Saturday, February 14
Shadow

மருது வீரர்களின் வரலாற்றை உயிர்ப்பிக்கும் ‘மருதிருவர் – A Dance Musical’… சென்னை மேடையில் வரலாறு மீண்டும்!

மருது வீரர்களின் வரலாற்றை உயிர்ப்பிக்கும் ‘மருதிருவர் – A Dance Musical’… சென்னை மேடையில் வரலாறு மீண்டும்!

தமிழகத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த மருது சகோதரர்களின் வீரகதை, இசை–நடனம்–நாடகம் ஆகிய மூன்று கலை வடிவங்களின் சங்கமமாக மேடை ஏற இருக்கிறது. கலைமாமணி மதுரை R. முரளிதரன் உருவாக்கியுள்ள ‘மருதிருவர் – A Dance Musical’ என்ற பிரம்மாண்ட மேடை நிகழ்ச்சி, வரும் பிப்ரவரி 7, 2026 (சனி) அன்று சென்னை சர் முத்தா வெங்கட சுப்பா ராவ் கச்சேரி அரங்கில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கான அறிமுக விழா சென்னை நகரில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் K. பாக்யராஜ், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் மற்றும் செயலாளர் விஜயா தாயன்பன், பத்திரிகையாளர் ராம்ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியின் சிறப்புகளை பகிர்ந்தனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய கலைமாமணி மதுரை R. முரளிதரன், மருது சகோதரர்கள்

ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரத்துடன் போராடிய வரலாற்றை புதிய தலைமுறைக்கு கலை வடிவில் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். கொரில்லா போர் முறையை பயன்படுத்தி ஆங்கிலேய ஆட்சியை பல ஆண்டுகள் சவாலுக்கு உள்ளாக்கிய மருது சகோதரர்களின் வாழ்க்கைப் பயணம், இசை, நடனம் மற்றும் நாடக வடிவில் விரிவாக காட்சிப்படுத்தப்பட உள்ளதாக அவர் கூறினார். மேலும், 70க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் குதிரை, மாடு போன்றவை நேரடியாக மேடையில் இடம்பெற உள்ளன என்பதும் நிகழ்ச்சியின் சிறப்பாக அமையும்.

விழாவில் பேசிய விஜயா தாயன்பன், முரளிதரன் தொடர்ந்து புதுமைகளை முயற்சி செய்து வரும் கலைஞர் என பாராட்டினார். மேடை நிகழ்ச்சிகளில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை இணைத்து பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கி வருவதாகவும், ‘மருதிருவர்’ நிகழ்ச்சி கலை உலகில் புதிய மைல்கல்லாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மறைக்கப்பட்ட வரலாற்று நாயகர்களை வெளிக்கொண்டு வருவது சமூக ரீதியாகவும் முக்கியமான செயல் என அவர் குறிப்பிட்டார்.

பத்திரிகையாளர் ராம்ஜி தனது உரையில், இந்த நிகழ்ச்சி ஒரு கலை நிகழ்ச்சி மட்டுமல்ல; சமூக பொறுப்பையும் கலாச்சார மரபையும் இணைக்கும் முயற்சியாக இருப்பதாக பாராட்டினார். பல துறைகளில் உள்ளவர்களின் கூட்டு உழைப்பால் உருவாகியுள்ள இந்த நிகழ்ச்சி, குடும்பத்தையும் கலைச் சமூகத்தையும் இணைக்கும் பெருமைமிகு முயற்சி என்றும் அவர் கூறினார்.
இயக்குநர் K. பாக்யராஜ் பேசும்போது, மேடை நிகழ்ச்சிகளில் இத்தகைய பரிமாணங்களுடன் டூயல் ரோல் போன்ற சவாலான அம்சங்களை கையாளுவது மிகப்பெரிய சாதனை என குறிப்பிட்டார். வசனம், இசை, பாடல்கள், சண்டைக் காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவமாக இருக்கும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மருது சகோதரர்களாக கலைமாமணி மதுரை R. முரளிதரன் மற்றும் சிவக்குமார் நடிக்கின்றனர். வீரவேலு நாச்சியாராக முரளிதரனின் மகள் காவ்யா நடிக்கிறார். கவிஞர் வைரமுத்து தலைமையில் நடைபெறவுள்ள இந்த மேடை நிகழ்ச்சி, தமிழ் வரலாற்றையும் கலை மரபையும் இணைக்கும் முக்கிய நிகழ்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.