Tuesday, April 23
Shadow

தன் அம்மா பற்றிப் பேசி கவிஞர் சினேகன் கண்ணீர் : அனைவரையும் கண் கலங்க வைத்த குறும்பட விழா’!

அன்னையர் தினத்தை முன்னிட்டு ‘ஐ லவ் யூ அம்மா ‘ என்கிற
குறும்படத்தின் திரையீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
இக் குறும்படத்தில் கதிர் எலிசபெத்.மோனிஷா செலியன்முத்து.நடித்துள்ளனர்.

S.K.S.கார்த்திக் இயக்கியுள்ளார். விக்ரம் மோகன் ஒளிப்பதிவையும்
சபரி இசையையும் கவனித்துள்ளனர். முகிலன் தயாரிப்பு வடிவமைப்பு
செய்துள்ளார். காந்தி மோகன் பிரதர்ஸ் சார்பில் எஸ்.விஜயமுருகன்
தயாரித்துள்ளார்.
தாய்ப் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு இக்குறும்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் திரையீடு முடிந்ததும் கவிஞர் சினேகன் பேசினார். அவர் பேசும்
போது, “அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். இந்த நேரத்தில் என்
அம்மா பற்றிய நினைவு எழுகிறது. அருகில் இருப்பதால் நம் அம்மா தானே
பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருக்கிறோம் .இழந்த பிறகு
வருத்தப்படுகிறோம். எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள் அம்மாவை இருக்கும்
போதே கவனித்துக் கொள்ளுங்கள். பிறகு என்னைப் போல வருத்தப்பட வேண்டும்.

எங்கள் குடும்பம் பெரியது எங்கள் அம்மாவுக்கு எட்டு பிள்ளைகள். நான்
சென்னை வர அனுமதி கொடுத்தது எங்கம்மா தான்.

‘பாண்டவர் பூமி’ யில் வரும் மனோரமா பாத்திரம் போல பல மடங்கு சிறந்தவர் எங்கம்மா .
எங்க வீடு வழியாக காலையில் வியாபாரத்துக்குப் போகிற பலருக்கும் திரும்பி
வரும் போது மதியம் சாப்பாடு போடுவார் எங்கம்மா.
அதைப் பார்த்து வளர்ந்த நான் இன்று வரை தனியாகச் சாப்பிட்டதில்லை.
நான் இதுவரைக்கும் 3000 பாடல்கள் எழுதிவிட்டேன். ஆனால் ஒன்றைக் கூட
அம்மா கேட்டதில்லை .
நான் சென்னை வந்து வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்தேன்.
அப்போது அண்ணன்கள் கேட்டார்கள் இங்கே நமக்கு இருக்கிற விவசாயத்தைப்
பார்க்காமல் இவன் ஏன் சென்னைக்குப் போய்க் கஷ்டப்பட வேண்டும் என்றார்கள்
. அப்போது அம்மாதான் என்னை ஊக்கப் படுத்தினார். என் புள்ள ஊர்க் குருவியா
இருந்தாலும் உ யரப் பறப்பான் .நீ உனக்குப் பிடிச்ச வழியில் போ கண்ணு
என்று வாழ்த்தினார்.

அப்படிப்பட்ட அம்மா நான் எழுதிய என் ஒரு பாட்டையும் கேட்கவில்லை.
நீ நினைத்த மாதிரி நான் ஆகி விட்டேன். ஆனால் நான் நினைத்த மாதிரி நீ
மகிழ்வதற்குள் போய் விட்டாய். இதை மனதில் வைத்து தான் ‘ராம் ‘படத்தில்
ஒரு பாடல் எழுதினேன். என் அம்மா
2000-ல் இறந்தார். அன்றிரவு எல்லாரும் தூங்கி விட்டார்கள். அம்மாவைத்
தேடி நான் மட்டும் சுடுகாடு போனேன். என்னை அங்கே விடவில்லை.
அழுதேன்.வலித்தது. அதை வைத்து தான் சூரியன் உடைஞ்சிடுச்சு பகலுக்கு என்ன
செய்ய? என்று பிறகு எழுதினேன்.

அன்று இரவு முழுதும் நான் தூங்கவில்லை.
அதுதான் நான் கடைசியாக எங்கள் ஊரில் தங்கிய இரவு. 17 வருஷமாகி விட்டது.
இன்னமும் அங்கு நான் ஒரு நாள் இரவு கூட தங்கியதில்லை. இதுவரை 42
நாடுகள் போய் விட்டேன். 3000 பாடல்கள் எழுதிவிட்டேன். 174 நாடுகளில்
ரசிகர்கள் இருக்கிறார்கள் அம்மா
பார்க்காத என் சந்தோஷம் எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை.” இவ்வாறு
சினேகன் ஆவேசமாக பேசி முடித்த போது அவர் கண்களில் மட்டுமல்ல அரங்கத்தி
லிருந்த அனைவரது கண்களும் ஈரங் கசிந்து கலங்கியிருந்தன.
நிகழ்ச்சியில் பேசிய பலரும் தங்கள் அம்மாவின் தாய்ப்பாச நினைவுகளில் மூழ்கினார்கள். பேய்கள் ஆதிக்கம் செய்யும் தமிழ்ச்சினிமாவில் தாய் பற்றி குறும்படம் எடுத்ததற்காக அனைவரும் குழுவினரைப் பாராட்டி வாழ்த்திப் பேசினார்கள்

நிகழ்ச்சியில் இயக்குநர்கள் ‘லவ் டுடே’ பாலசேகரன் , ‘ராட்டினம்’கே.எஸ். தங்கசாமி , ‘அவள் பெயர் தமிழரசி ‘மீரா கதிரவன் , ‘சதுரன்’ராஜேஷ் பிரசாத் , டப்பிங் யூனியன் தலைவர் கே.ஆர்.செல்வராஜ், சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் சிவன் சீனிவாசன் ,தயாரிப்பாளர்கள் குணசேகரன் ,பெரோஸ்கான் , ராஜா, நடிகர்கள் யோகிராம் , நாகா , கவிஞர் சுவாதி ,நடிகைகள் எலிசபெத் ,நாயகி மோனிஷா மற்றும் குறும்பட க்குழுவினரும் கலந்து கொண்டு பேசினார்கள். நிகழ்ச்சியை கவிஞர் தமிழன் ராகுல் காந்தி தொகுத்து வழங்கினார்.

Leave a Reply