மதுரையில் பிறந்து வளர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் ஜூலியன் கரிகாலன் என்ற இயக்குநரின் புதிய படமான ‘லவ் அண்ட் லவ் ஒன்லி’ என்ற ஆங்கில படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
இசைஞானியின் பங்களிப்பு பற்றி பேசிய இயக்குநர் ஜூலியன் கரிகாலன், “இந்தப் படம் ஒரு காதல் கதைதான். நான் பிறந்து படித்து வளர்ந்த மதுரையில் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என்று சொன்னால் நான் அவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று அர்த்தம்.
ஆனால் ஆஸ்திரேலியாவில் அப்படியல்ல. திருமணம் செய்து கொள்ளாமலேயே பல வருடங்கள் சேர்ந்து வாழலாம். குழந்தைகளையும் பெற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா என்று யோசிப்பார்கள். பேசுவார்கள். இருவருக்கும் அது பிடித்திருந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வார்கள். ஒருவர் மறுத்தாலும் திருமணம் நடக்காது.
இப்படிப்பட்ட சூழலில் இந்திய மாணவர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்துக் கொண்டே படிக்கிறார். அப்போது அங்கு உடன் வேலை செய்யும் ஒரு ஆஸ்திரேலிய பெண்ணுக்கும் அவருக்குமிடையே காதல் மலர்கிறது. அந்தக் காதலின் முடிவு என்ன..? அவர்கள் ஆஸ்திரேலிய கலாச்சாரத்தில் வாழ முடிவெடுத்தார்களா..? அல்லது மதுரையின் கலாச்சாரப்படி வாழ்ந்தார்களா என்பதுதான் படத்தின் முடிவு.
இந்தப் படத்தில் மதுரைக்கார நாயகனாக ரோஹித் நடித்திருக்கிறார். நாயகியாக ஜார்ஜியா என்ற நடிகை நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தை எடுத்து முடித்தவுடன் இதற்கு இசைஞானிதான் இசையமைக்க வேண்டும் என்று விரும்பி சென்னைக்கு வந்து அவரிடத்தில் பேசினேன். அவரும் சம்மதித்தார். உடனேயே அவருக்கு படத்தை போட்டுக் காட்டினேன். படம் பார்த்து பாராட்டினார்.
இந்தப் படத்தில் ஒரு பாடலையும் நானே எழுதியிருக்கிறேன். அந்தப் பாடலுக்கு இசைஞானி இளையராஜா அசத்தலான மெட்டு போட்டுக் கொடுத்தார். அந்தப் பாடலை ஆஸ்திரேலியாவின் புகழ் பெற்ற பாடகியான ரச்சல் லெச்சர் பாடியிருக்கிறார். படத்திற்கு பின்னணி இசையை அழகாக அமைத்துக் கொடுத்துள்ளார் இசைஞானி. இது அனைத்தும் ஐந்தே நாட்களில் முடிந்துவிட்டது.
ஹாலிவுட் படங்களுக்கு இணையான காதல் உணர்வுகளை தட்டியெழுப்பும் வகையில் உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜாவின் இசை மிகப் பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
இந்தப் படத்தை முதலில் இணையத்தளத்தில் மட்டுமே வெளியிடணும்னு நினைச்சிருந்தே. ஆனால் இசைஞானி இசையமைத்த பின்பு தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்யலாமோ என்று தோணியது. இது பற்றி இசைஞானியிடம் சொன்னேன். ஆனால் ராஜா ஸார்தான் ‘இணையத்தளத்தில் மட்டும் ரிலீஸ் பண்ணு. அதுதான் இப்போது இளைஞர்களிடத்தில் அதிகம் சென்றடையும்’ன்னு சொன்னார். அதனால் இந்தப் படம் இணையத்தளத்தில் மட்டுமே வெளியிடப்படும். இந்தப் படத்தைwww.loveandloveonly.movie என்கிற இணையத்தளத்தில் விரைவில் காணலாம்..” என்றார் உற்சாகத்தோடு..!