் ஆடம்ஸ்சும் இந்த கண்காட்சியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. சக்தி விநாயகர், கண் திருஷ்டி விநாயகர், பால விநாயகர், பக்தி விநாயகர் என விநாயகரின் 365 அவதாரங்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்று இருக்கிறது. இந்த ஓவியங்கள் அனைத்தும் குழந்தைகளாலும், பள்ளி மாணவர்களாலும் வரைய பட்டிருப்பது மேலும் சிறப்பு.
“எல்லா மதத்திலும் பொதுவாக போதிக்கப்படுவது ஒன்று தான்…அது தான் ‘அன்பு’. நாம் எந்த மதத்தினராக இருந்தாலும் சரி, நம்முடைய சக மக்களின் மதத்திற்கும் உரிய மரியாதையை நாம் கொடுக்க வேண்டும். அது தான் ஒரு உண்மையான இந்திய குடிமகனுக்கு அழகு. எனது சிறு வயது முதலே விநாயகர் மீது எனக்கு ஒரு தனி அன்பு உண்டு.அந்த அன்பை வெளிப்படுத்தும் வண்ணமாக தான் நாங்கள் இந்த ‘கணேஷ் 365’ ஓவிய கண்காட்சியை தொடங்கி இருக்கிறோம். விரைவில் வர இருக்கும் விநாயகர் சதூர்த்தியை நாம் அனைவரும் அன்போடு கொண்டாட வேண்டும் என்பது தான் இந்த கண்காட்சியின் மைய கருத்து…இன்று தொடங்கி இந்த காண்காட்சியானது வருகின்ற செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்து நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பான ‘விநாயகர் சதூர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்…” என்கிறார் ‘மியாவ்’ படத்தின் தயாரிப்பாளரும், ‘ஆர்ட் ஹவுஸ்’ கலை கூடத்தின் உரிமையாளருமான வின்சென்ட் அடைக்கலராஜ்.
“விநாயகரின் 365 அவதாரங்களை வரைவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அதுவும் இந்த ஓவியங்கள் அனைத்தும் குழந்தைகளால் வரைய பட்டிருக்கிறது என்பதை நினைக்கும் போது எனக்கு மிக பெரிய வியப்பாக இருக்கிறது. இத்தகைய அற்புதமான ஓவிய கண்காட்சியை திறந்து வைப்பதில் நான் எல்லையற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். இப்படி ஒரு உன்னதமான முயற்சியை மேற்கொண்டு இருக்கும் வின்சென்ட் அடைக்கலராஜ் சாருக்கு எனது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்…” என்று கூறினார் ‘வல்லவனுக்கு வல்லவன்’ படத்தின் கதாநாயகன் பாபி சிம்ஹா. இந்த கணேஷ் 365 ஓவிய கண்காட்சியின் மூலம் திரட்டப்படும் நிதியானது, கௌதமியின் ‘லைப் அகைன்’ என்னும் புற்று நோயாளிகளுக்கான தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.