
கதாநாயகிகள் சிலர், படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி சம்பாதிக்கிறார்கள். ஓரிரு நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடன காட்சியை முடித்து கொடுக்கின்றனர்.
இதற்கு பெரும் தொகையை சம்பளமாக வாங்கிக்கொள்கிறார்கள். ஆனால் மேலும் சில முன்னணி கதாநாயகிகள் ஒரு பாடலுக்கு ஆடுவது இல்லை என்பதை கொள்கையாக வைத்து இருக்கிறார்கள்.
நயன்தாரா ‘சிவகாசி’ படத்தில் விஜய்யுடன் ‘கோடம்பாக்கம் ஏரியா’ என்ற ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். சிவாஜி படத்தில் ரஜினிகாந்துடன் ‘பல்லேலக்கா’ என்ற பாடலுக்கும் நடனம் ஆடினார்.
இதற்காக பெரிய தொகையை சம்பளமாக வாங்கிக்கொண்டார். ஸ்ரேயா, அஞ்சலி, உள்ளிட்ட மேலும் பல கதாநாயகிகளும் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளனர். இதுபோல் முன்னாள் கதாநாயகிகள் மீனா, சிம்ரன், ரோஜா போன்றோரும் ஒரு பாடலுக்கு ஆடி இருக்கிறார்கள்.
தற்போது முன்னணி கதாநாயகிகளாக வலம் வரும் தமன்னா, காஜல் அகர்வால் போன்றோரும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார்கள்.
காஜல் அகர்வால் சமீபத்தில் வெளியான ஜனதா கேரேஜ் என்ற தெலுங்கு படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். இதற்காக அவர் ரூ.1 கோடி சம்பளம் வாங்கிக்கொண்டார். ஆனால் பக்கா லோக்கல் ஐட்டம் சாங் என்பது குறிப்டதக்கது.
மேலும் ஒரு பாடலுக்கு ஆடும்படி அழைக்கும் தயாரிப்பாளர்களிடம் இதே தொகையை கேட்கிறார். நடிகை தமன்னாவை கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிர்மல் குமார் கதாநாயகனாக அறிமுகமாகும் ஜாகுவார் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட அழைத்தனர்.
தமன்னாவும் அதில் ஆட சம்மதித்து ரூ.1 கோடி சம்பளமாக கேட்டார். தயாரிப்பாளர் பேரம் பேசியதில் ரூ.75 லட்சமாக குறைத்துள்ளார்.
இந்த பாடல் காட்சி அடுத்த வாரம் படமாக உள்ளது. இதில் ஆட முதலில் நடிகை சுருதிஹாசனை அழைத்ததாகவும் அவர் மறுத்து விட்டதால் தமன்னாவை ஒப்பந்தம் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கதாநாயகிகளே ஒரு பாடலுக்கு நடனம் ஆட முன் வருவதால், கவர்ச்சி நடன நடிகைகள் வாய்ப்பு இழந்து வீடுகளில் முடங்கி உள்ளனர்.