கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடிக்கும் பிரமாண்ட பட்ஜெட் படம் காஷ்மோரா . இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் நயன்தாரா இளவரசியாக நடிக்கிறார், ஸ்ரீதிவ்யா பத்திரிக்கையாளராக நடிக்கிறார்.
நிகழ்காலம், வரலாற்று காலம் என இரண்டு காலகட்டங்களில் நடக்கும் பேண்டசி கதை. இதில் நிகழ்கால இளைஞர் காஷ்மோராகவும், வரலாற்றுகால கொடூர மன்னன் ராஜ்நாயக்காகவும் கார்த்தி நடிக்கிறார்.
இந்த இரண்டு கேரக்டர்கள் தவிர மூன்றாவது கேரக்டர் ஒன்று கார்த்திக்கு இருக்கிறது. அதை படம் வெளிவரும் வரை சஸ்பென்சாக வைத்திருக்க முடிவு செய்திருக்கிறார்கள். சிவாஜி படத்தில் மொட்டை பாஸ் கேரக்டர் மாதிரி, எந்திரன் படத்தில் கொடூரமான ரெட்சிப் எந்திரன் ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததை போன்று கார்த்தியின் மூன்றாவது கேரக்டர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட்டில் பயன்படுத்தப்படும் பேஸ் ஸ்கேன் டெக்னாலஜி மூலம் இந்த கேரக்டரை உருவாக்கி வருகிறார்கள். கார்த்தியின் முகத்தை 360 டிகிரி கோணத்திலும் பல்வேறு உணர்வுகளை காட்டவைத்து படம் எடுத்து பின்னர் அதனைக் கொண்டு கிராபிக்சிலேயே ஒரு கேரக்டரை உருவாக்குவது.
எந்திரன் படத்தில் சிட்டி கேரக்டரும், மாற்றான் படத்தில் ஒட்டிப்பிறந்த இன்னொரு சூர்யா கேரக்டரும் இப்படித்தான் உருவாக்கப்பட்டது. அதேப்போல உருவாகி வருகிறது கார்த்தியின் கேரக்டர். கோடிக் கணக்கில் செலவு பிடிக்கும் இந்த பணி மும்முரமாக நடந்து வருகிறது.
காஷ்மோரா வில் 90 நிமிடங்களுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகிறது. இதில் 30 நிமிடங்கள் போர் காட்சிகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த பணிகள் கடந்த ஒரு வருடமாக அமெரிக்கா, கனடா உள்ளிட்ட வெளிநாட்டிலும், மும்பை சென்னை, ஐதராபாத்திலுமாக 18 இடங்களில் நடந்து வருகிறது.