Tuesday, October 8
Shadow

நொடி – திரைவிமர்சனம் Rank 3.5/5

பி மணிவர்மன் இயக்கத்தில் தமன் குமார், வேல. ராமமூர்த்தி, எம். எஸ். பாஸ்கர், ஸ்ரீ ரஞ்சனி, பழ. கருப்பையா, தீபா சங்கர் , நிகிதா, அருண் கார்த்திக், விக்னேஷ் ஆதித்யா, கஜராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று திரை கண்டிருக்கும் திரைப்படம் தான் “ஒரு நொடி”.

படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் கே ஜி ரித்தீஷ். இசையமைத்திருக்கிறார் சஞ்சய் மாணிக்கம்.

மதுரை அழகர் மூவிஸ் & ஒயிட் லாம்ப் பிக்சர்ஸ் சார்பில் அழகர்.ஜி & கே.ஜி. ரத்தீஷ் உள்ளிட்டோர் இந்த படத்தினை தயாரித்திருக்கிறார்கள்.

கதைக்குள் போயிடலாம்…

8 லட்சம் ரூபாய் பணத்துடன் தனது கணவர் எம் எஸ் பாஸ்கர் கடத்தப்பட்டு விட்டதாகவும், கடத்தியவர் பிரபல கந்துவட்டி தொழில் நடத்தும் வேல ராமமூர்த்தி என்றும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கிறார் ஸ்ரீ ரஞ்சனி.

வழக்கை கையில் எடுக்கிறார் படத்தின் ஹீரோ தமன் குமார். எம் எஸ் பாஸ்கர் கடைசியாக எந்த இடத்தில் இருந்தார் என்ற புள்ளியில் இருந்து தனது வழக்கை ஆரம்பிக்கிறார் தமன் குமார்.

தொடர்ந்து அடுத்தடுத்த நபர்களின் மீது சந்தேகப் பார்வையை இன்ஸ்பெக்டர் தமன் குமார் செலுத்துகிறார். இதற்கிடையில், நாயகி நிகிதா மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடக்கிறார்.

இந்த வழக்கையும் கையோடு விசாரிக்கிறார். இந்த கொலைக்கும் எம் எஸ் பாஸ்கர் தொலைந்து போனதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் தனது விசாரணையை தீவிரப்படுகிறார்.

இறுதியில், அந்த கொலையாளி யார்.? எம் எஸ் பாஸ்கரின் நிலை என்ன .?? என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் தமன் குமார், கதையின் கருவை நன்றாக உணர்ந்து தனது கதாபாத்திரத்தை அளவோடு செய்து முடித்திருக்கிறார். கதாபாத்திரத்தின் தேவைக்கு அதிகமான அல்லது குறைவான நடிப்பை எந்த இடத்திலும் கொடுக்காமல் மீட்டராக அளந்து நடித்திருக்கிறார்.

பரபரவென வேகமாக செல்லும் திரைக்கதைக்கு கச்சிதமாக கைகொடுத்திருக்கிறார் தமன்குமார்.

எம் எஸ் பாஸ்கர் மற்றும் வேல ராமமூர்த்தி தங்களது அனுபவ நடிப்பை அளவாக கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்.

கஜராஜ் மற்றும் எம் எஸ் பாஸ்கர் இருவரும் சேர்ந்து பேசும் காட்சிகள் ரசிக்க வைத்தன. ஸ்ரீ ரஞ்சனி மற்றும் நாயகி நிகிதாவின் நடிப்பும் படத்தில் பெரிதாக பேசப்பட்டிக்கிறது.
படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் தங்களின் கதாபாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்கள்.

படம் பார்க்கும் ரசிகர்களை சீட்டின் நுனியில் அமர வைக்கும் வகையிலான கதையை மிகவும் தெளிவாக எடுத்துச் சென்றிருக்கிறார் இயக்குனர்.

சம்பவத்தை செய்தது யார் என்று யாரும் யூகிக்க முடியா வண்ணம் திரைக்கதையை பக்காவாக நகர்த்தி சென்றிருக்கிறார்கள்.

படத்திற்கு ஒளிப்பதிவும் இசையும் பெரிதளவில் கைகொடுத்திருக்கிறது.

சிவசங்கர், ஜெகன் கவிராஜ், உதயா அன்பழகன் உள்ளிட்ட கவிஞர்களின் அழகான தமிழ் வரிகளில் உருவான பாடல்கள் ரசிக்க வைத்துள்ளன.