நடிகர் ஜெய்ஆகாஷ் தயாரித்து நாயகனாக நடித்துள்ள படம் ஜெய் விஜயம். இப்படத்தில் அக்ஷயா நாயகியாக நடித்துள்ளார். படத்தின் கதை ஜெய்ஆகாஷ் தனது மனைவி மற்றும் அப்பா, தங்கையுடன் புதிய வீட்டிற்கு குடி வருகிறார். அவருக்கு ஒரு விபத்தில் பழைய விஷயங்கள் ஞாபகம் மறந்துபோய் விடுகிறது இதற்காக மருந்து சாப்பிட்டு வருகிறார். ஒருகட்டத்தில் மனைவி மற்றும் தங்கையின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்க குழப்பி போகும் அவர் உண்மையை கண்டுபிடிக்க நினைக்கிறார். அப்போதுதான் அவர் தனது மனைவியே இல்லை என்றும் தங்கை என்று சொல்லப்படுபவர் தங்கையே இல்லை என்ற உண்மை தெரிய வருகிறது இதனால் அதிர்ச்சி அடைகிறார் ஜெய் ஆகாஷ். ஜெய் ஆகாஷ் யார்? ஏன் அவர்கள் இப்படி நடிக்கிறார்கள் என்பதை சஸ்பென்ஸ் கலந்து சொல்லியுள்ளார் இயக்குனர் ஜெயசதீஷன் நாகேஷ்வரன்.
ஜெய் ஆகாஷ் இன்னமும் இளமை துள்ளலுடன் இருக்கிறார். பழசை மறந்து பரிதவிக்கும் காட்சிகளில் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். படத்தின்கதை ஓட்டத்தை புரிந்து கொண்டு பாடல்களை குறைத்துக் கொண்டது நலம். முதல் பாதியில் என்ன நடக்கிறது என்று பார்வையாளர்களை குழப்பிய வகையில் இயக்குனர் ரசிக்க வைக்கிறார். அதற்காக இரண்டாம் பாதியில் கொடுத்துள்ள தெளிவான விளக்கம் ஏற்றுக் கொள்ள வைக்கிறது. நாயகி அக்ஷயா அழகு தேவதையாக படம் முழுவதும் கிறங்கடிக்கிறார். வழக்கமான நாயகியாக இல்லாமல் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் அதையும் நன்றாக செய்துள்ளார். தங்கையாக நடித்த அட்சயா ரே, இன்ஸ்பெக்டராக நடித்துள்ள ஏசிபி ராஜேந்திரன், விஜய் டிவி பிரபலங்கள் மைக்கேல் அகஸ்டின், திவாகர் ஆகியோரும் படத்தின் ஓட்டத்திற்கு உதவியுள்ளனர்.
சதிஷ் குமாரின் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசை த்ரில்லர் படத்துக்கு தேவையான பரபரப்பை கூட்டியுள்ளது. பால் பாண்டியின் ஒளிப்பதிவு நன்று. படம் முழுவதும் ஆத்மா என்ற பெயரில் புகையை படரவிட்டிருப்பது ஒரு கட்டத்தில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. மணிகண்டனின் எடிட்டிங் ஏமாற்றவில்லை. இது ஒரு சிறு முதலீட்டில் எடுக்கப்பட்ட படம் ஆனாலும் நல்ல கதையை தேர்வு செய்து ஓரளவுக்கு பார்க்கும் வகையில் கொடுத்துள்ளார் ஜெய் ஆகாஷ். அவரின் அந்த தைரியத்திற்கு பாராட்டுக்கள். மொத்தத்தில் ஜெய் விஜயம் – வெற்றி .