Saturday, December 14
Shadow

கட்டில் – திரைவிமர்சனம் (பந்தம் ) Rank 3/5

 

பல படங்களில் நடித்து வளம் வந்து கொண்டு இருந்த நடிகர் கணேஷ் காட்டில் படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். தன் முதல் படத்திலே தரமான கதைக்களம் மூலம் ரசிகர்களை சிந்திக்க வைப்பதோடு ஒரு உணர்வுபூர்வமான படத்தை கொடுத்துள்ளார்.

இயக்குனரும் நடிகருமான ஈவி கணேஷ் பாபு இயக்கத்தில் சிருஷ்டி டாங்கே, இந்திர செளந்தர் ராஜன், கீதா கைலாசம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “கட்டில்”

இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ரவிசங்கரன்.

சில தலைமுறைகளாக மிக பிரமாண்டமான அரண்மனை போன்ற ஒரு வீட்டில் வசித்து வருகிறது கணேஷ் பாபுவின் குடும்பம்.

உடன் பிறந்த அண்ணன்கள், அக்கா வேறு வேறு இடங்களில் செட்டில் ஆகிவிட, தனது அம்மா கீதா கைலாசம், மனைவி சிருஷ்டி டாங்கே மற்றும் 5 வயது சிறுவன் ஆகியோரோடு அந்த வீட்டில் வசித்து வருகிறார். நிறை மாத கர்ப்பிணியாக இருக்கிறார் சிருஷ்டி டாங்கே.

உடன் பிறந்தவர்கள் கோடிகளில் அந்த வீட்டை விற்க முற்படுகின்றனர். வீட்டில் இருப்பவர்கள் மறுக்க, வேறு வழியின்றி வீட்டை விற்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், மிகவும் பழமை வாய்ந்த பெரிய கட்டில் ஒன்று அந்த வீட்டில் இருக்கிறது. தலைமுறை தலைத்தோங்க கட்டில் தான் காரணம் என்ற செண்டிமெண்ட் வைத்திருக்கிறார் கணேஷ் பாபு.

கணேஷ் பாபுவின் மகனும் அந்த கட்டில் மீது அலாதி பிரியம் வைத்திருக்கிறார். இந்நிலையில், வீட்டை காலி செய்த கணேஷ் பாபு அந்த கட்டிலை வைப்பதற்கு ஏற்ற வீட்டினை தேடுகிறார்.

வேறு வழியின்றி தற்காலிகமாக அந்த கட்டிலை ஒரு இடத்தில் வைத்துவிட்டு, வாடகை வீடு ஒன்றில் தனது குடும்பத்துடன் குடியேறுகிறார் கணேஷ் பாபு.

இறுதியில், அந்த கட்டிலுக்கும் கணேஷ் பாபுவிற்குமிடையேயான பிணைப்பு தொடர்ந்ததா.? அவரது வாழ்க்கையில் என்ன நடந்தது .??? என்பதே படத்தின் மீதிக் கதை.

இயக்குனர் என்பதால், தனக்கான காட்சிகளை மிகவும் மெனக்கெடல் செய்து நடித்திருக்கிறார் கணேஷ் பாபு. மூன்று தலைமுறையை காட்டும் காட்சிகளில் இவரே நடித்திருப்பதால், காட்சிகளில் உயிரோட்டம் காணமுடிகிறது.

நாயகி சிருஷ்டி டாங்கே, முதல் முறையாக மிக சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார் குறிப்பாக கர்ப்பிணி பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். வலியால் துடிக்கும் போது பார்ப்பவர்களின் கண்களில் ஈரத்தைக் கொண்டு வந்து விடுகிறார்.

புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பது போல இயக்குனர் பாலச்சந்தர் மகள் கீதா கைலாசம், மிகவும் யதார்த்தமாக நடித்து அசத்தியிருந்தார்.

உணர்வுப்பூர்வமாக நடித்திருந்தாலும், ஆங்காங்கே சில காட்சிகள் மெதுவாக ஊர்ந்து செல்வது போன்று இருப்பது நமக்கு சற்று சோதனையை ஏற்படுத்தி விடுகிறது.

பின்னணி இசை படத்தின் கூடவே அமைதியாக நகர்ந்து செல்கிறது. ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

கட்டிலின் மீதான ஈர்ப்பை இன்னும் சற்று அழுத்தமாகவே பதிவு செய்திருந்திருக்கலாம். இரண்டாம் பாதியில் சிருஷ்டி டாங்கேவின் காட்சிகள் அனைத்தும் மனதை உருக்கி வைத்து விட்டது.