Thursday, June 1
Shadow

கழுவேத்தி மூர்க்கன் திரை விமர்சனம்! Rank 4/5

கழுவேத்தி மூர்க்கன் திரை விமர்சனம்!

எப்போதும் வித்தியாசமான த்ரில்லர் படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் அருள்நிதி நடிப்பில் தற்போது ஆக்ஷன் படமாக வெளியாகியுள்ளது கழுவேத்தி மூர்க்கன். இப்படத்தின் திரை விமர்சனத்தை பார்க்கலாம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கும் சாதி அரசியல் படம்தான் கழுவேத்தி மூர்க்கன். அருள்நிதி மற்றும் சந்தோஷ் பிரதாப் இருவரும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். அருள்நிதி மேலத்தெரு. சந்தோஷ் பிரதாப் கீழத்தெரு. ஆனால் இருவரும் நண்பர்களாக பழகி வருகின்றனர். சந்தோஷ் பிரதாபுக்கு எதாவது ஒன்று என்றால் அருள்நிதி அவர்களை அடித்து துவைத்துவிடுவார். இந்நிலையில் அந்த ஊரில் ஒரு கட்சியின் மாவட்ட செயலாளராக இருக்கும் ராஜசிம்மன் கட்சி தலைமையிடம் தனது செல்வாக்கை காட்ட ஊரில் மிகப் பெரிய பொதுக்கூட்டம் நடத்த நினைக்கிறார். அதனால் சந்தோஷ் பிரதாப் இருக்கும் இடத்தில் போஸ்டர் ஒட்ட போகும் இடத்தில் பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் பகை ஏற்பட இருவரையும் பழிவாங்க மாவட்ட செயலாளர் நினைக்கிறார். ஒருகட்டத்தில் சந்தோஷ் பிரதாப் கொலை செய்யப்பட்ட பழி அருள்நிதி மீது விழுகிறது. இறுதியில் சந்தோஷ் பிரதாபை கொலை செய்தது யார்? அருள்நிதி மீதான கொலைப்பழி நீங்கியதா? என்பதே மீதிக்கதை.

அருள்நிதி கதைக்கும் தலைப்புக்கும் ஏற்றபடி காளையாக துள்ளித் திரிகிறார் திரையில். அவரது கண்களும் மீசையும் ரௌத்திரத்தை கண்முன் காட்டுகின்றன. படம் முழுக்க முரட்டு ஆளாக துள்ளிக்குதிக்கிறார். அத்தனை பேரையும் அடித்து துவைக்கிறார். இவருக்கும் சந்தோஷ் பிரதாப்புக்கும் இடையேயான நட்பு சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளது. அருள்நிதிக்கு சொல்லிக்கொள்ளும்படியான படம். சந்தோஷ் பிரதாப்புக்கும் தான். துஷாரா விஜயன் நடிப்பில் பின்னி எடுத்துள்ளார். காதல் காட்சிகளில் அத்தனை நெருக்கம். உணர்வுகளை சாதாரணமாக கடத்துகிறார். இன்னும் நிறைய காதல் படங்களில் நடிக்க வேண்டும். இமான் இசையில் கண்ண பாத்தா பாடல் மனசுக்குள் நிற்கிறது. பின்னணி இசையில் இதுபோன்ற ஆக்ஷன் படங்களுக்கு தேவையான இசையை கொடுத்துள்ளார். முனீஸ்காந்த், சாயாதேவி , சரத், பத்மன், யார் கண்ணன் உள்ளிட்டோர் நடிப்பும் படத்துக்கு பலமாக உள்ளது. ஸ்ரீதர் ஒளிப்பதிவு ஆக்ஷன் படத்துக்கு உண்டான காட்சிகளை கண்முன் நிறுத்துகிறது. நாகூரான் ராமச்சந்திரன் எடிட்டிங் நன்று. சாதி அரசியலை சொல்லும் போது சற்று கவனம் தேவை. எந்தவித சமரசமும் இன்றி சொல்ல வந்ததை நேர்கோட்டில் சொல்லி சபாஷ் பெற்றுள்ளார் இயக்குனர் சை. கவுதம் ராஜ். சாதி வெறி பிடித்த அரசியல்வாதிகளால் எப்படி ஒரு சமுதாயம் பாதிக்கப்படுகிறது என்பதை நல்ல திரைக்கதை மூலம் சொல்லியுள்ள இயக்குனருக்கு வாழ்த்துகள்.