Tuesday, October 8
Shadow

சர்வதேச திரைப்பட விழாவை நோக்கி பயணிக்கிறது ‘லக்ஷ்மி’ குறும்படம்

தாய் அருகே சேயாகி, தலைவனிடம் பாயாகி, சேயிடம் தாயாகும் உன்னதமான குணங்களை படைத்தவள் பெண்….. இறைவனின் உயர்ந்த படைப்பான பெண் இன்றைய காலக்கட்டத்தில் பல சவால்களையும், தடைகளையும் எதிர்கொண்டு வந்தாலும், அவர்களிடம் ‘ஏன் இட்லி சரியாக வேகவில்லை’, ‘ஏன் சப்பாத்தி வட்டமாக இருக்கிறது’, என்றெல்லாம் கேள்வி கேட்கும் ஆண்கள் இன்னமும் இருக்க தான் செய்கின்றனர்…..அத்தகைய பெண்மணிகளின் மகிமையையும், அவர்கள் கடந்து செல்லும் நேர்மையையும் மையமாக கொண்டு உருவாகி இருக்கும் குறும்படம் தான் ‘லக்ஷ்மி’.

நமது அன்றாட வாழ்க்கையில், நாம் சந்திக்கும் சராசரி பெண்களில் ஒருவர் தான் ‘லக்ஷ்மி’. தன் கணவருக்காகவும், தன்னுடைய மகனுக்காகவும் பம்பரம் போல் சுழன்று பணி புரிந்து, காலையில் சரியான நேரத்திற்கு அலுவலகத்தை சென்றடையும் லக்ஷ்மியின் கதையை மிக அழகாக படமாக்கி இருக்கிறார் இயக்குனர் கே எம் சர்ஜுன். காலையில் குடும்பத்திற்கு சமைக்க வேண்டும், அதற்கு பின் அலுவலக பணிகள், அதனை தொடர்ந்து மீண்டும் குடும்ப பணிகள் என தொடர்ந்து எந்திரம் போல் பணியாற்றும் அந்த பெண்மணியின் வாழ்க்கையில் காதலும், அன்பும் மறைந்து போகிறது… அப்படி இருக்கும் தருவாயில் அவளின் மனம் வேறொன்றை நோக்கி அலை பாய்கிறது….அந்த நேரத்தில் அவள் சமூதாயத்தால் வரையப்பட்டிருக்கும் வட்டத்திற்குள் இருக்க விரும்புகிறாளா அல்லது அவளின் மனம் சொல்லும் பாதையில் செல்கிறாளா என்பது தான் லக்ஷ்மி குறும்படத்தின் கதை.

லக்ஷ்மி குறும்படத்தை ‘பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்’ சார்பில் தயாரித்து இருக்கிறார் திரு ஐ பி கார்த்திகேயன். ஒரு முழு நீள படத்தை தயாரிப்பதற்கு ஏகப்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் இந்த காலக்கட்டத்தில், லக்ஷ்மி குறும்படத்திற்காக தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் கொடுத்து இருக்கிறார் திரு கார்த்திக்… லக்ஷ்மி குறும்படத்தின் வலுவான கதைக்களம் அதற்கு ஒரு காரணம் என்பதை உறுதியாகவே சொல்லலாம். ஏற்கனவே ‘கிரகணம்’ மற்றும் ‘ஜெமினி கணேசனும், சுருளி ராஜனும்’ திரைப்படங்களை இணை தயாரிப்பு செய்திருக்கும் ‘பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்’ நிறுவனம் தற்போது ‘8 தோட்டாக்கள்’ படத்தை இணை தயாரிப்பு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

‘லக்ஷ்மி’ குறும்படத்திற்கு இரண்டு தனித்துவமான சிறப்பம்சங்கள் இருக்கின்றன. ஒன்று, இந்த குறும்படத்தை முழு நீள திரைப்படமாக மாற்ற இயலாது… ‘இந்திய கலாச்சாரத்தின் மீது அக்கறை இல்லாதவன் எடுத்த படம் இது’ என்று எழும் கருத்தே அதற்கு காரணம். மற்றொன்று, இத்தகைய கருத்துக்கள் கொண்ட திரைப்படங்களை பற்றி நாம் யாரும் அதிகமாக பேச மாட்டோம்…..தயாரிப்பாளர்களை கவரக்கூடிய விதத்தில் எங்களின் ‘லக்ஷ்மி’ குறும்படம் உருவாக்கப்படவில்லை…மாறாக இந்திய நாட்டில் நிலவி வரும் ஒரு சிறிய நிலைமையை, சர்வதேச திரைப்பட விழாவிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த ‘லக்ஷ்மி’ என்னும் குறும்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது…

Leave a Reply