Friday, April 12
Shadow

பஞ்சு அருணாசலத்தின் வாழ்க்கை பற்றிய ஆவணப் படம்

சென்னை, ஜனவரி 07, 2017: திரு அருள் புரொடக்‌ஷன்ஸ், தயாரித்துள்ள மிகப்பெரிய டாக்குமெண்டரிப் படம் மகத்தான திரைக்கதாசிரியரும் டைரக்டரும் தயாரிப்பாளருமான பஞ்சு அருணாசலம் அவர்களைப் பற்றியது. இதன் தலைப்பு: `தொட்டதெல்லாம் பொன்னாக்கிய படைப்பாளி`. பஞ்சு அருணாசலம் அவர்கள், தனது அன்னக்கிளி படம் மூலம் 1976-இல் இளையராஜாவை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர்! பஞ்சு அவர்களது டாக்குமெண்டரிப் படம், சென்னை உலகத் திரைப்படவிழாவில் 08.01.2017-இல் ஐநாக்ஸ் திரையரங்கில் திரையிடப்படுகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். கோவா நகரில் 27.11.2016-இல் நடைபெற்ற உலகப்படவிழாவில்- இந்தியன் பனோரமா பிரிவில் இது முதன் முறையாகத் திரையிடப்பட்டு, பரவலான வரவேற்பு பெற்றது. இந்த ஆவணப்படத்தை புளூ ஓஷன் திரைப்பட- தொலைக்காட்சிக் கல்லூரியின் (பாஃப்டா) தலைவர் திரு. கோ.தனஞ்ஜெயன் இயக்கியுள்ளார். சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்ய, ஜே.எஸ். விக்னேஷ் பட்த்தொகுப்பை கவனிக்க, ஒலிப்பதிவு மற்றும் இசையமைப்பை ஷாமந்த் மேற்கொண்டுள்ளார். இந்த ஆவணப் படத்தை லலிதா ஜெயானந்த் –எஸ்.உமா மகேஸ்வரி ஆகியோர் திரு அருள் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளனர்.
பஞ்சு அருணாசலம் அல்லது பஞ்சு என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் இவர், சாதனைகள் பல படைத்த ஒரு படைப்பாளி மட்டுமல்ல. ரஜினிகாந்த் – கமல் ஹாசன் என்ற இரு பெரும் சாதனையாளர்கள் தமிழ் சினிமாவில் உருவாக, தனது எழுத்துகள் மூலம் பெரும் பங்காற்றியவர். இளையராஜாவை அறிமுகம் செய்து ஒரு இசை புரட்சியையே தமிழ் சினிமாவுக்குக் கொண்டுவந்தவர்.

தமிழ் சினிமாவில் பஞ்சுவின் சாதனைகள் மதிப்பு மிக்கது. இவர் 45 திரைப்படங்களுக்குக் கதை எழுதியுள்ளார். 90 திரைப்படங்களுக்கு திரைக்கதை-வசனம் எழுதியுள்ளார். இவற்றில், 70 படங்கள் வெற்றி பெற்றுள்ளன. 50 படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தவை. இது மட்டுமல்ல, 150 திரைப்படங்களில், 300 பாடல்களுக்கு மேல் எழுதியவர், 45 படங்களை தயாரித்தவர். 1958-இல் `கவியரசு` கண்ணதாசனின் உதவியாளராகத் தனது திரைப்பணியை தொடங்கிய பஞ்சு, கடந்த 47 வருடங்களில் சாதனைகள் பல படைத்து, அதை பெரிதாகக் காட்டிக் கொள்ளாமல் இருப்பவர். இசைஞானி இளையராஜாவை சினிமாவுக்கு 1976-இல் தனது தயாரிப்பான அன்னக்கிளியில் அறிமுகம் செய்து இசை புரட்சியை செய்தது இவரது மகத்தான சாதனைகளில் ஒன்று.
இந்த ஆவணப் படத்தில் `இயக்குநர் இமயம்` பாரதிராஜா கூறியது போல “தமிழ் சினிமாவை முதன்முதலில் ஸ்டுடியோக்களுக்கு வெளியே எடுத்துச் சென்று `அன்னக்கிளி` திரைப்படத்தை வெளிப்புறங்களிலேயே படப்பிடிப்பு நடத்தித் தயாரித்ததும் இவர்தான். ரஜினிகாந்த்துக்கு 23 மாறுபட்ட திரைப்படங்களை எழுதி, அவரை ஒரு பெரிய நடிகனாக மாற்றியதும், கமல் ஹாசனை, வெகுஜன மக்களிடம் தனது எழுத்துகள் மூலம் 13 படங்களில் கொண்டு சென்றதும் பஞ்சு அவர்கள்தான்.

