Sunday, October 13
Shadow

காஜல் அகர்வாலை நெகிழவைத்த அஜித்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். மேலும் வில்லனாக விவேக் ஓபராய், கருணாகரன், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

இந்நிலையில் ‘கவலை வேண்டாம்’ படத்தை விளம்பரப்படுத்த சென்னை வந்திருந்தார் காஜல் அகர்வால். அவரிடம் அஜித்துக்கு நாயகியாக நடிப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு “என்னால் அவரைப் புகழ்வதை நிறுத்த முடியாது ஏனென்றால் அவர் மீது அதிக மரியாதை வைத்துள்ளேன். அந்த மனிதரைப் பார்த்து மெச்சுகிறேன். அவரது நடிப்புக்கு மட்டுமல்ல, ஒரு மனிதராக அவரிடம் அதிக மரியாதை கொண்டுள்ளேன். அவர் அற்புதமானவர், அவரோட பணியாற்றியதும் அற்புதமாக இருந்தது. அஜித்துடன் படப்பிடிப்பில் இருந்தேன். தொடர்ந்து என்னை காஜல்ஜி என்றே அழைத்தார். நான் அவரிடம், ”உங்களை விட நான் இளையவள். என்னை எதற்கு காஜல்ஜி என்று அழைக்கிறீர்கள். காஜல் என்று கூப்பிடுங்கள் போதும்” என்றேன். அதற்கு அவர் அளித்த பதில் என்னை ஆச்சர்யப்படுத்தியது.

”தனிப்பட்ட முறையில் நான் உங்களை காஜல் என்று அழைக்கிறேன். அதை பெரியதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஆனால், படப்பிடிப்பு தளத்தில் நான் காஜல்ஜி என்றே மரியாதையாக அழைக்கிறேன். ஏனென்றால் இந்தத் துறையில் நாயகர்களையே மக்கள் பின்பற்றுவார்கள். நான் உங்களைக் காஜல்ஜி என்று கூப்பிட்டால்தான் சுற்றியிருப்பவர்களும் காஜல்ஜி என்று மரியாதையாகக் கூப்பிடுவார்கள்” என்றார். அது உண்மையே. எங்களது வேலை சூழலில் அதுதான் சகஜம். அதை நாம் சென்று மாற்றிக்கொண்டிருக்க முடியாது. பிறகு படப்பிடிப்பில் அனைவரும் என்னை காஜல் ஜி என்றே கூப்பிட்டார்கள்.

அஜித், ”துறையில் சில விஷயங்கள் மாற வேண்டும் என நினைக்கிறேன். பெண்களுக்கு உரிய மரியாதை அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்” என்று கூறியதாக காஜல் அகர்வால் தெரிவித்தார்.

Leave a Reply