Sunday, December 10
Shadow

கூழாங்கல்’ – திரைவிமர்சனம் (பளபளக்கும் வைரக்கல்)

கூழாங்கல்’ – திரைவிமர்சனம்

அறிமுக இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில், இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோரது தயாரிப்பில், பல சர்வதேச விருதுகளை வென்றதோடு, ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் ‘கூழாங்கல்’. சோனி லிவ் ஒடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது? என்பதை பார்ப்போம்.

தந்தை மற்றும் மகன் இருவருடைய நடைப்பயணத்தை வைத்துக்கொண்டு, இந்தியாவின் தற்போதைய உண்மை நிலையையும், பெருமான்மை மக்களின் நலிவடைந்த வாழ்க்கையையும் அப்பட்டமாக சொல்லியிருப்பதோடு, பல்வேறு பிரச்சனைகளை காட்சி மொழியில் பேசியிருப்பது தான் ‘கூழாங்கல்’ படத்தின் கதை.

கொலை வெறியோடு பேருந்தில் பயணிக்க இருந்த தந்தையின் கோபத்தை புரிந்துக்கொள்ளும் சிறுவன், அவரை ஆள் நடமாட்டம் இல்லாத பொட்டல் காட்டில் நெடுந்தூரம் நடக்க வைத்து, சூரிய வெப்பத்தின் மூலம் அவருக்குள் இருக்கும் வெப்பத்தை தணிய வைக்கிறார். இவர்களுடைய இந்த சூடான நடைப்பயணத்தில், பெரும்பாலான இந்திய மக்களின் வாழ்வியலை மிக அழுத்தமாகவும், அழகாகவும் பதிவு செய்திருக்கிறது இந்த ‘கூழாங்கல்’ திரைப்படம்.

நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் இந்தியாவின் பல பகுதிகளில் மக்கள் தண்ணீர் இல்லாமல் திண்டாடும் அதிர்ச்சிகரமான உண்மையை அமைதியாக சொல்லியிருந்தாலும், படம் பார்ப்பவர்களின் ஆழ் மனதில் பதியும் வகையில் அந்த காட்சிகள் கையாளப்பட்டுள்ளது.

தந்தை வேடத்தில் நடித்திருக்கும் கருத்துடையான், மண்ணின் மைந்தனாக எதார்த்தமான நடிப்பால் கணபதியாகவே வாழ்ந்திருக்கிறார். தனது நடையில் கூட அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

மகன் வேடத்தில் நடித்திருக்கும் சிறுவன் செல்லப்பாண்டி நடிப்பு பற்றி எந்தவித முன் அனுபவமும் இல்லை என்றாலும், முதல் படம் போல் இல்லாமல் நடித்திருக்கிறார். தந்தையின் கோபத்தை பார்த்து மிரண்டு போனாலும் அதை வெளிக்காட்டாமல் தைரியமாக பயணிப்பது, அவரிடம் அடி வாங்கினாலும் எந்தவித உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமல் மெளனமாக இருந்தே பாராட்டு பெறுகிறார்.

இரண்டு கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களுடைய நடைப்பயணம் இதை வைத்துக்கொண்டு சமூக பிரச்சனைகளை பேசியிருக்கும் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ், அவற்றை வசனங்கள் மூலம் விளக்காமல் காட்சி மொழியின் மூலம் விளக்கியிருப்பது, பார்வையாளர்களையும் அந்த கதாபாத்திரங்களுடன் பயணிக்க வைத்திருக்கிறது.

இந்தியா உலக பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று சொல்லப்பட்டாலும், பெரும்பான்மையான மக்கள் இன்னமும் வறுமையில் தான் இருக்கிறார்கள் என்பதை எலிக்கறி சாப்பிடும் காட்சி மூலம் சொல்லும் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ், குறைந்த அளவு சுரக்கும் அழுக்கு படிந்த தண்ணீருக்காக காத்திருக்கும் மகளிர் கூட்டத்தின் மூலம் தண்ணீர் பிரச்சனை இங்கு எந்த அளவுக்கு அதிகரித்து வருகிறது என்பதை எச்சரிக்கையாக சொல்லியிருக்கிறார்.

இப்படி படம் முழுவதும் பல பிரச்சனைகளை பேசி இந்தியாவின் தற்போதைய நிலையை மிக தெளிவாக சொல்லியிருப்பதோடு, படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும், கிராமத்து மனிதர்களின் வாழ்வியல் மற்றும் அவர்களுடைய அன்றாட வாழ்க்கை போராட்டங்கள் என அனைத்து விசயங்களையும் வசனமாக பேசாமல், காட்சிகள் மூலம் சொல்லியிருப்பது படத்தை அணு அணுவாக ரசிக்க வைக்கிறது.

ஒளிப்பதிவாளர்கள் விக்னேஷ் குமுனை மற்றும் ஜெய பார்த்திபன் ஆகியோரது உழைப்பு ஒவ்வொரு காட்சிகளிலும் தெரிகிறது. உச்சி வெளியிலில் கேமராவை சுமந்தபடி பயணப்பட்டிருக்கும் இவர்களுடைய ஒளிப்பதிவின் மூலம் திரையில் தெரியும் சூரிய ஒளியை படம் பார்ப்பவர்களாலும் உணர முடிகிறது.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, பெரும்பாலான இடங்களில் அமைதியே பெரும் பலமாக அமைந்திருக்கிறது.

 

75 நிமிடங்கள் ஓடும் படத்தின் முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை பார்வையாளர்களின் கவனத்தை கட்டிப்போட்டு விடும் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ், கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்கள தேர்வில் அதிகம் மெனக்கெட்டிருப்பது படம் முழுவதிலும் தெரிகிறது. படத்தின் காட்சிகளை நீளமாக வைத்திருந்தாலும் பார்வையாளர்கள் துள்ளியமாக கவனிக்கும்படி நகர்த்தி செல்லும் இயக்குநர் எந்த இடத்திலும் வசனங்கள் மூலம் பேசாமல், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும், காட்சிகளின் சூழல்களையும் பேச வைத்து ரசிகர்களிடம் கைதட்டல் பெறுகிறார்.

 

எந்த படமாக இருந்தாலும் எப்போது இடைவேளை வரும் என்று நேரத்தை பார்க்கும் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்கும் போது நிச்சயம், இடைவேளை என்பதையே மறந்துவிடுவார்கள், அந்த அளவுக்கு படம் நம்மை மகுடிக்கு ஆடும் பாம்பாக மாற்றிவிடுகிறது.

 

மொத்தத்தில், இந்த ‘கூழாங்கல்’ பளபளக்கும் வைரக்கல் .