இந்த ஆவணப் படம், பஞ்சுவின் சிறு வயது முதல், அவர் கடந்து வந்த பாதை, குடும்பம், அவரது திரைப்படப் பிரவேசம், முதலில் சந்தித்த தோல்விகள் –வெற்றிகள் – சாதனைகள் – அதன் பின் பெற்ற தோல்விகள் – படிப்பினைகள் என அனைத்து விஷயங்களையும் எடுத்துரைக்கிறது. 95 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தில், சாதனையாளர்கள் பலர், பஞ்சுவுடன் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை உணர்வுபூர்வமாக விவரிக்கின்றனர். பஞ்சுவின் திரைப்படங்கள் பலவற்றிலிருந்து காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
பஞ்சுவின் திரைப்படங்களைப் போல, இந்த ஆவணப் படத்தில், 35 பெரிய சாதனையாளர்கள் அவரது படங்கள் பற்றியும், தங்களது வாழ்க்கையில் பஞ்சுவின் பங்களிப்பு பற்றியும் மனம் திறந்து பேசுகிறார்கள். இவர்களின் பங்களிப்பால், இந்த ஆவணப் படம் பெரும் மதிப்பை பெற்றது. குறிப்பாக, `சூப்பர் ஸ்டார்` ரஜினிகாந்த், பாரதிராஜா, மகேந்திரன், வி.சி.குகநாதன், ஜி.என்.ரங்கராஜன், சிங்கிதம் சீனிவாச ராவ், பி.லெனின், கங்கை அமரன், அபிராமி ராமநாதன், கே.ஆர்., கலைஞானம், `முக்தா` வி.சீனிவாசன், ஆர்.சுந்தர்ராஜன், சுந்தர் சி., ஏ.வெங்கடேஷ், அண்ணாதுரை கண்ணதாசன், சி.வி.ராஜேந்திரன், `சித்ரா` லட்சுமணன், சுரேஷ் கிருஷ்ணா, சத்யராஜ், பிரபு, குஷ்பு சுந்தர், ராதிகா சரத்குமார், ஒளிப்பதிவாளர் பாபு போன்றவர்களின் ஆர்வமும், பங்களிப்பும் இந்த ஆவணப் படத்திற்கு மிகப் பெரியது.

இந்த சாதனையாளர்களின் பேட்டிகளும் கருத்துகளும், ஒரு தொலைக்காட்சித் தொடராக, விரைவில் வெளி வர இருக்கிறது. திரையரங்கிலும் வெளியாகவிருக்கும் இந்த 95 நிமிட ஆவணப்படம், தொலைக்காட்சியில் ஒளிபரப்பு முடிந்தவுடன் டிவிடி மற்றும் புளு-&ரே போன்ற மின் தகடுகளின் மூலமும் வெளிவரும்.
தொட்டதெல்லாம் பொன்னாக்கிய ஒரு மாபெரும் சாதனையாளரை பற்றிய இந்த ஆவணப் படம், சினிமாவில் நுழைய நினைக்கும் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதம். சினிமாவில் உள்ளவர்களுக்கு ஒரு படிப்பினை. தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாளியான பஞ்சுவை பற்றிய இந்த ஆவணப் படம் ஒரு புதிய பாதையை உருவாக்கி, பிற சாதனையாளர்களை பற்றியும் ஆவணப் படங்கள் தயாரிக்க ஒரு உந்துதல் தரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

Leave a Reply