Tuesday, March 18
Shadow

நமது -திரைவிமர்சனம்

சூப்பர் மார்க்கெட்டில் சூப்பர்வைசராக வேலை செய்கிறார் மோகன்லால். இவரது மனைவி கௌதமி, இல்லத்தரசி. இவர்களது மகன் விஷ்வாந்த் கல்லூரியிலும், மகள் ரைனா ராவ் பள்ளியிலும் படிக்கிறார்கள்.

இந்த நான்கு கதாபாத்திரங்களுக்கும் தனித்தனியாக ஒவ்வொரு கதைகள் இருக்கின்றன. தனித்தனியாக பயணிக்கும் இந்த 4 கதைகளும் ஒரு நேர்க்கோட்டில் முடிவதுதான் ‘நமது’ படம்.

சூப்பர் மார்க்கெட்டில் சூப்பர்வைசராக இருந்துகொண்டு, புரோமோஷன் கிடைப்பதற்காக படும்பாட்டை மோகன்லால் இந்த படத்தில் தத்ரூபமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக அவர் பொருந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், டப்பிங்கில் மோகன்லாலின் முந்தைய படங்களைவிட இந்த படத்தில் நிறைய மலையாள சாயல் இருக்கிறது.

100 ரூபாய்க்கும் குறைவாக மளிகை சாமான் எங்கு விற்பனையாகும் என்று ரூ.500 செலவழித்து தேடிப்போய் வாங்குமளவுக்கு ரொம்பவும் அப்பாவித்தனமான குடும்ப பெண்ணாக நடித்திருக்கும் கௌதமி, இப்படத்தில் தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். நடுத்தர வர்க்கத்து பெண்ணாக நடித்திருந்தாலும், இவரது உடையில் மேல் வர்க்கத்து சாயல் இருப்பது நெருடலாக இருக்கிறது.

கௌதமியின் தோழியாக வரும் ஊர்வசியின் குழந்தைத்தனமான நடிப்பு ரசிக்க வைக்கிறது. மோகன்லால்-கௌதமி ஆகியோரின் குழந்தைகளாக வரும் விஷ்வாந்த், ரைனா ராவின் நடிப்பும் ரசிக்கும்படியாக இருக்கிறது.

இயக்குனர் சந்திரசேகர் ஏலட்டி நான்கு விதமான கதைகளை இப்படத்தில் சொல்லியிருக்கிறார். இதில் மோகன்லால் சம்பந்தப்பட்ட கதையை மட்டும் விறுவிறுப்பாக கூறியவர், மற்ற மூன்று பேரின் கதையையும் அந்த அளவிற்கு சொல்ல தவறிவிட்டார். மிகவும் மெதுவாக நகரும் திரைக்கதை படத்திற்கு பெரிய பலவீனமாக இருக்கிறது.

ஆனால், நான்கு கதைகளும் ஒரே புள்ளியில் சந்திக்கும் கிளைமாக்ஸ் சூப்பர். அதேபோல், பொழுதுபோக்குக்கான எந்த அம்சமும் இந்த படத்தில் இல்லை. விறுவிறுப்புடன் கூடிய காட்சிப்படுத்துதல் இல்லாதது படத்தை ரசிக்க முடியாமல் சோர்வடைய வைக்கிறது. வசனங்கள் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.

மகேஷ் சங்கரின் இசை படத்தில் பெரிதாக எடுபடவில்லை. பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி கதையின் ஓட்டத்திற்கு தடை போடும் விதமாகவே இருக்கிறது. ராகுல் ஸ்ரீவத்சவ்வின் ஒளிப்பதிவு காட்சிகளை கலர்புல்லாக காட்டியிருக்கிறது.

மொத்தத்தில் ‘நமது’ நாட்டம் குறைவே.

Leave a Reply