Saturday, June 22
Shadow

கருமேகங்கள் கலைகின்ற – திரை விமர்சனம் Rank 3.5/5

கருமேகங்கள் கலைகின்றன திரை விமர்சனம்!

இயக்குனர் தங்கர் பச்சான் தனது கருத்தாழமிக்க படைப்புகளால் பெரிதும் போற்றப்படுபவர். தற்போது சிறிய இடைவெளிக்குப்பின் மீண்டும் கருமேகங்கள் கலைகின்றன படத்தின் மூலம் வந்துள்ளார். படத்தை பற்றி பார்க்கலாம்.

பாரதிராஜா ஓய்வுபெற்ற நீதிபதி. நேர்மையாக வாழ்ந்து வருபவர். இவருக்கு மூன்று குழந்தைகள் இருவர் வெளிநாட்டில் செட்டில் ஆக, கௌதம்‌ மேனன் மட்டும் இவருடன் இருக்கிறார். வழக்கறிஞரான கௌதம் மேனன் பணத்துக்காக தனது தந்தை பாரதிராஜா குற்றவாளி என வழங்கிய அரசியல்வாதிக்காக ஆஜராகி வருகிறார். இது பாரதிராஜாவுக்கு பிடிக்கவில்லை.‌ இதனால் ஏற்பட்ட ஒரு பிரச்சனையில் பத்து ஆண்டுகளாக இருவரும் பேசிக்கொள்வது இல்லை. ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார் பாரதிராஜா. யோகிபாபு பரோட்டா கடையில் வேலை செய்து வருகிறார். வளர்ப்பு மகளை தனது மகளாக வளர்த்து வருகிறார். ஒருகட்டத்தில் மகள் பிரிந்து சென்று ஹாஸ்டலில் வளர்கிறார். ஆனால் மகளை பிரிய முடியாத யோகி பாபு மகளை காண புறப்படுகிறார்.‌ பாரதிராஜா மற்றும் யோகி பாபு இருவரும் பேருந்தில் சந்தித்து கொள்கின்றனர். இருவரது முயற்சிகளும் நிறைவேறியதா? கௌதம் மேனன் தனது தந்தையை கண்டுபிடித்தாரா? என்பது தான் கருமேகங்கள் கலைகின்றன படத்தின் கதை.

தங்கர் பச்சான் தனது சிறுகதையை திரைப்படமாக எடுத்துள்ளார். இதில் அப்பா, மகன் உறவு, பெண்களின் வலி, பாசம், என அனைத்து விஷயங்கள் பற்றியும் உணர்வுப்பூர்வமாக பேசியுள்ளார். பாரதிராஜா இப்படத்தை தனது தோளில் தாங்கியுள்ளார். வயதான போதும் நடிப்பில் அருமையாக அசத்தியுள்ளார். குற்றவுணர்ச்சியால் குமுறும் காட்சிகளில் கண்கலங்க வைக்கிறார். கௌதம் மேனன் அப்பாவிடம் சண்டைபோட்டு விட்டு பேசாமல் இருக்கும்போது அவரை பற்றியே நினைத்துக் கொண்டு இருக்கிறார். தனது பேராசையால் செய்த தவறை உணரும் இடத்தில் நன்றாக நடித்துள்ளார். யோகி பாபுவை இயக்குனர்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உருக்கமாக காட்சிகளில் சிறப்பாக செய்துள்ளார். வளர்ப்பு மகளாக இருந்தாலும் பாசம் வைத்துவிட்டதால் மகளுக்காக என்னவேண்டுமானாலும் செய்யும் தந்தையாக கவர்கிறார்.

மற்றபடி படத்தில் நடித்த அதிதி பாலன் உள்பட அனைவரின் நடிப்பும் அருமை. ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் நன்று. பின்னணி இசை படத்தின் ஓட்டத்தை அழகுபடுத்தியுள்ளது. தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பும் நன்றாக உள்ளது. ஆனால் இன்றைய வெட்டு குத்து உலகில் இதுபோன்ற படங்கள் கவனிக்கப்படுமா என்பது சந்தேகமே. மொத்தத்தில் கருமேகங்கள் கலைகின்றன – நமக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது ரேட்டிங் 3.5/5