Saturday, December 10
Shadow

காந்தாரா – திரை விமர்சனம் Rank 4/5

இந்தியாவை கலக்கி வரும் காந்தாரா படத்தின் திரை விமர்சனம்

ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ள படம் காந்தாரா. கன்னட மொழியில் மிகப்பெரிய வெற்றிபெற்ற இந்த படம் தற்போது தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த தனுஷ் முதல் கார்த்தி வரை எல்லோரும் பாராட்டி வருகின்றனர். அப்படி என்னதான் இருக்கிறது இப்படத்தில் பார்க்கலாம்.

கர்நாடக மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மலைக்கிராம பழங்குடி மக்களின் படமாக இது எடுக்கப்பட்டுள்ளது. அவர்களது வாழ்க்கை, குலதெய்வ வழிபாடு, வனத்துறையினர் அவர்களை விரட்ட நினைக்கும் அதிகாரத்துவம், நில அரசியல், நிலச்சுவான்தார்களின் அதிகாரத் திமிர் என சகலத்தையும் இப்படம் பேசுகிறது.

முன்னொரு காலத்தில் ராஜா ஒருவர் ஆண்டு வருகிறார். எல்லாம் இருந்தும் அவருக்கு நிம்மதியே இல்லாததால் நிம்மதியை தேடி ஊர் ஊராக செல்கிறார். அப்படி செல்கையில் ஒரு மலைக்கிராமத்தில் இருக்கும் கடவுளை தனக்கும் வேண்டும் என்று கேட்க அந்த மக்களின் கடவுளோ நான் உன்னுடன் வருகிறேன் ஆனால் இந்த நிலத்தை இவர்களுக்கு கொடுத்து விடு என்கிறது. அதன்படியே ராஜாவும் செய்கிறார். காலங்கள் உருண்டோட அரசரின் வாரிசுகள் அந்த இடத்தை அம்மக்களிடம் இருந்து கைப்பற்ற நினைக்கின்றனர். மேலும் வனத்துறையும் இவர்களது இடத்தை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அவர்களை அப்புறப்படுத்த துடிக்கிறது. இறுதியில் என்ன ஆனது என்பதுதான் காந்தாரா.

இயக்குனர் ரிஷப் ஷெட்டிதான் நாயகனாகவும் நடித்துள்ளார். மிகவும் அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளார். நமது ஊரில் எப்படி ஐய்யனார், கருப்புசாமி போன்ற காவல் தெய்வங்கள் உள்ளதோ அதே போல் அங்குள்ள காவல் தெய்வங்களை குலதெய்வங்களாக வணங்கும் பழங்குடி மக்கள் பற்றிய கதையை தாம் சிறு வயதில் பார்த்து கேட்ட கதையை சிறப்பாக படமாக்கியுள்ளார்.
வனத்துறை அதிகாரியாக நடித்துள்ள கிஷோர் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். அதேபோன்று இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு மணிமகுடமாக உள்ளன. காடு எல்லோருக்கும் பொதுவானது. பல நூறு ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வந்தவர்களை ஆக்கிரப்பு செய்துவிட்டதாக அவர்களை துன்புறுத்தும் அரசு அதிகாரிகள், முன்னோர்கள் தானமாக கொடுத்த நிலத்தை அவர்களின் வாரிசுகள் எப்படி வஞ்சகம் செய்து அபகரிக்க நினைக்கின்றனர். பழங்குடி மக்களின் காவலராக இருக்கும் அரச குடும்பத்து வாரிசு, அப்பகுதி மக்களை தீண்டத்தகாதவர்களாக நடத்துவது, அவர்களை நன்றாக வேலை வாங்கிவிட்டு அடிமை போல் ஆட்டுவிப்பது என அத்தனை அரசியலையும் லாவகமாக படத்தில் இணைத்துள்ளார். அதிலும் கிளைமாக்ஸ் காட்சி மெய் சிலிர்க்க வைக்கிறது. அந்த காட்சியில் ரிஷப் ஷெட்டியின் நடிப்பும் முகபாவனையும் அற்புதம். குல தெய்வ வழிபாடு, கடவுள் நம்பிக்கை, பழங்குடி மக்களின் நம்பிக்கை, அரசின் அத்துமீறல், நிலச்சுவான்களின் காட்டுமிராண்டித்தனம் என அத்தனை விஷயங்களையும் ஒரே படத்தில் நுழைத்து ஒரு அட்டகாசமான படத்தை கொடுத்துள்ள இயக்குனர் ரிஷப் ஷெட்டிக்கு வாழ்த்துகள். கேஜிஎப் பட்டத்திற்கு பிறகு கன்னட சினிமாவிற்கும் சினிமா உலகிற்கும் காந்தாரா ஒரு மைல்கல்.